Ad Code

வாராந்திர முக்கிய நிகழ்வுகள் (ஜூன் 21-27) - போட்டித் தேர்வுகளுக்குப் பயன்படும் தகவல்கள்.

கடந்த வாரங்களில் நடந்த முக்கிய நிகழ்வுகள் மற்றும் போட்டித் தேர்வுக்கு தயாராகுபவர்கள் பயன்பெறும் வகையிலான தகவல்கள் இங்கே வழங்கப்படுகின்றன. ஜூன் 21-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் சிறு தொகுப்பு இது...

உலகம்


சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவராக பணியாற்றிய ஜெர்மனியைச் சேர்ந்த தாமஸ் பாச் விலகியதையடுத்து புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடந்தது. இதில் முன்னாள் நீச்சல் வீராங்கனையான கிறிஸ்டி கவன்ட்ரி அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 131 ஆண்டுகால ஒலிம்பிக் கமிட்டி வரலாற்றில் சர்வதேச விளையாட்டு அமைப்பில் அதிகாரமிக்க இந்த அரியணையில் அமரும் முதல் பெண் மற்றும் முதல் ஆப்பிரிக்க நாட்டவர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார். (ஜூன் 23)

அமெரிக்கா உள்ளிட்ட 32 நாடுகள் இணைந்த நேட்டோ அமைப்பின் வருடாந்திர மாநாடு நெதர்லாந்து நாட்டின் தி ஹேக் நகரில் நடந்தது. இதில் தங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீதத்தை ஆண்டுதோறும் ராணுவத்துக்கு செலவிட நேட்டோ நாடுகள் முடிவு செய்துள்ளன. (ஜூன் 25)

இந்தியா


உள்நாட்டு சமையல் எண்ணெய் தேவையை பூர்த்தி செய்ய இறக்குமதியை சார்ந்திருக்கும் நிலையை மாற்ற மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளில் தொடர் நடவடிக்கையை மேற்கொண்டு வந்தது. இதன் காரணமாக உள்நாட்டில் எண்ணெய் வித்துகளின் உற்பத்தி கடந்த 2014-15 முதல் 2024-25-ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் 55 சதவீதமாக அதிகரித்தது. (ஜூன் 21)

ஜூன் 21-ந் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐ.நா. சபை கடந்த 2014-ம் ஆண்டு அறிவித்தது. இந்நிலையில் விசாகப்பட்டினத்தில் நடந்த பிரமாண்ட நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தலைமையில் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்று யோகா பயிற்சி செய்தனர். இந்த நிகழ்ச்சி, 2 கின்னஸ் சாதனைகளை படைத்தது. (ஜூன் 21)

ஐ.நா. நிலையான வளர்ச்சி தீர்வுகள் நெட்வொர்க், நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதில் காட்டும் முன்னேற்றம் குறித்து உலக நாடுகளை தரவரிசைப்படுத்தி ஆண்டுதோறும் பட்டியல் வெளியிட்டு வருகிறது. 193 நாடுகளை கொண்ட இந்தப் பட்டியலில், இந்தியா முதல்முறையாக 67 புள்ளிகளுடன் 99-வது இடத்தை பிடித்துள்ளது. (ஜூன் 24)

நாட்டிலேயே முதல்முறையாக அடுத்த ஆண்டு குடும்ப வருமானம் குறித்த கணக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுபோன்ற கணக்கெடுப்பு நடப்பது இதுவே முதல்முறை ஆகும். (ஜூன் 24)

யுனெஸ்கோ விதிமுறைப்படி ஒரு மாநிலத்தில் கல்வி அறிவு பெற்றவர்கள் சதவீதம் 95 என்ற இலக்கை தாண்டினால் முழு கல்வியறிவு பெற்ற மாநிலமாக கருதப்படும். இந்தாண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் திரிபுராவின் கல்வியறிவு 95.6 சதவீதமாக உள்ளது. இதனால் மிசோரம், கோவா மாநிலங்களுக்கு அடுத்தபடியாக முழு கல்வியறிவு பெற்ற மாநிலமாக திரிபுரா உருவாகி உள்ளது. (ஜூன் 24)

தமிழகம்


தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தேசிய புகையிலை கட்டுப்பாட்டு திட்டம் கடந்த 2007-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டுள்ளது. புகையிலை தடுப்பு சட்டம் மற்றும் புகையிலை இல்லாத இளைஞர்கள் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக தேசிய சுகாதாரம், குடும்ப நலத்துறையின் குடும்ப மதிப்பாய்வு கூட்டத்தின்போது தமிழகத்துக்கு மத்திய சுகாதார அமைச்சகம் விருது வழங்கி உள்ளது. (ஜூன் 21)

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு சாலைகள் மிக அவசியம். கடந்த 4 ஆண்டுகளில் ரூ.17,154 கோடியில் 9,620 கி.மீ. தொலைவுக்கு சாலைகள் அமைக்கப்பட்டதன் மூலம் நெடுஞ்சாலைத் துறையில் இந்தியாவிலேயே தமிழகம் சிறந்த மாநிலம் என்ற பெருமையை பெற்றுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. (ஜூன் 22)

பொருளாதாரம்


நடப்பு நிதியாண்டில் நிகர நேரடி வரியாக ரூ.4.59 லட்சம் கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலகட்ட வசூலைவிட 1.39 சதவீதம் குறைவாகும். முன்கூட்டிய வரி வசூலின் மந்த நிலை, அதிக அளவில் திருப்பியளிக்கப்பட்ட வரி ஆகிய காரணிகளால் இந்தச் சரிவு ஏற்பட்டுள்ளதாக அரசு தரவுகள் தெரிவிக்கின்றன. (ஜூன் 21)

நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருட்கள், உரம், உருக்கு, சிமெண்ட், மின்சாரம் ஆகிய முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின் வளர்ச்சி கடந்த மே மாதம் 0.7 சதவீதமாக உள்ளது. இது 2024 மே மாதத்தில் 6.9 சதவீதமாக இருந்ததுடன் ஒப்பிடுகையில் மிகவும் மந்தமான வளர்ச்சியாகும். (ஜூன் 21)

கடந்த 11 ஆண்டுகளில் இந்தியாவின் காபி ஏற்றுமதி சுமார் 125 சதவீதம் உயர்ந்து 180 கோடி டாலராக உள்ளது. (ஜூன் 23)

நாட்டின் தனியார் துறைக்கான வளர்ச்சி குறியீடு கடந்த மே மாதத்தில் 59.3 ஆக இருந்தது. இது ஜூன் மாதத்தில் 61 ஆக உயர்ந்துள்ளது. இது தனியார் துறையில் கடந்த 14 மாதங்களில் இல்லாத அதிகபட்ச பி.எம்.ஐ ஆகும். (ஜூன் 24)

இந்தியாவின் உள்நாட்டு விமானப் போக்குவரத்து எண்ணிக்கை கடந்த மே மாதத்தில் 1.40 கோடியாக உயர்ந்துள்ளது. (ஜூன் 26)

அறிவியல்


அதானி நியூ இண்டஸ்டிரீஸ் லிமிடெட் நிறுவனம், குஜராத்தின் கட்ச் பகுதியில் அமைக்கப்பட்ட முதல் ஆப்-கிரிட் 5 மெகாவாட் பசுமை ஹைட்ரஜன் ஆலையை வெற்றிகரமாக செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது. இது நாட்டின் தூய எரிசக்தி மாற்றத்தில் ஒரு மைல் கல்லாகும். இது 100 சதவீதம் சூரிய சக்தியால் இயங்கும் பசுமை ஆலையாகும். (ஜூன் 23)

உலகிலேயே முதன்முறையாக முழுக்க முழுக்க மின்சாரத்தால் இயங்கக்கூடிய பயணிகள் விமானத்தை அமெரிக்காவை சேர்ந்த பீட்டா டெக்னாலஜீஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. ஆலியா சி.எக்ஸ்.300 என்ற பெயரில் தயாரிக்கப்பட்ட இந்த விமானம் வெற்றிகரமாக இயக்கப்பட்டது. 130 கி.மீ. தூரத்துக்குப் பறந்த இந்த விமானத்துக்கு எரிபொருள் செலவு ரூ.700 மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. விமானப் போக்குவரத்தில் இது மிகப்பெரும் புரட்சியாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. (ஜூன் 23)

இந்திய கடற்படைக்காக ரஷியாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணை தாங்கிய போர்க்கப்பல் ஐ.என்.எஸ். தமால் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட இருக்கிறது. இது 125 மீட்டர் நீளமும், 3,900 டன் எடையும் கொண்டது. கடல், நிலம் ஆகிய இரண்டிலும் இலக்குகளை குறிவைக்கும் பிரமோஸ் நீண்டதூர ஏவுகணை உள்பட இந்தக் கப்பலில் 26 சதவீத தொழில்நுட்ப திறன்கள், உபகரணங்கள் இந்தியாவில் மேம்படுத்தப்பட்டவை என அதிகாரிகள் தெரிவித்தனர். (ஜூன் 22)

ஆந்திராவை சேர்ந்த 23 வயதான இளம்பெண் ஜானவி தங்கேட்டி வரும் 2029-ம் ஆண்டு விண்வெளியில் பயணம் செய்ய தேர்வு செய்யப்பட்டுள்ளார். (ஜூன் 24)

41 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா விண்வெளிக்கு சென்று சாதனை படைத்துள்ளார். சர்வதேச விண்வெளி நிலையத்தில் அவர் 14 நாட்கள் தங்கி ஆய்வு நடத்துகிறார். (ஜூன் 25)

விளையாட்டு


பாரீஸ் டைமண்ட் லீக் தடகள போட்டியில் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா சாம்பியன் பட்டம் வென்றார். பாரீஸ் சுற்று போட்டியில் நீரஜ் சோப்ரா முதலிடம் பிடிப்பது இதுவே முதல்முறையாகும். (ஜூன் 21)

ஆசிய 23 வயதுக்கு உட்பட்டோர் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய மகளிர் அணி பட்டம் வென்றது. வியட்நாமின் வுங்டவ் நகரில் நடைபெற்ற இப்போட்டியில் மகளிர் பிரிவில் இந்தியா 4 தங்கம், 5 வெள்ளியுடன் முதலிடம் பிடித்தது. (ஜூன் 21)

தாய்லாந்தில் நடைபெற்ற ஆசிய பாரா பேட்மிண்டன் போட்டியில் இந்தியா 4 தங்கம் உட்பட 27 பதக்கங்களை கைப்பற்றி சாதனை புரிந்தது. (ஜூன் 22)

குயின்ஸ் கிளப் சாம்பியன்ஷிப் ஆடவர் டென்னிசில் ஸ்பெயினின் இளம் வீரர் கார்லோஸ் அல்கராஸ் சாம்பியன் பட்டம் வென்றார். நடப்பு சீசனில் அல்கராஸ் இத்துடன் மொத்தமாக 5 பட்டங்கள் வென்றுள்ளார். ஒட்டுமொத்தமாக இது அவரின் 21-வது டூர் பட்டமாகும். (ஜூன் 22)

மலேசியாவில் நடைபெற்ற ஆசிய இரட்டையர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பில் ஆடவர் இரட்டையர், மகளிர் இரட்டையர், கலப்பு இரட்டையர் என 3 பிரிவுகளிலுமே சாம்பியன் பட்டம் வென்று இந்தியா வரலாறு படைத்தது. (ஜூன் 26)

Post a Comment

0 Comments

Ad Code