Tuesday 10 December 2019

இஸ்ரோவின் ‘ரிசாட்-2பிஆர்1’ உட்பட உலக நாடுகளின் 10 செயற்கைக்கோளுடன் பிஎஸ்எல்வி-சி 48 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது 

ஹரிகோட்டாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்துக்கு இஸ்ரோவின் ரிசாட்-2பி ஆர்1 மற்றும் 9 வெளிநாட்டு செயற்கைக்கோள்களுடன் கொண்டு செல்லப்படும் பிஎஸ்எல்வி- சி48 ராக்கெட்.

விவசாயம், பேரிடர் மேலாண்மை ஆகியவற்றுக்கு உதவும் இஸ்ரோவின் ‘ரிசாட்-2பிஆர்1’ உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த மொத்தம் 10 செயற்கைக் கோள்கள் ஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி - சி48 ராக்கெட் மூலம் நாளை மாலை விண்ணில் செலுத்தப்படுகின்றன.

விவசாயம், காடு வளர்ப்பு, பேரிடர் மேலாண்மை ஆகியவற்றுக்கு உதவும் வகையில் துல்லியமான வானிலை தரவுகளை பெறும் விதமாக ‘ரிசாட்-2பிஆர்1’ செயற்கைக் கோளை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) உருவாக்கியுள்ளது. ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி - சி48 ராக்கெட் மூலம் இந்த செயற்கைக் கோள் நாளை (டிச.11) மாலை 3.25 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது. இதற்கான கவுன்ட்-டவுன் இன்று தொடங்குகிறது.

இந்த செயற்கைக் கோளுடன் சேர்ந்து ஜப்பான், இத்தாலி, இஸ்ரேல் ஆகிய நாடுகளின் தலா ஒரு செயற்கைக் கோள், அமெரிக்காவின் 6 செயற்கைக் கோள்கள் என மொத்தம் 9 வெளிநாட்டு செயற்கைக் கோள்கள் வர்த்தக ரீதியில் விண்ணில் ஏவப்பட உள்ளன.

வானிலை தொடர்பான ரேடார் படங்களை வழங்கும் ‘ரிசாட்-2பிஆர்1’ புவி கண்காணிப்பு செயற்கைக் கோள் 628 கிலோ எடை கொண்டது. இது 576 கி.மீ. உயரத்தில் நிலைநிறுத்தப்பட உள்ளது. செயற்கைக் கோள் அந்த இலக்கை அடைய 21 நிமிடங்கள், 19 விநாடிகள் எடுத்துக்கொள்ளும் என்று கூறப்படுகிறது. இதன் ஆயுள்காலம் 5 ஆண்டுகள். இது பிஎஸ்எல்வி வகை ராக்கெட்டின் 50-வது பயணம் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: