Tuesday 26 December 2017

வீரமாமுனிவர்

திருக்குறள், தேவாரம், திருப்புகழ், நன்னூல், ஆத்திசூடி ஆகிய நூல்களை பிற மொழிகளில் மொழி பெயர்த்தவர் வீரமாமுனிவர். இவர் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் சிறப்பான பணிகளைச் செய்துள்ளார். தமிழகத்தில் வாழ்ந்த புலவர்களுள் பல்துறை வித்தகராகத் திகழ்ந்தவர் வீரமாமுனிவரே.
தோற்றம்: 08.11.1680
மறைவு: 04.02.1747
இத்தாலி நாட்டில் வெனிஸ் மாநிலத்தில் மாந்துவா என்னும் மாவட்டத்திலுள்ள காஸ்திகிளியோனே என்ற சிற்றூரில் பிறந்தார்.இயற்பெயர் கான்ச்டன்டைன் ஜோசப் பெஸ்கி.1709 - கிறித்தவ மதத்தைப் பரப்பும் நோக்கில் இயேசுசபை குருவானார்.1710 - தமிழகம் வந்தார். மறை பரப்பு முயற்சிக்காக முதலில் தமிழைக் கற்றுக் கொண்ட இவர். தமிழில் வியத்தகு புலமை பெற்று இலக்கணம், இலக்கியம், அகராதி படைத்து தமிழுக்குச் செழுமையூட்டினார். தமது பெயரினை தைரியநாதன் என்று முதலில் மாற்றிக் கொண்டார். பின்னர், அப்பெயர் வடமொழி என்பதாலும், நன்கு தமிழ் கற்றதாலும், தமது இயற்பெயரின் பொருளைத் தழுவி, செந்தமிழில் வீரமாமுனிவர் என மாற்றிக் கொண்டார்.இவர் தமிழகம் வந்தபின், சுப்ரதீக் கவிராயரிடம் தமிழ் இலக்கண, இலக்கியம் கற்று இலக்கிய பேருரைகள் நடத்துமளவுக்குப் புலமை பெற்றார்.இலக்கியச் சுவடிகைளைப் பல இடங்களுக்குச் சென்று தேடி எடுத்ததால், சுவடி தேடும் சாமியார் எனவும் அழைக்கப்பட்டார். இவற்றில் காண அரிதான பல பொக்கிஷங்கள் அழிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.தமிழின் சிறப்பை மேல் நாட்டார் உணர திருக்குறள், தேவாரம், திருப்புகழ், நன்னூல், ஆத்திசூடி போன்ற நூல்களை பிற ஐரோப்பிய மொழிகளில் வெளியிட்டார்.தமிழ் கற்க எதுவாக தமிழ் - லத்தீன் அகராதியை உருவாக்கினார். அதில் 1000 தமிழ்ச் சொற்களுக்கு லத்தீன் விளக்கம் அளிக்கப்பட்டது. இதுவே முதல் தமிழ் அகரமுதலி ஆகும். பின்பு 4400 சொற்களைக் கொண்ட தமிழ்-போத்துக்கீய அகராதியை உருவாக்கினார்.திருக்காவலூர்த் திருத்தலத்தையும், ஏலாக்குறிச்சியில் உள்ள அடைக்கலமாதாவையும் போற்றும் வண்ணம் "திருக்காவலூர் கலம்பகம்" பாடியுள்ளார்.பல பெயர்களைக் கண்ட பொருட்களின் பெயர்ச் சொற்களைத் தொகுத்துப் 'பெயரகராதி' எனவும், பொருள்களின் பெயர்களைத் தொகுத்து 'பொருளகராதி' எனவும் சொற்கள் பலவாகக் கூடிநின்று ஒரு சொல்லாக வழங்குவதைத் தொகுத்துத் 'தொகையராதி' எனவும், எதுகை மற்றும் ஓசை ஒன்றாக வரும் சொற்களை வரிசைப்படுத்தித் 'தொடையகராதி' எனவும் அமைத்துத் தமிழுக்குச் செழுமை சேர்த்தவர்! 'சதுரகராதி' கண்ட பெருமையும் வீரமாமுனிவரையே சாரும். தமிழ் மொழியில் தோன்றிய நிகண்டுகளில் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது இந்தச் 'சதுரகராதி'.ஒரு மொழி அகராதி சதுரகராதி, இரு மொழி அகராதி-தமிழ்-இலத்தீன்-அகராதி. மூன்று மொழி அகராதி போர்த்துக்கீஸ்-இலத்தீன்-தமிழ்-அகராதி உருவாக்கியதால், "தமிழ் அகராதியின் தந்தை" எனப் போற்றப்பட்டார்.சதுரகாதியை, நிகண்டுக்கு ஒரு மாற்றாகக் கொண்டு வந்தார்.அக்காலத்தில் சுவடிகளில் தமிழில் உயிர் எழுத்துக்களின் அருகில் ர சேர்த்தும் (அ:அர, எ:எர) . உயிர்மெய் எழுத்துகளின் மேல்  குறில் ஒசைக்குப் புள்ளி வைத்துக்கொண்டிருந்தார்கள். அவைகளின் நெடில் ஓசைக்கு புள்ளி வைக்காமல் விட்டார்கள். தொல்காப்பியக் காலத்திலிருந்து வழங்கி வந்த இந்தப் பழைய முறையை 18 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வீரமாமுனிவர் மாற்றி “ஆ, ஏ” எனவும், நெட்டெழுத்துக் கொம்பை மேலே சுழித்தெழுதும் ( கே ,பே ) வழக்கத்தை உண்டாக்கினார்.தமிழ் இலக்கிய இலக்கணங்கள் கவிதை வடிவில் இருந்து வந்தன. அவற்றை மக்கள் எளிதில் படித்தறிய முடியவில்லை என்பதனை அறிந்து உரைநடையாக மாற்றியவர் இவர்.
திருக்காவலூரில் ஒரு கல்லூரியை ஆரம்பித்து அதில் தாமே தமிழாசிரியராக இருந்து இலக்கணம் கற்பித்தார்.
தமிழ் படைப்புகள்:
· தொன்னூல் விளக்கம் என்ற நூலில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்து இலக்கணங்களைத் தொகுத்தார் .
· கொடுந்தமிழ் இலக்கணம் என்ற நூலில், தமிழில் முதல் முதலாகப் பேச்சுத் தமிழை விவரிக்க முனைந்தார்.
· திருக்குறளில் அறத்துப்பாலையும், பொருட்பாலையும் இலத்தீன் மொழியில் மொழி பெயர்த்தவர் வீரமாமுனிவர்.
·உரைநடையில் வேத விளக்கம், வேதியர் ஒழுக்கம், ஞானக் கண்ணாடி, செந்தமிழ் இலக்கணம், பரமார்ந்த குருவின் கதை, வாமன் கதை ஆகிய நூல்களைப் படைத்தவர்.
·திருக்காவலூர்க் ஊர்க் கலம்பகம், கித்தேரி அம்மன் அம்மானை இவரது பிற நூல்கள்.
·1728 - புதுவையில் இவரின் பரமார்த்த குருவின் கதை என்ற நூல் முதல் முறையாக இவரால் அச்சியிடப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த நகைச்சுவைக் கதைகள் Jean de la Fontaine (1621-1695) எனும் பிரன்சியரால் எழுதப்பட்டது. ஐரோப்பாவில் பிரபலமாக இருந்ததை பெஸ்கி தமிழிலும் மொழிபெயர்த்தார் என்று சிலர் கருதுகின்றனர். இது தமிழில் முதல் முதலாக வந்த நகைச்சுவை இலக்கியம் ஆகும்.
·  காவியத்தில் தேம்பாவணி இவர் இயற்றியது.
· தேம்பாவணி மூன்று காண்டங்களில் 36 படலங்களைக் கொண்டு மொத்தமாக 3615 விருத்தப் பாக்களால் ஆனது.
· முத்துசாமிப் பிள்ளை வீரமாமுனிவரின் வாழ்க்கை வரலாற்றை 1822 இல் எழுதி, அந்நூலை அவரே ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து 1840 இல் வெளியிட்டார்.
·தமிழில் அமைந்த காப்பியங்களிலேயே, தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத வெளிநாட்டவர் ஒருவரால் இயற்றப்பட்டது எனும் பெருமை தேம்பாவணிக்கே உண்டு. மேலும் வீரமாமுனிவரைப் போல, வேறெந்தக் காப்பியப் புலவரும் சிற்றிலக்கியம், அகராதி, இலக்கணம் உரைநடை எனப் பிற இலக்கிய வகைகளில் நூல்கள் படைத்தாரல்லர்.
·         23 நூல்களைத் தமிழில் எழுதியதுடன், இயேசுக் கிறித்துவின் வாழ்க்கை தொடர்பான நிகழ்ச்சிகளையும் இயேசுவின் வளர்ப்புத் தந்தையாகிய புனித யோசேப்பின் வரலாற்றையும் தமிழ்ப் பண்பாட்டுக் கேற்ப தேம்பாவணி என்ற பெருங்காவியமாக இயற்றியது இவரின் தமிழ்ப் புலமைக்குச் சான்றாக உள்ளது.
·         'தேம்பாவணி' காப்பியத்தை இயற்றியதற்காக வீரமாமுனிவருக்கு, `செந்தமிழ்த் தேசிகர்' என்னும் பட்டம் வழங்கப்பட்டது.

தமிழகத்தில் வாழ்ந்த புலவர்களுள் பல்துறை வித்தகராகத் திகழ்ந்தவர் வீரமாமுனிவரே! இலக்கண அறிவு, இலக்கியப் புலமை, மொழியியல் உணர்வு, பக்தி இலக்கிய ஆற்றல், ஆய்வியற் சிந்தனை, பண்பாட்டில் தோய்வு எனப் பல்வகையிலும் சிறந்தவர்! அவர்தம் திறமையைப் பயன்படுத்தித் தமிழுக்கு வீரமாமுனிவர் ஆற்றியுள்ள பணிகள் தமிழக வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்கும். தமிழுக்காகவே வாழ்ந்து தொண்டு செய்து புகழ் எய்திய வீரமாமுனிவர் 04.02.1747ஆம் நாள் அம்பலக்காட்டு குருமடத்தில் இயற்கை எய்தினார்.
TAG: Veeramumunivare who was a versatile scholar of Tamil poetry! Grammar Knowledge, Literary Scholarship, Linguistic Feelings, Devotional Literature, Research, and Ethics The heroic work of Tamil Nadu with his talent will remain in the history of Tamil Nadu. Veeramamuni, who lived and lived for Tamils, died on 04.02.1747 on the occasion of the exterior of the shrine.

No comments: