நண்பர்களே ! நாம் எண்ணத்தை மொழியாக வெளியிடுகிறோம். நம் எண்ண ஓட்டம் இரண்டு வழிகளில் அமைகிறது. ஒன்று, காரண காரியத்தோடு உலகின் உண்மைகளை அறியத் துடிக்கும் அறிவுவழி. இன்னொன்று உலகையும் வாழ்வையும் சுவைக்கத் துடிக்கும் நம் உணர்வின் வழி. மொழியாக வெளிப்படும் எண்ணம், அறிவின் வழியில் நடந்தால் அது வசனம் (உரைநடை) ஆகிறது. அந்த எண்ணம் உணர்வின் பாதையில் ஓடினால் அது கவிதை ஆகிறது.
ஒரு சான்று காட்டினால் இது இன்னும் தெளிவாக உங்களுக்குப் புரியும்.
‘தீ சுடும்’ என்பது அறிவியல் உண்மை. இப்படிச் சொன்னால் அது வசனம்.
‘தீ இனிது’ என்கிறார் பாரதி. தீ இனிமையானதா? இனிக்குமா? இது அறிவியலுக்கு ஏற்காது. இந்த வார்த்தைகள் அறிவு நிலையில் வெளிப்பட்டவை அல்ல. உணர்வு நிலையில் வெளிப்பட்டவை என்று புரிந்து கொள்கிறோம். இது பல கற்பனைகளை எழுப்புகிறது. எனவே, இது கவிதை.
வார்த்தை, நம் அறிவுடன் மட்டும் பேசும்போது அது வெறும் செய்தியை மட்டும் சொல்கிறது. வசனமாக நின்று போகிறது. வார்த்தை, நம் உணர்வுடன் பேசும்போது உணர்ச்சியைத் தூண்டுகிறது. கற்பனையைத் தூண்டுகிறது. கவிதை ஆகிறது.
இதிலிருந்து நாம் புரிந்துகொள்வது என்ன? வசனம் கவிதை இரண்டிற்கும் இடையில் உள்ள வேறுபாடு வடிவத்தில் இல்லை; பண்பில்தான் உள்ளது.
இந்த உண்மையைப் புரிந்து கொள்ளாதவர்கள் தொன்று தொட்டு இலக்கணங்களால் வரையறுக்கப்பட்ட வடிவங்களில் தான் கவிதை உள்ளது என்று நம்பினர். நம் மொழியில் மட்டும் அல்ல, உலகின் எல்லா மொழியிலும் இந்த நம்பிக்கை வேர் ஊன்றி இருந்தது. வகுக்கப்பட்ட அந்த மரபான யாப்பு வடிவங்களில் எழுதப்படாத எதையுமே கவிதை என்று ஏற்றுக் கொள்ளவில்லை. அமெரிக்காவில் தோன்றிய வால்ட் விட்மன் என்னும் கவிஞன் இந்த மரபை மீறிக் கவிதைகள் படைத்தான். புல்லின் இதழ்கள் என்ற அக்கவிதைகள் உணர்வுடன் பேசின. அதுவரை வசனம் என்று நம்பிவந்த ஒரு வடிவத்தில் அவை கவிதைகளாக, உணர்ச்சி வெள்ளங்களாக வெளிப்பட்ட போதுதான் உலகம் நாம் மேலே கண்ட உண்மையை உணர்ந்தது. வசனம் கவிதை இரண்டிற்கும் உள்ள வேறுபாடு பண்பில்தான் உள்ளது என்பதை ஏற்றது.
பாரதி, வால்ட் விட்மனின் ‘புல்லின் இதழ்கள்’ படித்தார். தமிழின் மரபு ஆன யாப்பு வடிவங்களில் மட்டும் அன்றி, நாட்டுப்புற இசைப்பாடல் வடிவங்களிலும் கவிதை படைத்த உணர்ச்சிக் கவிஞர் அவர், அவரே, ‘புல்லின் இதழ்கள்’ போல் புதிய நடையில் காட்சிகள் என்னும் கவிதைகளை எழுதினார்.
மாறுதல் காலம் என்பதால், பாரதியின் ‘காட்சிகளும்’ விட்மனின் ‘புல்லின் இதழ்களும்’, வசன கவிதைகள் என்ற பெயரில் சுட்டப்பட்டன.
இந்த இரண்டையும் படித்தார் பிச்சமூர்த்தி. அதுவரை சிறுகதை மட்டுமே எழுதிவந்தவர் அவர். அவ்வசன கவிதைகளால் கவரப்பட்டுத் தாமும் கவிதை எழுதத் தொடங்கினார். மரபான கவிதை வடிவங்களில் இல்லாத அக்கவிதைகளை, அன்று இலக்கணம் கற்ற பண்டிதர் பலர் எதிர்த்தனர். அவை கவிதைகளே அல்ல என்று வாதிட்டனர்.
அவற்றின் சொல்லில், நடையில், உள்ளடக்கப் பொருளில் இருந்த புதுமை பலரைக் கவர்ந்தது. 1959-இல் தோன்றிய ‘எழுத்து’ என்னும் இதழில் பலர் புதிதாக எழுதத் தொடங்கினர். அவர்கள் பிச்சமூர்த்தியைப் பின்பற்றினர். தங்கள் கவிதைகளைப் ‘புதுக்குரல்கள்’ என்றனர். அதுவரை ‘வசன கவிதை’ என்று கூறிவந்த பொருந்தாத பெயர் மறைந்தது. ‘புதுக்கவிதை’ என்ற பெயர் பிறந்தது.
இந்தப் புதுமைக்கு விதை போட்டுத் தொடங்கி வைத்தவர் பாரதிதான். உண்மையில் புதுக்கவிதையின் தந்தை அவர்தான். ஆனால் அவர் தொடராமல் விட்டதைத் தொடர்ந்து வளர்த்துச் சிறந்த கவிதைகளை எழுதிக் குவித்த பிச்சமூர்த்திக்கு அந்தப் பெருமை வந்து சேர்ந்துவிட்டது.காலத்தின் வளர்ச்சிக்கு ஏற்றவாறு மாறி வரும் வாழ்க்கையின் புதிய புதிய உள்ளடக்கங்களைத் தானும் ஏற்றுப் புதுக்கவிதை வளர்ந்து வருகிறது.
3.3 பிச்சமூர்த்தியின் கவிதைகள்
இயற்கையையும் வாழ்க்கை அனுபவங்களையும் இணைத்து, அறிவுத் தெளிவுடன் நல்வாழ்வுக்கான தத்துவ உண்மைகளைக் காண முயன்றவர் பிச்சமூர்த்தி. அந்த முயற்சிகளே பிச்சமூர்த்தியின் கவிதைகள்.
இவரது 75 கவிதைகளைத் தொகுத்து 1975-இல் எழுத்து பிரசுரம் வெளியீடாக சி.சு. செல்லப்பா வெளியிட்டார். விடுபட்டிருந்த 8 கவிதைகளைத் தேடிச் சேர்த்து பிச்சமூர்த்தி கவிதைகள் என்ற பெயரில் 1985-இல் க்ரியா வெளியிட்டது. மதிநிலையம் வெளியீடாக 2000 ஆண்டில் ந.பிச்சமூர்த்தி கவிதைகள் என்னும் தொகுப்பும் வெளிவந்துள்ளது.
அறிவின் ஒளியும், உணர்வின் ஓட்டமும் இக்கவிதைகளில் உள்ளன. அழகு நயங்கள் நிறைந்துள்ளன. இரசனைக்கு இனிய விருந்தாக ஆகும் சிறந்த இலக்கியப் படைப்புகள் இவை. இவற்றைப் பற்றி இனி அறிந்து கொள்ளலாம்.
3.3.1 கவிதை பற்றிய கவிதை
காவிரி ஆற்றுக் கரையில் பிறந்து வளர்ந்தவர் பிச்சமூர்த்தி. ஊரின் சிறு குழந்தைகள் ஆற்று மணலைக் குவித்து, நீர் தெளித்துக் குச்சிகளைக் கம்பிபோல் வரிசையாய் அடுக்கிக் கூண்டுபோல் செய்து விளையாடுவார்கள். இதைக் கிளிக்கூண்டு விளையாட்டு என்பார்கள். கூண்டு இருக்கிறது, கிளி எங்கே? கூண்டை அப்படியே விட்டுவிட்டுப் போனால் இரவில் கிளி தானாக வந்து அதற்குள் அடையும்; நாளை வந்து பார்க்கலாம் என்று நம்புவார்கள். குழந்தைகளின் இந்த ஆசையும் கற்பனையும் அழகானவை.
கவிஞரும் ஒரு கிளிக்கூண்டு செய்கிறார்; அதில் வார்த்தைதான் மணல்; ஓசையே நீர்; தீராத தாகமே விரல்; ‘பாட்டு’ என்னும் கூண்டைக் கவிஞரும் அமைக்கிறார். ‘அழகு’ என்னும் கிளி வந்து அடையும் என்று நம்புகிறார்.
மணலில் கூண்டு செய்த குழந்தைகள் அடுத்த நாள் காலை வந்தனர். கூண்டைக் கண்டனர்; கிளியைக் காணவில்லை. இரு குழந்தைகள் வருந்தினர். ‘இரவில் கிளி வந்திருக்கிறது. சிறகை ஒடுக்கிப் பார்த்து இடம் இல்லை என்று பறந்து போய்விட்டது, சுவடுகள் இதோ’ என்றனர். பல குழந்தைகள் ‘கிளியாவது, சுவடாவது! முட்டாள்தனம்,’ என்று பரிகாசம் செய்தனர்.
கவிஞரும் தம் பாட்டு என்னும் கிளிக்கூண்டில் ‘அழகு’ என்னும் கிளி வந்து அடைந்ததா? என்று தேடுகிறார். மணல் கூண்டில் கிளி வந்து அடையுமா? உள்ளத்தின் வேட்கை வார்த்தையில் தோணுமா?.... அழகென்ன மீனா? ஓசையின் தூண்டிலில் சிக்குமா? என்று ஏமாற்றத்தை வெளிப்படுத்துகிறார்.
சில பெரியோர்கள் சொல்கின்றனர்: ‘நன்னூல் தெரியாத நண்பா!.... சொல்லோடு மன்றாடும் அடிமுட்டாள்’ என்று! வயிற்றையும் வாழ்க்கையையும் விட்டுக் காலத்தையும் காசையும் இழக்கின்ற பைத்தியமா என்று அவரைக் கேட்கின்றனர். அவர் மேல் இரக்கம் கொள்கின்றனர். பல சிறியோர்கள் அவரைப் புகழ்கின்றனர்:
தொட்ட வார்த்தையில் தங்கத்தைத் தேக்கினாய்
தொடாத தந்தியில் ஒலியை எழுப்பினாய்
எண்ணாத உள்ளத்தில் எழிலினை ஊற்றினாய்
அழகின் அம்பை வார்த்தையில் பூட்டினாய்
அழகுப் பித்தே வாழ்க
என்று வாழ்த்துகின்றனர். கவிஞர் ஒரு முடிவுக்கு வருகிறார்.
சிறியோர்கள் வார்த்தையைப் போற்றினேன்
பெரியோர்கள் இரங்கலைத் தள்ளினேன்
ஆறுஎங்கும் கிளிக்கூண்டு கட்டுவேன்
அழகினை அழைப்பேன்
எந்நாளும் -
என்று சொல்கிறார். அவரது கிளிக்கூண்டு என்னும் கவிதை இவ்வாறு முடிகிறது.
பிச்சமூர்த்தி தம் இலக்கியப் படைப்புக் கொள்கையாக உலகிற்கு அறிவிக்கும் செய்தியே இந்தக் கவிதை.
இதில் வரும் ‘பெரியோர்கள்’ - கற்றறிந்த பண்டிதர்கள். ‘சிறியோர்கள்’ - இயல்பான படைப்பு ஆற்றல் - கற்பனை ஆற்றல் உடையவர்கள்; புதிய தலைமுறையினர்; இலக்கணம் அறியாதவர்கள். நன்னூல் - தமிழ் இலக்கண நூல். இதைப்பற்றிய குறிப்புத்தான் நமக்கு இந்த இரு பிரிவினரைப் பிரித்து அடையாளம் காட்டுகிறது.
சிறியோர்களோ, ‘உன் சொற்களில் தங்கம் தேங்குகிறது. தந்தியை மீட்டாமலேயே வீணை இசை எழுகிறது. அறிவின் எண்ணம் தோன்றாத உள்ளத்தில் உணர்வாக அழகை நீ ஊற்றுகிறாய். வார்த்தை வில்லாக வளைகிறது, அதில் அம்பாக அழகு பாய்கிறது. உன் முயற்சி வீண் இல்லை’ என்று பாராட்டுகின்றனர்.
கவிஞர் தேடும் அழகு என்ற கிளி அவரது உணர்வின் போக்கில் அமைக்கும் வார்த்தை மணல் கூண்டில் தானாகவே வந்து அடைகிறது. அதைத்தான் அந்தச் சிறியோர்கள் பார்த்திருக்கின்றனர். பிச்சமூர்த்தியோ நிறைவு அற்றவர்; தம் சொல்லில் கவிதை வந்துவிட்டது என்பதை நம்ப மறுப்பவர். இந்தத் திருப்தியின்மையே அவரை மேன்மேலும் வளர்த்தது. தொடர்ந்து வாழ்க்கை என்னும் ஆற்றங்கரையில் கிளிக்கூண்டுகளைக் கட்டிக் கொண்டே இருப்பதும் அழகென்னும் கிளியை அழைப்பதும்தான் தம் வாழ்க்கை என்று அவர் உணர்கிறார்.
‘கவிதை என்னும் அழகு, வார்த்தைகளுக்கோ, வடிவங்களுக்கோ கட்டுப்படாதது; அது எல்லையற்றது’ என்னும் பெரிய உண்மையை உணர்த்துகிறார்.
கொம்பும் கிணறும் என்னும் கவிதை, கவிதையின் வீச்சு, உச்சி வானத்தையும் தொடும்; கிணற்றின் ஆழத்தையும் தொடும் என்று உணர்த்தும் கவிதை.
நாங்களோ கலைஞர் !
ஆமைபோல் உணர்ச்சியின் கிணற்றில் அமிழ்வோம் ; ....
அணிலைப்போல் கொம்பேறி ஒளிக்கனி கடிப்போம்
கொம்பையும் கிணற்றையும் பிணைப்போம்.
3.3.2 வாழ்க்கையும் இயற்கையும்
பிச்சமூர்த்தி இயற்கையில் முழு ஈடுபாடு கொண்டவர். இயற்கையை உற்று நோக்கி அதிலிருந்து வாழ்க்கையைப் படித்துக் கொள்கிறார். துன்பங்களால் துவண்டு போகாமல் வாழும் நம்பிக்கையை வளர்த்துக் கொள்கிறார். நமக்கும் தாம் உணர்ந்ததை அழகிய கவிதையாய் வடித்துத் தருகிறார்.
ஒளியின் அழைப்பு என்னும் கவிதை மிக அழகானது. அதைப்பற்றி இப்பகுதியில் காண்போம்.
வாழ்க்கையில் போட்டி மிக அதிகமாகிவிட்டது. உணவுக்கும், இருப்பிடத்திற்கும், இவற்றைத் தரும் பணத்திற்கும், பணத்தைத் தரும் வேலைக்கும் எங்கும் எதிலும் போட்டி. இருப்பவை மிகக் குறைவு. மக்கள் எண்ணிக்கையோ மிக அதிகம். முந்திக் கொள்பவர்களே பிழைக்க முடியும் என்ற நிலை. இதனால் போட்டி கடுமையாகிவிட்டது. இந்தப் போட்டியில் ஏழையாய், இளைத்தவனாய்ப் பிறந்துவிட்ட ஒருவன் என்ன செய்ய முடியும்?
வாழ்க்கையின் சிக்கல்களுக்கு எல்லாம் தீர்வு சொல்லும் ஆசிரியனாகப் பிச்சமூர்த்தி இயற்கையைத்தான் தேடிப் போகிறார்.
‘அடர்த்தியான பெரிய மரம் ஒன்று. ஒளி, வெளி, காற்று, நீர் அனைத்தையும் தனக்கே எடுத்துக் கொண்டது. நிலத்தையும் பெரும்பகுதி அடைத்துக் கொண்டு படர்ந்து வளர்ந்து நிற்கிறது. ‘பட்டப் பகலில் இரவைக் காட்டும்’ என்று படம்பிடிக்கிறார் அதை! இந்தப் பேராசை பிடித்த மரத்தின் அடியில் உள்ளது சிறிய கமுகு (பாக்கு). இதனால் சத்துக் கிடைக்காமல் வளர்ச்சி இன்றிச் சோனியாக (இளைத்துப்போய்) நிற்கிறது அந்தக் கமுகு. இந்த நிலையில் தன் பிறப்பை - சூழ்நிலையை நொந்து அது செத்துப் போய்விடவில்லை. வாழ்வதற்காகப் போராடுகிறது. தன்னால் இடம் பெயர்ந்து வேறு ஓர் இடத்துக்குச் செல்ல முடியாது என்று தெரியும். அதற்காகத் தளரவில்லை. தன் உடம்பை வளைக்கிறது. மரத்தை, அதன் இருட்டை மீறிக் கொண்டு ஒளியைத் தேடி வான் வெளியில் தலை நீட்டுகிறது, வாழ்கிறது.
கவிஞர் தம்மையும் இந்தக் கமுகையும் ஒப்பிட்டுப் பார்க்கிறார். தாமும் இதன் நிலையில் இருப்பதை உணர்கிறார். பழமையின் இருட்டு; பொய்களின் இருட்டு; ‘உலகம் பொய் சாவுதான் மெய்’ என்னும் மூட வேதாந்தங்களின் இருட்டு. இவற்றுக்கு உள்ளே வளர்ந்ததால் தானும் சோனிக் கமுகாக ஆகிவிட்டதை உணர்கிறார்.
பெருமரத்துடன் போட்டி இடும் சோனிக் கமுகு இவருக்கு ஆசிரியன் ஆகிறது. வாழ்க்கை என்னும் போரை எதிர் கொள்ளும் நம்பிக்கையைப் போதிக்கிறது:
முண்டி மோதும் துணிவே இன்பம்
உயிரின் முயற்சியே வாழ்வின் மலர்ச்சி
என்று உணர்த்துகிறது. மனம் தேறுகிறார். தம்மைப் போல் ‘சோனி’ ஆகிவிட்ட உலக மாந்தர்க்கும் உரைப்பதுபோல், தமக்குச் சொல்கிறார்:
ஜீவா ! விழியை உயர்த்து
சூழ்வின் இருள் என்ன செய்யும்?
அமுதத்தை நம்பு
ஒளியை நாடு
கமுகு பெற்ற வெற்றி நமக்கும் கூடும்
சூழ்வின் இருள் என்ன செய்யும்?
(ஜீவா = உயிர் வாழ்பவனே; சூழ்வு = வாழ்க்கைச் சூழ்நிலை; அமுதம் = (இங்கு) உயிர்தரும் ஒளி)
தளராத ஊக்கத்தையும், தன்னம்பிக்கையையும் இளைஞர்க்குக் கற்பிக்கப் பாடமாக வைக்க வேண்டிய அருமையான கவிதை இது.
மழைஅரசி, காட்டுவாத்து இவையும் நம்பிக்கையின் குரலை நம் மனத்தில் ஒலிக்கும் அழகிய குறுங்காவியங்கள் ஆகும்.
சைபீரியாவிலிருந்து தமிழ்நாட்டில் உள்ள வேடந்தாங்கலுக்குப் பறந்து வருகிறது காட்டுவாத்து. வேடந்தாங்கலில் கூடுகட்டி முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கிறது. அவற்றை வளர்த்தெடுத்து அவற்றுடன், மீண்டு செல்கிறது. இதன் செயல், ‘வாழ்வு எங்கிருந்தாலும் நம்பிக்கையோடு அதைத் தேடிச் செல்’ என்னும் இயற்கையின் செய்தியாகிறது. அறவுரையாகிறது.
3.3.3 காதலும் இறைக்காதலும்
காதல் உயிரின் இயற்கை. உயிர்களின் உலகத்தை இயக்கும் சக்தியே அதுதான். ஒவ்வோர் அணுவிலும் துடித்துக் கொண்டு இருக்கும் ஒரு தவிப்பு அது.
துன்பம் எனும் இன்பம்
காதலர் சேர்ந்து தாகம் தணிவது இனிமைதான். அதைவிட, பிரிந்து தவித்து இருக்கும் கிளர்ச்சியே அதிக இனிமையானது. அந்தத் துன்பமே பெரிய இன்பம்.
இந்த மெய்யுணர்வின் வெளிப்பாடாக அமைந்ததுதான் காதல் என்ற கவிதை. இதுதான் பிச்சமூர்த்தி எழுதிய முதல் கவிதை.
மாந்தோப்பு வஸந்தத்தின் பட்டாடை உடுத்திருக்கிறது
மலர்கள் வாசம் கமழ்கிறது
மரத்தில் இருந்து ஆண்குயில் கத்துகிறது
என்ன மதுரம் ! என்ன துயரம் !
இப்படித் தொடங்குகிறது கவிதை. இளவேனில் காலம். மனிதனிலும் மற்ற உயிர் இனங்களிலும் மட்டும் அல்ல, பயிர் இனங்களிலும் கூடக் காதல் உணர்ச்சி பொங்கும் காலம். மாந்தோப்பு மணப்பெண் போலப் பட்டாடை உடுத்து நிற்கிறது. எங்கும் மலர்கள், காற்றும் வாசனையும் தழுவிக் கிடக்கின்றன. மரத்தில் இருந்து ஆண்குயில் கூவுகிறது. தன் இணையைச் சேர்வதற்காகத் தவிக்கிறது. தவிப்பு அழைப்பாகிறது. அதில், என்ன இனிமை! எவ்வளவு தனிமைத் துயரம்! அந்தக் குரலுக்குள் ஒளிந்திருக்கும் வார்த்தைகள் கவிஞருக்குப் புரிகின்றன.
‘காதல் என்னும் தீயில் நெஞ்சம் கருகுகிறது. காதல் என்னும் நீரை ஊற்றித் தீயை அணைக்க வா’ என்று பெண்குயிலை அழைக்கிறதாம் ஆண்குயில்.
பக்கத்தில் இருக்கும் கொல்லையில் இருக்கிறது பெண்குயில். அது எதிர்க்குரல் கொடுக்கிறது. இந்தக் குரலில் இனிமையை முந்திக் கொண்டு சோகம் ஒலிக்கிறது. என்ன சொல்கிறது?
‘பிரிவின் தனிமை உயிரைத் தீக்கங்கு ஆக்கிவிட்டது. அதை உன் குரல் மூட்டிப் பெரிய தீச்சுடர் ஆக்கி விட்டது.
என் நெருப்பு உன் நெருப்பை அணைக்குமா?
காதல் தீர்வதைவிட இக்கிளர்ச்சியே போதை
இந்தத் துன்பம் தான் இன்பம்!’ என்கிறது.
கவிதையின் மூன்றாவது நிலையில் காதல் தெய்வம் பேசுகிறது. காற்றின் ஒலியில் (குரல் இன்றியே) இது கவிஞருக்கு மட்டும் கேட்கிறது.
ஒன்றுபட்டால் ஓய்வு உண்டாகும் ;
காதல் குரல்கட்டிப் போகும்.....
கிடைத்துவிட்டால் முயற்சி இல்லை. சேர்ந்துவிட்டால் தேடல் இல்லை. தேடல் இல்லையேல் இயக்கம் இல்லை. கற்பனையின் இனிப்பு இல்லை. கசப்புத்தான் மிஞ்சும்.
சேர்ந்துவிட்டால் அழைப்பு ஏது? காதல், குரல் எழுப்பாது; குரல் கட்டி ஊமை ஆகும்.
காதலின் குரல்கள்தாமே கவிதை, இசை, மற்றக் கலைகள் எல்லாம்? எல்லாமே இல்லாமல் போகும்....
கவிதையின் நான்காவது நிலையில் கவிஞரே பேசுகிறார். கவிஞர் மட்டும் பேசுகிறாரா? அவர், காதல் தெய்வம், பெண்குயில், ஆண்குயில் எல்லாம் ஒருவரே ஆகிப் பேசுகின்றாரா என்று பிரித்து அறிய முடியாத பேச்சு :
பிரிவினையின் இன்பம் இணையற்றது
தெரியாமலா ஈசனும் இயற்கையும் ஓடிப் பிடிக்கிறார்கள் !
தெய்வ லீலையை உரக்கச் சொல்லு
க்காவூ........க்காவூஉ........
இப்படி முடிகிறது கவிதை. உலக வாழ்க்கையே ஒரு விளையாட்டுத் (லீலை) தான். கடவுளும் இயற்கையாகிய நாம் எல்லாமும் பிரிந்து, ஒளிந்து கண்டு பிடிக்கச் சொல்லி ஆடும் ஒரு ‘கண்ணாமூச்சி’ ஆட்டம்.
சேருவதில் இன்பம் இருக்கிறது. அது கண்டுபிடித்தவுடன் ஏற்படும் கண நேர மகிழ்ச்சி. அதைவிடப் பிரிவில், தேடுவதில் ஏற்படும் இன்பம் மிகப் பெரியது, இணையற்றது. இதை நன்கு உணர்ந்துதான் இறைவன் நம்மிடம் இருந்து பிரிந்து ஒளிந்து விளையாடுகிறான். ‘இந்தத் தெய்வ விளையாட்டை (லீலையை) உரத்த குரலில் பாடு என்று க்காவூ..... க்காவூஉ’ என்னும் குயில்களின் கூவலோடு கவிதை முடிகிறது.
உண்மையில் பிச்சமூர்த்தி பார்த்தது பூத்த மாந்தோப்பை மட்டும்தான். கேட்டது இணைக்குயில்களின் குரல்களை மட்டும்தான். இவற்றின் உள்ளே இருந்து என்னென்ன உணர்வுகளைப் படித்துவிட்டார்! எத்தனை பெரிய தத்துவத்தைப் படித்துவிட்டார்!.
இயற்கை, வாழ்க்கை, ஆன்மா, இறைவன் இவ்வளவையும் பார்த்துவிட்டார். இவை அனைத்தையும் இணைக்கும் காதல் என்னும் உறவு நிலையை உணர்ந்து விட்டார். அதில் பிரிவுதான் இன்பம் என்ற மெய்யுணர்வை அடைந்து விட்டார். விஞ்ஞானம், மெய்ஞ்ஞானம் இவற்றின் தேடல் எல்லாம் இந்தப் பிரிவால் விளையும் தேடல்கள் தாம் என்று உணர்த்தி விட்டார்.
இந்தக் ‘காதல்’ என்ற முதல் கவிதையில் தொடங்கிக் கடைசியாக எழுதிய தேவை என்ற கவிதை வரை; இவரது 83 கவிதைகளிலும் என்ன பொருள் பொதிந்திருக்கிறது? இயற்கை - மனிதன் - இறைவன்: இந்த உறவு நிலையின் தத்துவச் சாரம்தான் அமைந்து கிடக்கிறது.
தமிழில் கவிதைக்கு இது ஒரு புதுப்பாதை திறந்திருக்கிறது. இதனால்தான் இவரது கவிதை புதுக்கவிதை ஆகியிருக்கிறது.
பெறுவது அன்று, தருவதே காதல்
காதல் என்னும் தலைப்பில் இன்னொரு கவிதையும் படைத்திருக்கிறார் பிச்சமூர்த்தி. காதலியாகத் தம்மைக் கற்பனை செய்து கொண்டு பாடிய கவிதை.
காதலரைத் தெருவில் காண்கிறாள். காதல் பொங்குகிறது. சேர்ந்து இன்பம் காண ஆசை கொண்டு வீட்டுக்கு அழைக்கிறாள். ஒருநாள் காதலர் மனம் கனிகிறார். ‘நாளை வருவேன்’ என்கிறார். தன்னையும் வீட்டையும் தூய்மை செய்து அலங்காரம் செய்து ஆவலுடன் காத்திருக்கிறாள். அவர் வரவில்லை. ஒருநாள் எதிர்பாராமல் வந்து நிற்கிறார் -
எண்ணாத நாள் ஒன்றில்
வந்தார் -
கோடை மழைபோல்
காட்டாற்று வெள்ளம்போல்
வீடெங்கும் குப்பைகூளம்
எங்கிலும் கந்தல் துணிகள்
முகம் எங்கிலும் வேர்வை
கைஎங்கும் சமையல் மணம்
எங்கும் இல்லநெடி
சிறு புகைச்சல்,
ஒட்டடை
வேளை பார்த்தா
நாதர் வந்தார்?
அசடானேன்.
கேட்பது அல்ல காதல்
தருவதுதான் என்று
தரையில் அமர்ந்தார்
என்னைக் காணேன்.
என்று காதலில் இணைவதைப் பாடி முடிகிறது இந்தக் கவிதை. முதல் ‘காதல்’ கவிதையில் இவர் காட்டிய பிரிவின் தத்துவம்தான் இதில் இணைவின் தத்துவம் ஆகக் கவிதை ஆகி இருக்கிறது. நண்பர்களே! முரண்பாடு இருப்பதுபோல் தோன்றுகிறதா? முரண்பாடு இல்லை. கண்ணாமூச்சியில் ‘தேடும் இன்பத்தை’, கிளர்ச்சியை முதல் கவிதை உணர்த்துகிறது. தேடி, எதிர்பாராமல் கண்டு பிடித்தவுடன் கிடைக்கும் ‘கூடும் இன்பத்தை’ இந்தக் கவிதை உணர்த்துகிறது. விளையாட்டு தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ‘என்னைக் காணேன்’ என்ற தொடரைக் கவனியுங்கள். அவர் வந்து சேர்ந்தபின் ‘தான்’ காணாமல் போகிறது. காதலில் மறுபடி ஆன்மிகம் கலக்கிறது. தன்னை மறந்தாள் தன்நாமம் கெட்டாள் என்ற திருநாவுக்கரசரின் ஆன்மக் காதல் உணர்வை இங்கும் காண்கிறோம். (திருவாரூர்த் திருத்தாண்டகம், 6501)
பிரிவு ஏது?
சிணுக்கம் என்னும் கவிதையில் இந்த நுணுக்கம் விளக்கம் பெறுகிறது. இதுவும் பிரிவு பற்றியது தான். ஊருக்குப் புறப்பட்டால், உறவினர் வண்டிப் படி அருகே ‘மதகு நீர்ச் சுழல் போல்’ தயங்கி விடை பெறுகின்றனர். வேலைக்குப் போகும் மகன் ‘போய் வாரேன் அம்மா’ என்று விடை பெறுகிறான். குளத்தின் சிறு அலைகூடக் கரை ஓரப் படியிடம் ‘சிறுமூச்சு’ விட்டு விடை பெறுகிறது. ‘நீ மட்டும் விடைபெறுவது இல்லை. கல்லா நீ’ என்கிறாள் தலைவி. இதற்குத் தலைவன் பதில் சொல்கிறான் : (இவர்களுக்கு வேலைக்குச் செல்லும் வயதில் மகன் இருக்கிறான்!)
"அடி கிறுக்கே !
சென்றால் அன்றோ விடைபெற வேண்டும்
போனால் அன்றோ வரவேண்டும்?
என்உயிர் என்னிடம்
இல்லாது இருக்கையில்
இருவர் ஏது?......
வீட்டில் இருந்தும்
என்னுடன் வருகிறாய்
வெளியே சென்றாலும்
உன்னுடன் இருக்கின்றேன்
கிறுக்கே” என்றேன்
சிணுக்கம் சிரிப்பாச்சு -
இதுவும் கூடக் கண்ணாமூச்சி விளையாட்டின் இன்னொரு பரிமாணம் தான். பிரிதல், சேர்தல் என்பவை கூட இன்பம் தரும் இந்த விளையாட்டு வசதிக்காகச் செய்து கொண்ட ஒரு ஏற்பாடுதான். உண்மையில் நீ, நான் இரண்டும் வேறல்ல. ஒன்றுதான். ஆன்மிக நெறியில் இதை இரண்டற்ற நிலை (அத்துவிதம்) என்பார்கள். இதைத்தான் இனிய காட்சிப் படிமமாகச் சொல் ஓவியம் தீட்டியிருக்கிறார் பிச்சமூர்த்தி.
காதலை நினைக்கும் போது ஆன்மக் காதலையும் இணைத்தே நினைக்கிறார் என்பதை இந்தக் கவிதைகள் நமக்கு உணர்த்துகின்றன.
3.4 இக்கால உலகியல்
நண்பர்களே ! இயற்கையிலும் காதலிலும் பிச்சமூர்த்தி கண்ட வாழ்வியல் தரிசனங்களை, ஆன்மிக இணைவை இதுவரை கண்டோம். தற்கால வாழ்வியலில் - உலகியலில் அவரது பார்வை பற்றி இனி அறியலாம்.
இயற்கையின் சீரான இயக்கம், அழகு, தூய்மை இவற்றில் ஆழ்ந்து கரையும் மனம் பிச்சமூர்த்தியின் கவிமனம். இவரது ஆன்மிகமாகவும் இதுவே இருக்கிறது.
மனிதனின் சுயநலம், பொருள் தேடும் பேராசை இவை உலகத்தின் இனிமைகளைச் சிதைக்கின்றன. இவற்றின் மீது அவருக்கு எல்லை இல்லாத வெறுப்பு எழுகிறது. வெறுப்பை நெருப்பாக உமிழாமல் கேலி செய்யும் சிரிப்பாக வெளிப்படுத்துவது கவிஞனின் தனி இயல்பு. கேலியாக, பரிகாசம் தொனிக்க, நையாண்டி செய்து சுட்டிக் காட்டும் கவிதைக் கலை ‘அங்கதம்’ எனப்படும். பிச்சமூர்த்தியின் அங்கதம் தனித்தன்மை வாய்ந்தது.
3.4.1 கள்ளச் சந்தை
காந்தியின் தூய வாழ்க்கையால் கவரப்பட்டவர் பிச்சமூர்த்தி. சமூக வாழ்வில் எளிமை, நேர்மை, ஒழுக்கம், மனித நேயம், சேவை இவை இவர் வியந்து பின்பற்றிய காந்திய நெறிகள். சிறுமை கண்டு பொங்கும் நெஞ்சம் இவருடையது. ‘வாழ்வில் பெரும் செல்வத்தைத் தேடிக்கொள்ள எந்தக் கெட்ட வழியையும் பின்பற்றலாம்’ என்னும் ‘பிழைப்பு வாதத்தை’ இவர் கடுமையாக வெறுக்கின்றார்; எதிர்க்கின்றார். பெட்டிக் கடை நாரணன் என்ற அங்கதக் கவிதையாக இந்த எதிர்ப்பு உணர்வு வெளிப்பட்டு உள்ளது.
உலகப் போர்க் காலத்தில் வளர்ந்த ‘கள்ளச் சந்தை’ வணிகம் பற்றியது இக்கவிதை. போரின் விளைவால் உற்பத்தி, போக்குவரத்து இவை பாதிக்கப்பட்டு உணவு போன்ற பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது. பேராசை கொண்ட வணிகர்கள் பொருள்களைப் பதுக்கி வைத்து, மறைவாக மிக அதிக விலைக்கு விற்றுக் கொள்ளை லாபம் சம்பாதித்தனர். மேலும், கலப்படம் செய்தும் மக்களை ஏமாற்றினர். இதற்குக் கள்ளச்சந்தை என்றும் கறுப்புச் சந்தை என்றும் பெயர். அரசாங்கம் இந்தக் கொள்ளைக்காரர்களிடம் இருந்து மக்களைக் காப்பாற்றப் பங்கீட்டுக் கடை (ரேசன் கடை)களை ஏற்படுத்தியது. அந்தக் கடை உரிமை பெற்ற வணிகர்களும் இந்த வகைக் கொள்ளை வியாபாரத்தில் ஈடுபடத் தொடங்கிவிட்டனர். இந்தக் கொடுமையைப் பொறுக்க முடியாமல் பிச்சமூர்த்தி படைத்த கவிதைதான் ‘பெட்டிக்கடை நாரணன்’.
முதலில் பெட்டிக்கடை வைத்த நாரணன் அரசாங்க அதிகாரி ஒருவர் தயவால் பங்கீட்டுக் கடை உரிமம் பெற்றான். அரிசியுடன் களிமண் உருண்டை கலப்படம் செய்தும், மண்ணெண்ணெயைக் ‘கறுப்பில்’ விற்றும் கொள்ளை இலாபம் அடைந்தான். தன்செயலை நியாயப்படுத்திப் பேசுகிறான். கவிஞர் நையாண்டியாய்ப் பேசுகிறார் :
மண்ணெண்ணெய் வர்ணம்
இரண்டுதான் என்றாலும்
மஞ்சளும் வெளுப்பும்
என்றாலும், பலபேர்கள்
கறுப்புஎன்று கதறினர்...
பாவமான கலப்படத்தை நியாயப்படுத்தி அவன் பேசும் பேச்சும் பரிகாசமாய் வெளிப்படுகிறது :
பாவம் ஒன்று இல்லாவிட்டால்
பார் உண்டா?
பசி உண்டா?
(பார் = உலகம்)
மண்ணில் பிறப்பதற்கு
நெல் ஒப்பும்போது
களிமண்ணில் கலந்திருக்க
அரிசி மறுப்பது இல்லை....
நட்சத்திரம் போல
நல்முத்துப் போல
சுத்தமாக அரிசிவிற்க
பங்கீட்டுக் கடைஎன்ன
சல்லடையா?
முறமா?.....
மூட்டை பிரிக்கும் முன்னர்
முந்நூறு பேர் இருந்தால்
சலிப்பது எங்கே?
புடைப்பது எங்கே?
புண்ணியம் செய்யத்தான்
பொழுது எங்கே?
அங்கயற் கண்ணியின்
அருள் என்ன சொல்வேன் !
பங்கீடு வாழ்க !
பாழ்வயிறும் வாழ்க !
வாழ்வில் தினமும் நடப்பதை அப்படியே இலக்கியமாய் ஆக்குவதை ‘நடப்பியல்’ என்பர். பேச்சு நடையில் நடைமுறை வாழ்க்கையின் புதிய கோலங்களை நேராகப் பேசுகிறார். கற்பனையும் உவமை உருவக அணிகளும் இருந்தால்தான் அது கவிதை என்ற பழமையான கருத்தை உடைத்து விட்டது இந்தப் புதுக்கவிதை.
‘இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க்கவிதை வரலாற்றில் ‘பெட்டிக் கடை நாரணன்’ முக்கியமான கவிதை’ என்கிறார் புகழ்பெற்ற இலக்கியப் படைப்பாளியான சுந்தர ராமசாமி.
3.4.2 விஞ்ஞானம்
கடவுளின் இயற்கைப் படைப்பு, மனிதனின் செயற்கைப் படைப்பு இரண்டில் எது உயர்ந்தது? விஞ்ஞான அறிவு இயற்கையை வெல்கிறது, ஆனால் அருள் இல்லாத அறிவு, அழிவுக்கே கொண்டு செல்லும் என்கிறது பிச்சமூர்த்தியின் கவிஉள்ளம்.
விஞ்ஞானியின் பக்கம் நின்று அவன் சாதனையைப் புகழ்வதுபோல் பழிக்கிறார் பிச்சமூர்த்தி. இதை ‘வஞ்சப் புகழ்ச்சி அணி’ என்று பழைய கவிமரபு சொல்லும். இந்த அங்கதக் கவிதை பிச்சமூர்த்தியின், இயற்கை பற்றிய உயர்ந்த மதிப்பீட்டைக் காட்டுகிறது. நகைச்சுவை உணர்வுக்குச் சான்றாகிறது.
கடவுளால் என்ன முடியும்?
புல்லைச் செய்வார்
மேய என்று மாட்டைச் செய்வார்
பொங்கும் நுரைப் பாலைச் செய்வார்
ஊட்ட என்று கன்றைச் செய்வார்
விஞ்ஞானி சொல்கிறான்: ‘நாங்கள் புல்லுக்குப் போட்டியாகக் கிருமிக் குண்டு செய்வோம்; வைக்கோலில் தோல் கன்று செய்து மாட்டைப் பால்சுரக்கச் செய்வோம்; உணவுச் சத்துகள் செய்து உழைப்புக்கே ஓய்வு தருவோம்; ஆண்பெண் சேர்க்கை இன்றி உயிரை உற்பத்தி செய்யும் முறையைக் கண்டு பிடிப்போம்; கோள்களில் தளம் அமைப்போம்’ என்று தன் பெருமையை ஆணவத்துடன் பேசுகிறான்.
அருள் என்னும் ஜால வித்தை
செலாவணி ஆகா தய்யா
மடமையால் உலகைச் செய்தால்
அறிவினால் களைதல் தவறா?
இறைவன் படைத்த இயற்கை மடமையில் இயங்குகிறதாம். விஞ்ஞானி அறிவு கொண்டு அதைத் திருத்துகிறானாம் ! ‘அருள்’ ஒரு மந்திரவித்தை. இனி அது உலகிற்குப் பயன்படாது என்று சொல்கிறான். விஞ்ஞானத்தைப் பெருமைப் படுத்துவதுபோல் கவிதை முடிகிறது. உண்மையில் முடியவில்லை தொடங்குகிறது. நம் சிந்தனையை எழுப்புகிறது. இயற்கை படைக்கிறது; செயற்கை - அறிவியல் அழிக்கிறது. இந்த அழிவுச் சக்தியின் இழிவைப் புகழ்வதுபோல் அங்கதமாகப் பழிக்கிறார். விஞ்ஞானம் அழிவுக்குப் பயன்படக் கூடாது என்பதே கவிஞரின் நோக்கம்.
3.5 உருவகமும், படிமமும்
‘உவமை, உருவகம் போன்ற அலங்காரங்களை மறுத்து, உண்மை, உலகியல் இவற்றையே இனிக் கவிதையின் இயல்பான அழகாகக் கொள்ள வேண்டும்’ -இது புதுக்கவிதையின் முக்கியப் பண்பு. எனவே படைப்பவன் கவிதையில் இவற்றைத் தேடி அணிவிப்பதும், படிப்பவன் தேடி அனுபவிப்பதும் தவறு. இது நல்ல கவிதைப் படைப்புக்கு அழகு அல்ல என்பது தான் புதுக்கவிதையின் கோட்பாடு.
ஆனால் மொழி இயற்கையிலேயே உவமை, உருவகம், படிமம் (உருக்காட்சி) இவற்றைத் தனக்குள் கொண்டிருக்கிறது. இதனால் இவற்றை முற்றிலும் விலக்கிவிட்டு ஒரு மொழி இயங்க முடியாது. மொழியின் முழு மலர்ச்சியான கவிதையால் எப்படி இயங்க முடியும்?
நண்பர்களே ! இதுவரை பார்த்த பிச்சமூர்த்தி கவிதைகளில் பல முழுக்கவிதைகளே உருவகமாகவும், படிமமாகவும் இருப்பதைக் காணலாம். ஒருமுறை திரும்பப் பாருங்கள். நல்ல உவமைகளும், உருவகங்களும் கவிதையோடு கலந்து நிற்பதைக் காண்பீர்கள்.இன்னும் சில சான்றுக்காக இங்குத் தரப்படுகின்றன.
உருவகம்
சொல் என்னும் கவிதையில் சொல்லை உருவக அடுக்காக வருணிக்கிறார். அதன் முரண்பட்ட இரட்டைத்தன்மையை, அது தரும் ஏமாற்றத்தை, சமயங்களில் அதன் பயனின்மையை - ஒரு கவிஞனின் அனுபவமாகத் தருகிறார்.
சொல் ஒரு சூது
இருபுறமும் ஒடும்
காக்கைக் கண்
இருமுகம் தெரியும்
பேதக் கண்ணாடி
காம்பில் படாமல்
மரத்தில் தாக்கி
மூர்க்கமாய்த் திரும்பிவரும்
எறிகல்
உண்மை என்று
ஒருதலை கடிப்பதை
மாயை என்று மறுக்கும்
இருதலைப் பாம்பு
படிமம்
தேவை என்னும் கவிதையில் சடுகுடு விளையாட்டு ஒரு படிமமாகிறது.
விலைப் புள்ளியும்
பஞ்சப் படியும்
விளையாடும் சடுகுடு
விலைப்புள்ளிக்கு ஏற்றாற் போல, ஊழியர்களின் பஞ்சப்படி ஏறும்; இறங்கும். இதை இரண்டுக்கும் இடையிலான சடுகுடுவாகக் காண்கிறார்.
இப்படிப் பல உருவகங்களை, படிமங்களை இவர் நூல் முழுக்கக் காணமுடியும்.
நண்பர்களே ! இவற்றால் என்ன புரிந்து கொள்கிறோம்?
எதுகைக்கும் மோனைக்குமாகச் சொற்களை வலிந்து கையாளுவது; உவமை உருவகம் என்று கவிதைப் பொருளோடு பொருந்தாமல் செயற்கையாகக் கையாளுவது - இவற்றையே பழமை என்று தள்ளுகிறார் பிச்சமூர்த்தி. கவிதையின் பொருளோடு இயைந்த இந்த எழில் நலங்களைத் தம் கவிதை முழுக்கத் தேவைக்கேற்பப் பயன்படுத்தியிருக்கிறார்.
3.6 உள் உணர்வின் வெளிப்பாடு
அறிவு மட்டுமே நம் வாழ்க்கையையும் உலகையும் வழிநடத்துகிறதா? இந்தக் கேள்விக்குக் கலைஞர்கள் கூறும் விடை ‘இல்லை’ என்பதுதான். உள் உணர்வுதான் வழி நடத்துகிறது என்றுதான் எந்த உயர்ந்த கலைஞனும் சொல்வான். ந.பிச்சமூர்த்தி உயர்ந்த கலைஞர். சிறந்த கவிஞர். நமக்குள் உறங்கிக் கிடக்கும் உள்ளுணர்வை - மெய் உணர்வை விழிக்க வைக்கக் குரல் எழுப்புவதே இவரது தொழிலாக இருக்கிறது. அந்தக் குரலே இவரது கவிதையாக இருக்கிறது.
காட்டுவாத்து குறுங்காவியம் இதை அழகாக வெளிப்படுத்துகிறது -
சுயநலத்தைப் பொதுத்தொண்டு ஆக்கும்
ஜாலக் கண்ணாடி வித்தை
காட்டநான் பாடவில்லை
பழவேதப் படையை ஓட்டி
லோகாயத வேதப் படையின்
தமுக்காய் ஒலிக்க நான்
தரணியில் அதிரவில்லை
மனுக்கால வெள்ளம்போச்சு
மார்க்ஸ்கால வெள்ளம்போகும்
பூமித்தாய் கருணை வெள்ளம்
எக்காலும் வழியாது ஓடும்
இயற்கையின் ஓயாத் தானம்
உயிர்களின் ஒழியா உழைப்பு
செயற்கையின் சிலுப்பல் இடையே
மலையாக உயர்ந்து நிற்கும்
(பழவேதம் = பழைய வேதங்கள்; லோகாயதம் = உலக வாழ்வியல்; தமுக்கு = வெற்றி முரசு; எக்காலும் = எப்போதும்; தானம் = கொடை, வழங்கல்)
காட்டுவாத்து - பறந்துவரப் பாதை இல்லை, பார்த்துவர வரை படங்கள் இல்லை. பிழைதிருத்த அதற்குப் பகுத்தறிவு இல்லை ; பறக்கும் சாத்திரம் பற்றிய படிப்பு அறிவு இல்லை. சைபீரியாவை விட்டு மூவாயிரம் மைல் தாண்டி வேடந்தாங்கலுக்குப் பறந்து வருகிறது. கூடுகட்டி முட்டையிட்டுக் குஞ்சை வளர்த்துவிட்டுத் திரும்பிப் போகிறது. தன் இனத்தைப் பேணும் உணர்வில்,
நெறியோ நீதியோ
நீண்ட கதைகளோ
கலாச்சார மரபோ, மமதையோ
புகட்டாத மெய்யுணர்வால்
மூவாயிரம் கல்தாண்டி
இங்குவந்த பறவைச் சத்தம்.....
(மமதை = ‘நான்’ என்னும் அகந்தை; வேடந்தாங்கல் = தமிழ்நாட்டில் இருக்கும் பறவைகள் சரணாலயம்)
பிச்சமூர்த்தியின் பாட்டுச் சத்தமும், இந்தப் பறவையின் சிறகுச் சத்தமும் வேறு அல்ல.
‘மெய்யுணர்வை எழுப்பிடும் ‘காட்டு வாத்து’ ஆகிச் சிறகை விரித்துவிட்டால் வாழ்வும் வேடந்தாங்கல் ஆகும்’ என்கிறார் இந்தக் கவிஞானி.
பொங்கல் கவிதையில் இறுதியில் இதே அறிவுரைதான் கூறுகிறார்:
பொங்கல்இடு தன்னலத்தை
பொங்கவிடு உள்உணர்வை
வாழ்வியல் பற்றிய இவரது கவிதைக் கோட்பாடு இதுதான்! நண்பர்களே! ந.பிச்சமூர்த்தி கவிதை தமிழ்க்கவிதை வரலாற்றில் ஒரு புதிய திருப்பம் என்பதை இதுவரை கண்ட சில சான்றுகளால் உணர்ந்திருப்பீர்கள். அவரது கவிதைகளை, முழுதும் ஆழமாக விரித்துரைக்க இப்பாடப் பகுதியில் இடமில்லை. நூல் தேடிப் படித்துச் சுவையுங்கள்.
3.7 தொகுப்புரை
இதுவரை ந. பிச்சமூர்த்தியின் கவிதைகள் பற்றிய சில செய்திகளை அறிந்திருப்பீர்கள். இந்தப் பாடத்திலிருந்து என்னென்ன செய்திகளை அறிந்து கொண்டீர்கள் என்று நினைவுபடுத்திப் பாருங்கள் :
- ந. பிச்சமூர்த்தி என்னும் கவிஞரைப் பற்றித் தெரிந்து கொள்ள முடிந்தது.
- அவரது கவிதைகள் பற்றி அறிந்துகொள்ள முடிந்தது.
- மரபில் இருந்து விலகித் தமிழில் புதுக்கவிதை தோன்றுவதற்குப் பிச்சமூர்த்தி ஆற்றிய பங்கு பற்றிப் புரிந்துகொள்ள முடிந்தது.
- அவரது கவிதைகளில் பாடப்பெறும் பொருள்கள் பற்றித் தெரிந்துகொள்ள முடிந்தது.
- பிச்சமூர்த்தியின் படைப்புக் கலைத்திறன்கள் பற்றிப் புரிந்துகொள்ள முடிந்தது.
- பிச்சமூர்த்தியின் வாழ்வியல் பற்றிய பார்வையை உணர்ந்துகொள்ள முடிந்தது.
- ‘பெட்டிக்கடை நாரணன்’ என்னும் கவிதை எந்தச் சமூக இழிவுகளை எள்ளி நகையாடுகிறது? கலப்படம், கறுப்புச்சந்தை வணிகம்.
- ‘விஞ்ஞானி’ என்ற கவிதை எதை உணர்த்துகிறது? அருள் இல்லாத அறிவு அழிவுக்கே கொண்டு செல்லும் என்பதை உணர்த்துகிறது.
- ‘காட்டுவாத்து’ என்ன விளைவை ஏற்படுத்துகிறது? உறங்கும் நம் உள்உணர்வை - மெய்யுணர்வைத் துயில் எழுப்புகிறது.
- பிச்சமூர்த்தி கவிதைகளின் வாழ்வியல் பற்றிய கோட்பாடு என்ன? தன்னலத்தை அழித்துவிடு, உள்உணர்வை எழுப்பிவிடு.
- ‘புதுக்கவிதை’ என்ற பெயர் பெறுவதற்கு முன், அது என்ன பெயரால் அழைக்கப்பட்டது? வசன கவிதை.
- காதலில் அதிக இன்பம் எதில்? இணைவதிலா? பிரிவதிலா? பிரிவதில்.
- பிச்சமூர்த்தி எந்த இயற்கைப் பொருளைப் பார்த்துத் தன்னம்பிக்கைப் பாடம் கற்றார்? சோனிக் கமுகு - இளைத்த பாக்கு மரத்தை !
- பிச்சமூர்த்தியின் ‘கிளிக்கூண்டு’ என்பது எதைக் குறிக்கிறது?
- கவிதையின் வடிவத்தை !