Thursday 31 October 2019

யூனியன் பிரதேசங்களாக காஷ்மீர், லடாக் உதயம்

காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகள் அதிகாரபூர்வமாக யூனியன் பிரதேசங்களாகி உள்ளன. இதன் துணைநிலை ஆளுநர்கள் இன்று பொறுப்பேற்கின்றனர்.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி ரத்து செய்தது. மேலும் அம்மாநிலம் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்றும் அறிவித்தது. இதில் காஷ்மீர் மட்டும் சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம் இயற்றப்பட்டது. அக்டோபர் 31-ம் தேதி முதல் இச்சட்டம் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய 2 புதிய யூனியன் பிரதேசங்கள் நள்ளிரவில் உதயமாகின.

காஷ்மீர் துணைநிலை ஆளுநராக ஜி.சி.முர்மு வும் லடாக் துணைநிலை ஆளுநராக ராதாகிருஷ்ண மாத்தூரும் ஏற்கெனவே நியமிக்கப்பட்டனர். இவர்கள், முறையே நகர் மற்றும் லடாக்கில் இன்று நடை பெறும் நிகழ்ச்சியில் பதவியேற்கின்றனர். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதையடுத்து, அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. போலீஸார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டத்தின்படி, காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளின் காவல், சட்டம் மற்றும் ஒழுங்கு விவகாரங்கள் இன்று முதல் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வருகிறது.

அதேநேரம், காஷ்மீரைப் பொறுத்தவரை நிலம் தொடர் பான விவகாரங்கள் அங்கு தேர்ந்தெடுக்கப்படும் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும். லடாக்கில் சட்டப்பேரவை இருக்காது.

தங்கள் அதிகார எல்லைக்குட்பட்டு காஷ்மீர் முழுமைக் குமோ ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு மட்டுமோ தேவையான சட்டங்களை இயற்றும் அதிகாரம் சட்டப்பேரவைக்கு உள்ளது. ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஊழல் தடுப்பு அமைப்பின் (ஏசிபி) அதிகாரிகள் துணைநிலை ஆளுநரின் கட்டுப்பாட்டில் இருப்பார்கள்.

ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றம், இரு யூனியன் பிரதேசங்களுக்கும் பொதுவானதாக செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  

No comments: