Monday 16 March 2020

கண்ட விலக்கம்

உலகில் 7 கண்டங்கள் உள்ளன. இவை நீண்ட காலத்திற்கு முன்பு ஒன்றிணைந்ததாக இருந்ததாகவும், பின்னர் அவை விலக்கம் அடைந்து இன்றைய நிலையை அடைந்ததாகவும் கூறப்படுகிறது. கண்டவிலக்கம் பற்றி கேள்வி பதில் வடிவில் அறிவோம்...

கண்டங்களின் விலக்கம் பற்றிய கருத்தை முதன் முதலில் முன்வைத்தவர் யார்?

ஆல்பிரண்ட் லோதர் வெஜினர் என்ற ஜெர்மனி புவியியலாளர், 1912-ல் கண்ட விலக்கம் பற்றிய கருத்தை முன் வைத்தார்.

ஒற்றை பரந்த கண்டம் இருந்ததாக வெஜினர் கூறுவது ஏன்?

உலக வரைபடத்தையும், புவி அமைப்பையும் உற்று ஆராய்ந்தவர் அவர். அப்போது தென் அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையும், ஆப்பிரிக்காவின் மேற்கு கடற்கரையும் ஒன்றுடன் ஒன்று பொருந்தும் வளைவுகளைக் கொண்டிருந்ததை கண்டார்.

மேலும் தென் அமெரிக்காவில் கிடைத்த சில படிமங்களும், ஆப்பிரிக்காவில் கிடைத்த சில புதை படிமங்களும் அதிக ஒற்றுமை கொண்டிருந்தன. எனவே அந்த இரு கண்டங்களும், ஒரு காலத்தில் ஒன்றிணைந்ததாக இருந்திருக்க வேண்டும் என்ற கருத்தை வலுவாக்கியது. இதுபோல மற்ற கண்டங்களும் இணைந்திருந்ததற்கான பல சான்றுகளையும் அவர் யூகித்தார். எனவே அவர் கண்ட விலக்க கருத்தியலை முன்வைத்தார்.

ஒற்றை பரந்த கண்டத்திற்கு வெஜினர் என்ன பெயர் சூட்டினார்?

வெஜினர் அந்த ஒற்றை பரந்த கண்டத்தை பனகாயே என்று அழைத்தார். கிரேக்க வார்த்தையான இதற்கு ‘முழு பூமி’ என்று பொருளாகும்.

10 கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா எங்கே இருந்தது?

பனகாயே ஒற்றைக் கண்டம் விலக்கம் அடைந்து பிளவுபட்டபோது லாவ்ரேசியா மற்றும் கோண்ட்வானா எனும் இரு பெரும் கண்டமாக பிரிந்தன. லாவ்ரேசியாவில் வட அமெரிக்கா மற்றும் யூரேசியா நிலப்பகுதிகள் இருந்தன. கோண்ட்வானாவில் இந்தியா அமைந்திருந்தது. ஆப்பிரிக்கா, அண்டார்டிக்கா இடைப்பட்ட பகுதியாக இந்தியா காணப்பட்டது. இதனுடன் இணைந்ததாகவே தென் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவும் இருந்திருக்கும் என்று கருதப்படுகிறது.

எப்போது இமயமலை தோன்றியது?

50 மில்லியன் (5 கோடி) ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட கண்ட நகர்வின்போது ஒரு நிலப்பகுதி வடக்குநோக்கி நகர்ந்து ஆசியாவுடன் மோதியது. அப்போது ஆசியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் நீரில் மூழ்கிய ஈரமான நிலத்தின் பெரும்பகுதி மடிப்புகளாக படிந்து பெரிய இமயமலையாக உயர்ந்தது.

No comments: