Thursday 19 December 2019

‘சூல்’ நாவலுக்காக எழுத்தாளர் சோ.தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருது

‘சூல்’ நாவலுக்காக எழுத்தாளர் சோ.தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்திய எழுத்து துறையில் சிறந்த படைப்புகளை வெளியிடும் எழுத்தாளர்களுக்கு ஆண்டுதோறும் சாகித்ய அகாடமி விருது வழங்கப்படுகிறது. இலக்கிய துறையில் தேசிய அளவில் வழங்கப்படும் மிகப்பெரிய விருதான இதை பெறுவது மிகப்பெரும் கவுரவமாக பார்க்கப்படுகிறது.

அந்தவகையில் இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது நேற்று அறிவிக்கப்பட்டது. 23 மொழிகளில் விருது பெறுவோரின் பட்டியலை சாகித்ய அகாடமி செயலாளர் கே.சீனிவாசன் வெளியிட்டார்.

இதில் தமிழ் மொழி பிரிவில் பிரபல எழுத்தாளர் சோ.தர்மனுக்கு (வயது 66) விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழக சுற்றுச்சூழல் பேரழிவை மையப்படுத்தி எழுதப்பட்ட ‘சூல்’ என்ற நாவலுக்காக அவர் இந்த விருதை பெறுகிறார்.

கோவில்பட்டி அருகே உள்ள உருளைக்குடியை சேர்ந்த சோ.தர்மன் இதுவரை 4 நாவல்கள், 8 சிறுகதை தொகுப்புகளை வெளியிட்டு உள்ளார். இதில் ‘கூகை’ என்ற நாவல் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் இடம் பெற்றுள்ளது. மேலும் மலையாளத்திலும் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டு உள்ளது.

அதன் தொடர்ச்சியாக தற்போது ‘சூல்’ நாவல், அவருக்கு சாகித்ய அகாடமி விருதை பெற்றுக் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஏற்கனவே 2 முறை தமிழக அரசின் விருதை பெற்றுள்ளார்.

சோ.தர்மனைப்போல பிற மொழிகளிலும் சிறந்த படைப்புகளை வெளியிட்ட எழுத்தாளர்களுக்கு விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் கேரளாவின் திருவனந்தபுரம் தொகுதி எம்.பி.யும், முன்னாள் மத்திய மந்திரியுமான சசி தரூர் முக்கியமானவர் ஆவார். ‘இருளின் ஒரு சகாப்தம்’ என்ற அவரது ஆங்கில புத்தகத்துக்காக இந்த விருதை அவர் பெறுகிறார்.

இவர்களை தவிர நந்த் கிஷோர் ஆச்சார்யா (இந்தி), நிபா கண்டேகர் (கொங்கணி), மதுசூதனன் நாயர் (மலையாளம்), அனுராதா பாட்டீல் (மராத்தி), பென்னா மதுசூதன் (சமஸ்கிருதம்), பண்டி நாராயண் சுவாமி (தெலுங்கு) உள்ளிட்டோருக்கும் சாகித்ய விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதேநேரம் நேபாளி மொழி பிரிவில் பரிசு பெறும் எழுத்தாளரின் விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என சாகித்ய அகாடமி செயலாளர் கூறியுள்ளார்.

சாகித்ய அகாடமி விருது, ரூ.1 லட்சம் ரொக்கம், சான்றிதழ் மற்றும் செப்பு தகடு போன்றவற்றை உள்ளடக்கியது ஆகும்.

சாகித்ய அகாடமி விருது குறித்து சோ.தர்மன் கூறுகையில், ‘நாட்டில் உள்ள கண்மாய்களின் இன்றைய நிலை என்ன? என்பதுதான் ‘சூல்’ நாவலின் மையக்கருத்து. அடிப்படையில், விவசாயியான நான் தண்ணீர் இல்லாததால்தான் 10 ஏக்கர் நிலத்தை தரிசாக போட்டுவிட்டு எழுத்துப்பணியை செய்து வருகிறேன். அதுதான் இந்த நாவலை எழுத தூண்டுதலாக அமைந்தது’ என்று தெரிவித்தார்.

இந்த நாவலுக்கு மத்திய அரசின் அங்கீகாரம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக குறிப்பிட்ட சோ.தர்மன், சாகித்ய அகாடமி விருதை தனது உருளைக்குடி கிராம மக்களுக்கு சமர்ப்பிப்பதாகவும் கூறினார்.

No comments: