Monday 16 March 2020

அணுக் கொள்கையின் தந்தை

அறிவியல் உங்களுக்கு விருப்பப்பாடமா? இங்கே விடுகதைபோல கொடுக்கப்படும் குறிப்புகள் எந்த விஞ்ஞானியை குறிக்கிறது என்று உங்களால் கண்டுபிடிக்க முடியுமா? அவரைப் பற்றிய முக்கிய குறிப்புகளை அறிவீர்களா?

விஞ்ஞானி விடுகதை

எனது தாய்நாடு இங்கிலாந்து.

நான் நிறக்குருடு தன்மை பற்றி முதன் முதலில் ஆராய்ந்து கூறினேன்.

வளிமண்டலம் மற்றும் வானிலை மாற்றங்களின் அடிப்படை விதிகளை உருவாக்கியதிலும் எனக்கு பங்கு உள்ளது.

நான் அணுக் கொள்கையை முதன் முதலில் வெளியிட்டேன்.

பருப்பொருட்களின் மிகச்சிறிய பகுதி அணு என்று நான் கண்டுபிடித்தேன். இது வேதியியல் துறையின் அடிப்படை கருத்துகளில் ஒன்றாக மாறியது. அறிவியல் உலகிலும் இது மிக முக்கியமான கண்டுபிடிப்பாக கருதப்படுகிறது.

நான் யார் கண்டுபிடித்துவிட்டீர்களா?

விடை :

நான்தான் ஜான் டால்டன்.

வாழ்க்கை குறிப்புகள்:

* ஜான்டால்டன் இங்கிலாந்தில் 1766-ம் ஆண்டு செப்டம்பர் 6-ந் தேதி பிறந்தார். இவரது தந்தை நெசவாளர் ஆவார்.

* டால்டனின் அண்ணன் சிறிய பள்ளி ஒன்றை, தங்களைப் போன்ற நெசவாளர் மற்றும் எளிய குடும்ப குழந்தைகளுக்காக நடத்தினார். அதில் டால்டன் 12 வயது முதலே ஆசிரியராக பணியாற்றினார். 19 வயதில் பள்ளியின் முதல்வராக பொறுப்பேற்றார்.

* 27 வயதில் நியூ கல்லூரியின் கணிதவியல் மற்றும் தத்துவவியல் ஆசிரியராக பணியாற்றினார். கல்லூரி நிதி பற்றாக்குறையால், செயலிழந்தபோது தனியே பயிற்சியாளராக செயல்பட்டார்.

* டால்டன் தீவிர அறிவியல் தேடல் எண்ணம் கொண்டிருந்தார். 21 வயது முதல் வானிலை மற்றும் வளிமண்டல மாற்றங்களை துல்லியமாக கண் காணித்து வந்தார். அது பற்றிய டைரி குறிப்புகளை, 1793-ல் ‘மெட்டோரோலாஜிகல் ஆப்சர்வேசன்ஸ் அண்ட் எஸ்ஸேஸ்’ என்ற பெயரில் நூலாக வெளியிட்டார். இது இன்றைய வானிலை கணிப்புகளின் அடிப்படையாக கருதப்படுகிறது.

* வாயுக்கள் பற்றி ஆராய்வதில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். 1802-ல் வாயுக்களின் பகுதி அழுத்த விதிகளை வெளியிட்டார். ஒரு வரையறுக்கப்பட்ட வாயுக் கலவையின் மொத்த அழுத்தம் ஒவ்வொரு வாயுவும் தனியாக செலுத்தும் அழுத்தங்களின் கூட்டுத் தொகைக்கு சமமாக இருக்கும் என்று அவரது விதி கூறுகிறது.

* மேலும் வெவ்வேறு வெப்பநிலைகளில் வளிமண்டல அழுத்தம், நீராவியின் நிலை எத்தகையது என்பது பற்றியும் ஆராய்ந்து எழுதி உள்ளார். திரவம் வெப்பத்தால் எப்படி மாற்றமடைகிறது என்பது பற்றிய அடிப்படை ஆய்வுகளையும் செய்தார்.

* 1803-ல், அவரது புகழ்பெற்ற கொள்கையான அணுக் கொள்கை பற்றிய கருத்து ஆய்வுக் கட்டுரையை முன்வைத்தார். அவரது அணு கோட்பாடு விஞ்ஞான உலகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

* வாயுக்களின் இயற்பியல் பண்புகளுக்கும், அணு அமைப்புக்கும் தொடர்பு இருப்பதாக நிரூபித்த அவரது ஆய்வுப் பணியே அதற்கு முக்கிய காரணமாகும். அணுக்களைப் பற்றிய தனது புரிதலில் இருந்து, ஹைட்ரஜன், ஆக்ஸிஜன், நைட்ரஜன், கார்பன், சல்பர் மற்றும் பாஸ்பரஸ் ஆகிய ஆறு வெவ்வேறு கூறுகளுக்கான அணு எடைகளின் பட்டியலையும் டால்டன் வெளியிட்டார். வெவ்வேறு தனிமங்களின் அணுக்கள் ஒன்றிணைந்து புதிய சேர்மங்களை உருவாக்கலாம் என்றும் அவர் கூறினார்.

* டால்டனுக்கு நிறக்குருடு தன்மை இருந்தது, அவரால் மஞ்சள் நிறத்தை மட்டுமே காண முடியும். அவரது சகோதரருக்கும் அந்த பாதிப்பு இருந்தது. அதற்கு மரபு மற்றும் மரபணுக்கள் காரணமாக இருக்கிறது என்று அவர் நம்பினார், அது பற்றியும் ஆய்வுக் கட்டுரை எழுதியுள்ளார். இது 1995-ல் நிரூபிக்கப்பட்டு, இத்தகைய நிறக்குருடுத் தன்மை ‘டால்டனிஸம்’ என்று குறிப்பிடப்படுகிறது.

* டால்டன் முடக்குவாத பாதிப்படைந்து 1844-ம் ஆண்டு ஜூலை 27-ந் தேதி மரணம் அடைந்தார்.

No comments: