Tuesday 24 December 2019

ஒலிம்பிக்

உலகத் திருவிழாவான ஒலிம்பிக் பற்றி நீங்கள் கொஞ்சம் அறிந்திருக்கலாம். அது பற்றிய சில அடிப்படை தொகுப்பு இங்கே கேள்வி பதிலாக...

எப்போது ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமானது?

கி.மு. 776-ம் ஆண்டிலேயே பழமையான ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கிவிட்டது. இதுதான் வரலாற்றில் பதிவான ஆதாரப்பூர்வமான விளையாட்டுப் போட்டியாகும். கி.பி. 393-ம் ஆண்டு இந்த பழமையான ஒலிம்பிக் போட்டிக்கு தடை விதிக்கப்பட்டது.

பழமையான ஒலிம்பிக் ஏன் நிறுத்தப்பட்டது?

ரோமானிய பேரரசர் தியோடோசிஸ் பழமையான ஒலிம்பிக் போட்டிக்கு தடை விதித்தார். போரில் வெற்றி வாகை சூடிய அவர், ஒலிம்பிக் போட்டி கிரேக்க மத கடவுளை போற்றி கொண்டாடும் விதமாக நடந்த போட்டி என்பதால் அவர் தடைவிதித்தார். காலப்போக்கில் ஒலிம்பிக்கின் புகழ் மங்கியது.

நவீன ஒலிம்பிக்கை தோற்றுவித்தது யார்?

நவீன ஒலிம்பிக் ஏதென்சில் 1896-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பியரி டி குபெர்டின் என்பவர் முயற்சியால் ஒலிம்பிக் போட்டிகள் மறுமலர்ச்சி கண்டது. எனவே அவர், நவீன ஒலிம்பிக்கின் தந்தை, என்று போற்றப் படுகிறார்.

முதல் ஒலிம்பிக் எங்கு நடந்தது?

பழமையான ஒலிம்பிக் போட்டிகள் கிரீஸ் நாட்டின் ஒலிம்பியா நகரில் நடந்துள்ளது. நவீன ஒலிம்பிக் போட்டிகள் கிரீஸின் ஏதென்ஸ் நகரில் நடந்தது.

முதல் ஒலிம்பிக் சாம்பியன் யார்?

எலிஸ் நகரத்தை சேர்ந்த கோரேபாஸ் என்பவர், கி.மு. 776-ம் ஆண்டு ஒலிம்பிக் பந்தயத்தில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் வீரர் ஆவார். நவீன ஒலிம்பிக் போட்டியில் முதல் தங்கம் வென்ற பெருமைக்குரியவர் ஜோம்ஸ் கானோலி.

ஒலிம்பிக் கொடி எதைக் குறிக்கிறது?

சர்வதேச சகோதரத்துவத்தை ஒலிம்பிக் கொடி உணர்த்துகிறது. மஞ்சள், கறுப்பு, நீலம், சிவப்பு, பச்சை ஆகிய 5 வண்ண வளையங்கள் கொண்டு ஒலிம்பிக் கொடி உருவாக்கப்பட்டு உள்ளது. ஒலிம்பிக் வளையங்களின் வண்ணம் உலக நாடுகள் அனைத்தின் கொடிகளில் உள்ள வண்ணங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டதாகும்.

ஒலிம்பிக் ஜோதி எப்போது அறிமுகமானது?

பெர்லினில் 1936-ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியின்போது ஒலிம்பிக் ஜோதி அறிமுகமானது.

நவீன ஒலிம்பிக் போட்டிகள் தடைபட்டது உண்டா?

உலகப் போர்களின் காரணமாக 1916, 1940, 1944 ஆகிய ஆண்டுகளில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவில்லை.

ஒலிம்பிக்கில் இந்தியாவின் குறிப்பிடத்தக்க சாதனை என்ன?

இந்திய ஆக்கி அணி 1928-ம் ஆண்டு முதல் 1956-ம் ஆண்டு வரை நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் தொடர்ந்து 6 முறையும் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது. இந்த சாதனை இன்றுவரை முறியடிக்கப்படவில்லை. மேலும் 2 முறையும் இந்திய ஆக்கி அணி தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

No comments: