Sunday 8 December 2019

பாலங்கள்

செவிச் செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை என்பது வள்ளுவர் வாக்கு. கற்றலின் கேட்டல் நன்று என்பார்கள். கேட்டுத் தெளியும் கருத்துகள் மனதில் ஆழமாகப் பதியும். அதனால்தான் ஆசிரியர் பாடங்களின் மூலம் விளக்க, நாம் கேட்டுக் கேட்டு அறிந்துகொள்கிறோம். இங்கே கேள்வி பதில் வடிவில் சில விஷயங்களை அறிவோம். இந்த வாரம் பாலங்களைப் பற்றி பார்க்கலாம்...

பாலங்களில் எத்தனை வகைகள் உள்ளன?

தரைப்பாலம், கயிற்றுப் பாலம், மூங்கில் பாலம், கற்பாலம், படகு பாலம், தூண் பாலம், திறப்புடன்கூடிய தூக்கு பாலம், தொங்கு பாலம், கம்பி வடம் பாலம், சுழலும் பாலங்கள், செங்குத்தாக நகரும் லிப்ட் பாலங்கள், பிளவு பாலம், பாஸ்கல் பாலம் மற்றும் சிற்ப பாலங்கள் என பல வகை பாலங்கள் வழக்கத்தில் உள்ளன.

உலகின் உயரமான சாலைப் பாலம் எது?

இந்திய ராணுவத்தால் லடாக் பகுதியில் அமைக்கப்பட்டு உள்ள பெய்லி பிரிட்ஜ் பாலம்தான் உலகில் உயரமாக அமைக்கப்பட்ட சாலைப் பாலமாகும். இது ஜம்மு காஷ்மீர் பகுதியில் லடாக் பள்ளத்தாக்கில் 5 ஆயிரத்து 600 மீட்டர் உயரத்தில் இரு குன்றுகள் இடையே ஆற்றை கடந்து பயணிக்கும் வகையில் அமைக்கப்பட்டு உள்ள பாலமாகும். 30 மீட்டர் நீளம் கொண்டது. இது 1982-ம் ஆண்டு இந்திய ராணுவத்தால் கட்டமைக்கப்பட்டது.

லண்டன் பாலம் நடுவில் பிளவு பட்டுள்ளதே ஏன்?

இங்கிலாந்தின் லண்டன் நகரில் தேம்ஸ் நதியின் குறுக்கே டவர் பிரிட்ஜ் எனும் பாலம் 1894-ல் கட்டப்பட்டது. இது லண்டனின் அடையாளங்களில் ஒன்றாக விளங்குகிறது.

கப்பல்கள் தேம்ஸ் நதியை கடந்து செல்ல வசதியாக லண்டன் பாலம் பிளவுபட்டு வழியை திறந்துவிடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பயன்பாட்டிற்காக பிளவு பாலம், தூக்கு பாலம், செங்குத்து பாலம் போன்ற பாலங்கள் உலகின் பல இடங்களில் பல்வேறு நீர்நிலைகளின் குறுக்கே அமைக்கப்பட்டு உள்ளன. தமிழகத்தில் ராமேஸ்வரத்தில் அமைக்கப்பட்டுள்ள ரெயில்வே தூக்குபாலம் அவற்றில் ஒன்றாகும்.

புகழ்பெற்ற கோல்டன் கேட் பாலம் எங்குள்ளது, அது ஏன் சிறப்பு பெற்றது?

அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் கோல்டன் கேட் பாலம் உள்ளது. இந்த பாலம் சிறப்பு பெற பல காரணங்கள் உண்டு. குறிப்பாக அது அமைந்திருக்கும் இடம் வேகமான நீரோட்டம் கொண்ட இடமாகும். மேலும் இந்த பகுதியில் வேகமான காற்று மற்றும் மூடுபனியும் நிலவும். இத்தகைய சீதோஷ்ண நிலையைத் தாங்கும் நல்ல உறுதித்தன்மையுடன் சிறந்த தொழில்நுட்ப கட்டமைப்புடன் பாலம் கட்டப்பட்டுள்ளதால் கோல்டன் கேட் பாலம் உலகளாவிய புகழ்பெற்ற பாலங்களில் ஒன்றாக விளங்குகிறது. 1964-ம் ஆண்டிற்கு முன்புவரை இந்த இடத்தில் மிகப்பெரிய தூக்கு பாலம்தான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பேண்டூன் பாலம் ஏன் உருவாக்கப்படுகிறது, அதன் பயன் என்ன?

பேண்ட்டுன் பாலம் என்பது ஆற்றில் வரிசையாக படகுகளை ஒன்றிணைத்து உருவாக்கப்படும் படகு பாலமாகும். ராணுவ வீரர்கள் ஆற்றை கடப்பதற்காக இந்த வகை பாலங்கள் பல இடங்களில் போர்க்காலங்களில் உருவாக்கப்பட்டிருக்கின்றன. சில இடங்களில் பாதசாரிகள், சிறிய வாகனங்கள் ஆற்றை கடப்பதற்காக தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ படகு பாலங்களை உருவாக்குவது உண்டு. உலகின் பல்வேறு இடங்களில் படகுப் பாலங்கள் உள்ளன.

உலகின் நீளமான பாலம் எது?

சீனாவில் தன்யாங் மற்றும் ஹன்ஷான் இடையே உள்ள கிராண்ட் பிரிட்ஜ் பாலம்தான் உலகின் மிக நீளமான பாலமாகும். 2011-ம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த பாலம் 165 கிலோமீட்டர் நீளம் கொண்டது. ரெயில்வே சேவைக்காக வெறும் 4 ஆண்டு காலத்தில் 10 ஆயிரம் பணியாளர்களைக் கொண்டு இந்த பாலம் கட்டமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதுபோல இன்னும் பிரம்மாண்டமான பல பாலங்கள் சீனாவில் உள்ளது நினைவூட்டத்தக்கது.

தாய்லாந்தில் உலகின் நீளமான சாலைப் பாலம் உள்ளது. ‘பாங் நா’ என அழைக்கப்படும் இந்த சாலைப்பாலம் 55 கிலோமீட்டர் நீளம் கொண்டதாகும்.

No comments: