Friday 22 December 2017

சுப்ரீம் கோர்ட்டு புதிய தலைமை நீதிபதியாக ஜே.எஸ்.கேஹர் நியமனம் 4-ந் தேதி பதவி ஏற்கிறார்

சுப்ரீம் கோர்ட்டு புதிய தலைமை நீதிபதியாக ஜே.எஸ்.கேஹர் நியமனம் 4-ந் தேதி பதவி ஏற்கிறார் | சுப்ரீம் கோர்ட்டு புதிய தலைமை நீதிபதியாக நீதிபதி ஜே.எஸ்.கேஹர் நியமிக்கப்பட்டார். அவர் ஜனவரி 4-ந் தேதி பதவி ஏற்கிறார். நியமனம் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் ஜனவரி 3-ந் தேதி ஓய்வு பெறுகிறார். அவர், அடுத்த தலைமை நீதிபதியாக, தனக்கு அடுத்த நிலையில் உள்ள மூத்த நீதிபதி ஜே.எஸ்.கேஹர் நியமிக்கப்பட வேண்டும் என்று மத்திய சட்ட அமைச்சகத்துக்கு சமீபத்தில் சிபாரிசு செய்திருந்தார். அதை மத்திய அரசும் ஏற்றுக்கொண்டு, ஜனாதிபதிக்கு சிபாரிசு செய்தது. இந்நிலையில், புதிய தலைமை நீதிபதியாக ஜே.எஸ்.கேஹர் நேற்று நியமிக்கப்பட்டார். அவரது நியமனத்துக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்து இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இதுபற்றிய அறிவிக்கையை, நீதிபதி ஜே.எஸ்.கேஹரிடம் நீதித்துறை உயர் அதிகாரி ஒருவர் இன்று காலை ஒப்படைக்கிறார். பதவி ஏற்கிறார் நீதிபதி ஜே.எஸ்.கேஹர், ஜனவரி 4-ந் தேதி, சுப்ரீம் கோர்ட்டு புதிய தலைமை நீதிபதியாக பதவி ஏற்கிறார். அவர் நாட்டின் 44-வது தலைமை நீதிபதி ஆவார். 64 வயதான அவர், ஆகஸ்டு 27-ந் தேதிவரை, 7 மாதங்கள் மட்டுமே அப்பதவியில் இருப்பார். தலைமை நீதிபதி ஆகும் முதலாவது சீக்கியரும் இவரே ஆவார். நீதிபதி ஜே.எஸ்.கேஹரின் முழுப்பெயர் ஜெகதீஷ் சிங் கேஹர். தீர்ப்புகள் நீதிபதிகள் நியமனம் தொடர்பான நீதித்துறை நியமன ஆணைய சட்டத்தை செல்லாது என்று தீர்ப்பு அளித்த 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சட்ட அமர்வின் தலைவராக செயல்பட்டவர், ஜே.எஸ்.கேஹரே ஆவார். கடந்த ஜனவரி மாதம், அருணாசலபிரதேச மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது செல்லாது என்று தீர்ப்பு அளித்தது, இவர் தலைமையிலான அமர்வுதான். சஹாரா நிறுவன தலைவர் சுப்ரதா ராயை ஜெயிலுக்கு அனுப்பிய உத்தரவை பிறப்பித்த அமர்விலும் இவர் இடம்பெற்று இருந்தார்.