Monday 16 March 2020

கோவில் கட்டிடக் கலை

இந்திய கோவில் கட்டிடக் கலையை மூன்று வகைகளாக பிரிக்கலாம். திராவிடம், நகரம், வேசரம் என்று அவை குறிப்பிடப்படுகின்றன. இவற்றுள் தென்னிந்திய கோவில்கள் திராவிட கட்டிடக்கலை முறையில் அமைந்தவை.

தென்னிந்தியாவில் குடைவரை கோவில்களை அறிமுகப்படுத்தியவர்கள் பல்லவர்கள். மகேந்திரவர்மன் கட்டிய குடைவரைக் கோவில்களும், நரசிம்ம வர்மன் கட்டிய திறந்தவெளிக் கோவில்களும், ராஜசிம்மன் கட்டிய மாமல்லபுரம் கடற்கரைக் கோவில் மற்றும் காஞ்சி கயிலாச நாதர் கோவில் போன்ற கட்டுமானக் கோவில்களும் அழியாப் புகழ்பெற்றவை.

பல்லவர் கால கோவில்களின் சிறப்பம்சம் தூண்கள் என்பார் மயிலை சீனி வேங்கடசாமி. சோழர் கால கோவில்களின் சிறப்பு அம்சமாகத் திகழ்பவை விமானங்கள். விமானம் எனப்படுவது கர்ப்ப கிரகத்தின் மேல் காணப்படும் டவர் போன்ற அமைப்பு. இதுபோல நுழைவுவாயில் டவர், கோபுரம் எனப்படுகிறது.

தஞ்சை பெருவுடையார் கோவிலின் விமானம் 13 அடுக்கு கொண்டதாக சிறப்பாக அமைக்கப்பட்டு உள்ளது. அந்த விமானத்தை தட்சிணமேரு என்பர்.

மிகப்பெரிய கோபுரங்கள் அமைப்பது பாண்டியர்களின் சிறப்பு அம்சம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்கோவில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில், தென்காசி காசிவிஸ்வநாதர் கோவில் போன்றவற்றில் இத்தகைய கோபுரங்களைக் காணலாம். இறைவன் இறைவிக்கு தனிக்கோவில்கள் கட்டும் முறை நாயக்கர் காலத்தில் ஏற்பட்டது என்பர்.

No comments: