Saturday, 29 March 2025

CURRENT AFFAIRS 2025 | மார்ச் 15-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் சிறு தொகுப்பு

உலகம்

* பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் குறித்து அமெரிக்காவின் ‘பியூச்சர் பிரீ ஸ்பீச்’ என்ற அமைப்பு 33 நாடுகளில் ஆய்வு மேற்கொண்டது. அதில் நார்வே முதலிடத்திலும், டென்மார்க் 2-வது இடத்திலும், ஹங்கேரி 3-வது இடத்திலும், இந்தியா 24-வது இடத்திலும் உள்ளன. (மார்ச் 18)

* ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் நல்வாழ்வு ஆராய்ச்சி மையம், 2025-ம் ஆண்டில் உலகிலேயே மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலை வெளியிட்டது. சமூக ஆதரவு, சுகாதாரம், சுதந்திரம், பெருந்தன்மை, ஊழல் குறித்த மக்கள் எண்ணம், மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு மேற்கொண்ட ஆய்வில் தொடர்ந்து 8-வது ஆண்டாக பின்லாந்து முதலிடம் பிடித்தது. டென்மார்க் 2-வது இடத்திலும், ஐஸ்லாந்து 3-வது இடத்திலும், இந்தியா 118-வது இடத்திலும் உள்ளன. இந்த பட்டியலில் ஆப்கானிஸ்தான் கடைசி இடத்தில் உள்ளது. (மார்ச் 20)

இந்தியா

* கொல்கத்தா ஐகோர்ட்டு நீதிபதியாக இருந்த ஜயமால்ய பாக்சி, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக பதவியேற்றுக் கொண்டார். இதன்மூலம் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்தது. (மார்ச் 17)

* நாட்டில், தவிர்க்கக்கூடிய பார்வையின்மையை ஒழிப்பதை நோக்கமாக கொண்ட விஷன் 2020-ன் இந்தியாவின் நல்லெண்ண தூதராக இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் நியமிக்கப்பட்டார். (மார்ச் 18)

* நாட்டின் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கான ராஷ்ட்ரீய கோகுல் மிஷன் மற்றும் தேசிய பண்ணை மேம்பாட்டு திட்டம் ஆகிய 2 திருத்தப்பட்ட திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை ரூ.6 ஆயிரத்து 190 கோடியாக உயர்த்த மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்தது. (மார்ச் 19)

* ரிசர்வ் வங்கியின் செயல் நிர்வாக இயக்குனராக இந்திரானில் பட்டாச்சார்யா நியமிக்கப்பட்டார். இவர் பொருளாதார மற்றும் கொள்கை ஆராய்ச்சித் துறையை கவனித்துக் கொள்வார். (மார்ச் 20)

* 72-வது உலக அழகிப் போட்டி தெலுங்கானா மாநிலத்தில் ஐதராபாத் உள்பட 10 நகரங்களில் வருகிற மே மாதம் நடைபெறுகிறது. (மார்ச் 20)

* பிரதம மந்திரி அவாஸ் யோஜனா - நகர்ப்புறம் 2.0 திட்டத்தில் 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 3.52 லட்சம் வீடுகள் கட்ட மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்தது. (மார்ச் 21)

தமிழகம்

* தமிழக அரசின் 2025-26-ம் நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சட்டசபையில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் விவசாய திட்டங்களுக்கு ரூ.45 ஆயிரத்து 661 கோடி ஒதுக்கப்பட்டது. இது கடந்த ஆண்டு பட்ஜெட்டை விட ரூ.3 ஆயிரத்து 380 கோடி அதிகம். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் பண்ணைக் குட்டைகள், குளங்கள் அமைக்க ரூ.2 ஆயிரம் கோடி, ஆயிரம் உழவர் நலசேவை மையங்கள் அமைக்க ரூ.42 கோடி ஒதுக்கீடு, பனை சாகுபடியை ஊக்குவிக்க 10 லட்சம் பனை விதைகள் வினியோகம், முந்திரி வாரியம் அமைக்க ரூ.10 கோடி, முதல்-அமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்துக்கு ரூ.142 கோடி, மக்காச்சோளம் உற்பத்தி மேம்பாட்டு திட்டத்துக்கு ரூ.40 கோடி, ஒருங்கிணைந்த தென்னை வளர்ச்சித் திட்டத்துக்கு ரூ.35 கோடி, வண்ணமீன் வளர்ப்புக்கு ரூ.1 கோடியே 55 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. நல்லூர் வரகு, வேதாரண்யம் முல்லை, நத்தம் புளி, ஆயக்குடி கொய்யா, கப்பல்பட்டி கரும்பு முருங்கை ஆகிய 5 வேளாண் பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற ரூ.15 லட்சம் ஒதுக்கப்பட்டது. (மார்ச் 15)

* தமிழக அரசின் நிதித்துறை சார்பில் தயாரிக்கப்பட்ட சங்ககாலம் முதல் சமூகநீதிக் காலம் வரையிலான தமிழர்களின் நிதி நிர்வாகச் சிறப்புகளை சொல்லும் ‘தமிழர் நிதி நிர்வாகம் - தொன்மையும் தொடர்ச்சியும்’ என்ற நூலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். (மார்ச் 17)

* சிந்து சமவெளி நாகரிகத்தை முதன்முதலில் வெளிப்படுத்திய சர் ஜான் ஹூபர்ட் மார்ஷலுக்கு ரூ.50 லட்சம் செலவில் சென்னை எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் அமைக்கப்பட்ட உருவச் சிலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். (மார்ச் 19)

* சென்னை மாநகராட்சியின் 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. வரி விதிப்பு மற்றும் நிதிக்குழுத் தலைவர் சர்பஜெயாதாஸ் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் சென்னை மாநகராட்சியின் மொத்த வருவாய் ரூ.8 ஆயிரத்து 267 கோடியே 17 லட்சமாகவும், மொத்த செலவு ரூ.8 ஆயிரத்து 404 கோடியே 70 லட்சமாகவும் இருக்கும் என மதிப்பிடப்பட்டு உள்ளது. இதில் பற்றாக்குறை ரூ.137 கோடியே 53 லட்சமாக உள்ளது. மொத்த வருவாயில் சொத்துவரி மூலமாக 63 சதவீதமும், தொழில்வரி மூலமாக 19 சதவீதமும், பயன்பாடு மூலமாக 11 சதவீதமும், மற்ற வருமானம் மூலமாக 7 சதவீதமும் கிடைக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. (மார்ச் 19)

அறிவியல்

* இஸ்ரோ, சண்டீகரில் உள்ள செமிகண்டக்டர் ஆய்வகத்துடன் இணைந்து விண்வெளி பயன்பாடுகளுக்கான விக்ரம் 3201 மற்றும் கல்பனா 3201 என்ற இரண்டு 32-பிட் மைக்ரோபிராசசர்களை உருவாக்கியது. விக்ரம் 3201 என்பது இந்தியாவில் முதல்முறையாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 32-பிட் மைக்ரோபிராசசர் ஆகும். (மார்ச் 16)

* சென்னை ஐ.ஐ.டி.யில் விண்வெளி மற்றும் உந்துவிசை ஆராய்ச்சிக்கு பயன்படும் வகையில், ‘ஸ்ரீ எஸ்.ராமகிருஷ்ணன் திரவ மற்றும் வெப்ப அறிவியல் ஆராய்ச்சிக்கான உயர் சிறப்பு மையத்தை’ இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் திறந்துவைத்தார். (மார்ச் 17)

* விண்வெளி ஆராய்ச்சிக்காக பூமியில் இருந்து சுமார் 400 கி.மீ. தொலைவில் அமெரிக்கா, ரஷியா, கனடா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளால் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையம் உருவாக்கப்பட்டது. அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா சார்பில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஆராய்ச்சிப் பணிக்காக போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 5-ந் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்றனர். 8 நாட்கள் தங்கியிருந்து பணிகளை முடித்து விட்டு பூமிக்கு திரும்ப திட்டமிட்டிருந்த நிலையில் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பூமிக்கு திரும்புவதில் தடை ஏற்பட்டது. இதையடுத்து 286 நாட்களுக்குப் பிறகு ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் குரூ டிராகன் 9 விண்கலத்தின் மூலம் வெற்றிகரமாக பூமிக்கு அழைத்துவரப்பட்டனர். (மார்ச் 19)

பொருளாதாரம்

* கடந்த பிப்ரவரி மாதத்தில் நாட்டின் மொத்த விலை பணவீக்கம் 2.38 சதவீதமாக உயர்ந்தது. அது கடந்த ஜனவரி மாதத்தில் 2.31 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. (மார்ச் 17)

விளையாட்டு

* 3-வது பெண்கள் பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் மும்பை பிரபோர்ன் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. அதில் மும்பை இந்தியன்ஸ் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்ட மும்பை அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் ஆட்டநாயகியாகவும், மும்பை அணி ஆல்ரவுண்டர் நாட்சிவெர் தொடர்நாயகியாகவும் தேர்வு செய்யப்பட்டனர். (மார்ச் 15)

* இண்டியன்வெல்ஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடைபெற்றது. அதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் ரஷியாவின் மிரா ஆன்ட்ரீவா 2-6, 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் நம்பர் ஒன் வீராங்கனையான பெலாரசின் சபலென்காவை வீழ்த்தி முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றார். ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தின் ஜாக் டிராப்பர் 6-2, 6-3 என்ற நேர்செட்டில் டென்மார்க்கின் ஹோல்கர் ருனேவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார். (மார்ச் 17)

* சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் (ஐ.ஓ.சி.) தலைவராக இருந்த தாமஸ் பாச்சின் பதவிக்காலம் முடிந்ததை அடுத்து புதிய தலைவராக ஜிம்பாப்வே நாட்டின் முன்னாள் நீச்சல் வீராங்கனையும், விளையாட்டுத்துறை மந்திரியுமான கிறிஸ்டி கவன்ட்ரி தேர்வு செய்யப்பட்டார். இதன்மூலம் 131 ஆண்டுகால சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி வரலாற்றில் முதல் பெண் தலைவர் மற்றும் ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த முதல் தலைவர் என்ற பெருமையை இவர் பெற்றார். (மார்ச் 20)

No comments: