Monday 23 March 2020

கடற்பாசி

பூமியில் காடுகளில் உயிர்ச்சூழல் மண்டலம் நிரம்பி இருப்பதாக அறிகிறோம். அதுபோலவே கடலடியில் காணப்படும் கடற்பூண்டு பாசியினங்களிடையே ஏராளமான உயிர்ச்சூழல் காணப்படுகிறது.

சொல்லப்போனால், நிலப்பரப்பைவிட இங்கு உயிர்ச்சூழல் அதிகம் என்றே மதிப்பிடலாம். ‘கேல்ப் பாரஸ்ட்’ எனப்படும் இந்த கடற்பாசி காடுகள் உலகின் எல்லா பகுதிகளிலும் பரவி உள்ளது.

வடக்கு மற்றும் தென் அமெரிக்காவின் மேற்கு கடற்கரை ஒட்டிய பகுதிகள், ஆப்பிரிக்காவின் தென்முனை, ஆஸ்திரேலியா, அண்டார்டிகாவை ஒட்டிய தீவுகள் ஆகிய இடங்களில் கடற்பாசி காடுகள் மிகுதியாக உள்ளன.

வட அமெரிக்காவில் அலாஸ்கா முதல் கலிபோர்னியா வரை பசிபிக் கடற்கரை பகுதியில் கடற்பாசி காடுகள் காணப்படுகின்றன.

கடற்பாசி காடுகளில் பலவகையான சிறிய வகை உயிரினங்கள் காணப்படுகின்றன. அவற்றுக்கு கடற்பாசிகள் சிறந்த வாழ்விடமாகவும், உணவு தயாரிப்பு கூடமாகவும் விளங்குகின்றன.

எதிரிகளிடம் இருந்து சிறிய உயிரினங்கள் மறைந்து வாழ கடற்பாசி காடுகள் சிறந்த பாதுகாப்பு அரணாக விளங்குகிறது. புயல்களிடம் இருந்தும்கூட பல சிற்றுயிரினங்கள் கடற்பாசிகளால் காக்கப்படுகின்றன.

பல்வேறு பாலூட்டிகள், பறவைகள் கடற்பாசி காடுகளை சார்ந்து வாழ்கின்றன. கடல்பசு, கடல்சிங்கங்கள், திமிங்கலங்கள், நீர்நாய்கள், கடல் பறவைகள் போன்றவை கடற்பாசி காடுகளை சார்ந்து வாழ்கின்றன.

‘கேல்ப் காடுகள்’ எந்த நேரத்திலும் வளராமல் இருப்பதில்லை. தினமும் 30 செ.மீ. வளரும் தாவரங்களும் உண்டு. சில தாவரங்கள் 45 மீட்டர் உயரம் வரை வளர்கின்றன.

செயற்கையாக கடல் பாசி வளர்ப்பதும் உலகளாவிய தொழில்களில் ஒன்றாக உள்ளது. பெரிய நிறுவனங்கள் பல லட்சம் தொகையை முதலீடாகச் செய்து கடல்பாசி வளர்ப்பு தொழிலை செய்கிறார்கள்.

கடல்பாசிகள் கடலின் அமிலத்தன்மை அதிகரிக்காமல் தடுக்கிறது. இதற்கு அவர்களுக்கு மட்டிமீன்களும் உதவுகிறது. இந்த விவசாயம் தொங்கும் கயிறுகளில் நடக்கிறது. இது சிப்பிகளுக்கும் உதவியாக இருக்கின்றன. ஒரு கேல்ப் பண்ணையில் 40 மெட்ரிக்டன் பாசிகள் மற்றும் ஒரு மில்லியன் மட்டி மீன்கள் ஓராண்டு காலத்தில் உற்பத்தியாகின்றன.

கடற்பாசி காடுகள் கடல்களின் நுரையீரல் எனப்படுகிறது. தாவரங்கள் அடர்ந்த காடுகள் எப்படி பூமியின் நுரையீரல் எனப்படுகிறதோ அதுபோல கடல்பாசிகள் நீரடி தாவரங்களாக உயிர்ச்சூழலை தாங்கி்பிடிக்கிறது. இவையும் கார்பன்-டை-ஆக்சைடை கிரகித்து, ஆக்சிஜனை வெளியிடுகின்றன.