Monday 24 February 2020

கூடைப்பந்து

உலகப் புகழ்பெற்ற விளையாட்டுகளில் ஒன்று கூடைப்பந்து. ஒலிம்பிக் போட்டிகளில் ஒன்றாக இருக்கும் இது பற்றி கேள்வி பதில் வடிவில் பார்க்கலாம்....

கூடைப்பந்து என்பது என்ன?

கூடைப்பந்து ஒரு குழு விளையாட்டாகும். இரு அணியினர் எதிர் எதிர் தரப்பாக நின்று, லாவகமாக பந்தைக் கடத்தி, எதிரணியின் கூடைக்குள் போடுவது புள்ளியாக கருதப்படுகிறது. குறிப்பிட்ட நேரத்தில் அதிக புள்ளிகள் பெறும் அணி வெற்றிக்குரியதாக தேர்வு செய்யப்படுகிறது.

கூடைப்பந்து அணியில் எத்தனை பேர் இருப்பார்கள்?

ஒரு அணிக்கு 5 வீரர்கள் வீதம், இரு அணி வீரர்கள் களத்தில் விளையாடுவார்கள்.

கூடைப்பந்து ஆடுகளத்தைப் பற்றி சொல்லுங்கள்?

கூடைப் பந்தாட்ட மைதானம் செவ்வக வடிவமானது. இது கோர்ட் என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு அணியின் பக்கமும், தலா ஒரு கூடைப்பந்து கம்பம் நடப்பட்டிருக்கும். அதில் 10 அடி உயரத்தில் பந்தை போட்டு புள்ளியாக மாற்றும் வலைக்கூடை பொருத்தப்பட்டிருக்கும். வீரர்கள் உயரத்திற்கு எம்பிக் குதித்தும், பந்தை எறிந்தும் புள்ளியை தனதாக்க வேண்டும்.

கூடைப்பந்து யாரால் உருவாக்கப்பட்டது?

ஜேம்ஸ் நைஸ்மித் என்ற கனடா நாட்டு உடற்கல்வியாளர் கூடைப்பந்து விளையாட்டை உருவாக்கினார். 1892-ல் இந்த விளையாட்டிற்காக அடிப்படை விதிகளை விளக்கி கட்டுரை வெளியிட்டார். ஆரம்ப காலத்தில் கம்பத்தில் ஒரு கூடையைக் கட்டி அதில் பந்தைப் போட்டு விளையாடப்பட்டதால் கூடைப்பந்து (பாஸ்கெட்பால்) என்று அழைக்கப்பட்டது. தற்போது கம்பத்தில் வலைக்குள் பந்தைப்போட்டு விளையாடுவதால் இதற்கு வலைப்பந்து (நெட்பால்) என்ற பெயரும் உண்டு.

கூடைப்பந்தாட்டம் எவ்வளவு நேரம் நீடிக்கும்?

கூடைப்பந்தாட்டம் 48 நிமிடங்கள் நீடிக்கும். 12 நிமிடங்கள் கொண்ட 4 பிரிவாக ஆட்டம் நடைபெறும். முடிவு கிடைக்காவிட்டால் மேலும் 15 நிமிடங்கள் போட்டி நீடிக்கப்படும். இந்த ஆட்ட கடிகாரம் அவ்வப்போது நிறுத்தி விளையாடப்படுவதால் ஒரு போட்டியானது சுமார் 2 அரை மணி நேரம் வரை நீடிப்பது உண்டு.

கூடைப்பந்து விளையாட என்ன திறன்கள் தேவை?

சிறந்த ஓட்டத்திறன், பந்தை கையகப்படுத்தும் திறன், தற்காப்பு ஆட்டம், துள்ளிக்குதித்து எதிரணியை மிரளவைக்கும் ஆட்டத்திறன், சாதுர்யமாக புள்ளியாக்கும் திறன், குழுவாக செயல்படும் திறன் போன்ற பல்வேறு திறன்கள் கூடைப்பந்தாட்டத்தில் வெற்றியைத் தீர்மானிக்கிறது.

கூடைப்பந்து ஒரு ஒலிம்பிக் விளையாட்டா?

ஆம், கோடை ஒலிம்பிக் போட்டிகளில் ஒன்று கூடைப்பந்து. ஆண்கள் - பெண்கள் என இரு பிரிவிலும் பல்வேறு நாடுகள் இந்த போட்டியில் பங்கெடுக்கின்றன. 1936-ம் ஆண்டு முதல் இது ஒலிம்பிக் போட்டியில் சேர்க்கப்பட்டது. பெண் களுக்கான ஒலிம்பிக் கூடைப்பந்து 1976 முதல் நடத்தப்படுகிறது.

No comments: