Friday 22 December 2017

உலக அழகியாக 19 வயது மாணவி ஸ்டிபானி டெல் வாலே தேர்வு

உலக அழகியாக 19 வயது மாணவி ஸ்டிபானி டெல் வாலே தேர்வு | போர்டோ ரிகா நாட்டைச் சேர்ந்தவர் | உலக அழகியாக போர்டோ ரிகா நாட்டின் 19 வயது மாணவி ஸ்டிபானி டெல் வாலே தேர்ந்தெடுக்கப்பட்டார். 66-வது உலக அழகிப் போட்டி (மிஸ் வேர்ல்ட்) அமெரிக்காவின் வாஷிங்டன் அருகே ஆக்‌ஷான் கில் நகரில் உள்ள எம்.ஜி.எம். நேஷனல் ஹார்பர் அரங்கில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதில் 117 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் கலந்து கொண்டனர். இந்தியாவில் இருந்து 20 வயது பிரியதர்ஷினி சாட்டர்ஜி பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியைக் காண நூற்றுக்கணக்கானோர் திரண்டு இருந்தனர். இதன் இறுதிச்சுற்றுக்கு, இந்தோனேஷியாவின் நடாஷா மனுயூலா, டொமினிகன் குடியரசைச் சேர்ந்த யரிட்ஷா மிகுலினா, போர்டோ ரிகா நாட்டின் மாடல் அழகி ஸ்டிபானி டெல் வாலே, கென்யாவின் ஈவ்லின் ஜாம்பி, பிலிப்பைன்ஸ் நாட்டின் கட்ரோனியா கிரே ஆகிய 5 அழகிகள் முன்னேறினர். போர்டோ ரிகா அழகி தேர்வு இறுதிச்சுற்றில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு புத்திசாலித்தனமாகவும், உறுதியாகவும் பதில் அளித்த போர்டோ ரிகாவின் ஸ்டிபானி டெல் வாலே உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். யரிட்ஷா மிகுலினாவுக்கு 2-வது இடமும் கிடைத்தது. நடாஷா மனுயூலாவுக்கு 3-வது இடமும், 4-வது இடத்தை கென்ய அழகியும், 5-ம் இடத்தை பிலிப்பைன்ஸ் அழகியும் பிடித்தனர். இந்தியா-ஆஸ்திரேலியா ஏமாற்றம் இந்திய அழகி பிரியதர்ஷினி சாட்டர்ஜி சிறந்த 20 அழகிகளின் பட்டியலில் இடம் பிடித்தார். எனினும் அடுத்த 2 சுற்றுகளுக்குள் அவரால் நுழைய முடியவில்லை. இதேபோல், பட்டம் வெல்வார் என்று மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலியாவின் மெட்லினி கவ் சிறந்த 20 அழகிகளின் பட்டியலில் மட்டுமே இடம் பிடித்து ஏமாற்றம் அளித்தார். கரீபிய நாடான போர்டோ ரிகாவில் இருந்து உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட 2-வது அழகி ஸ்டிபானி ஆவார். இதற்கு முன்பு 1975-ல் வில்நெலியா மெர்செட் என்பவர் அந்த நாட்டில் இருந்து உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். 5 அடி 10 அங்குல உயரம் கொண்ட 19 வயது ஸ்டிபானி ஆங்கிலம், ஸ்பானிஷ், பிரெஞ்ச் மொழிகள் நன்கு பேசத் தெரிந்தவர். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள பேஸ் பல்கலைக்கழகத்தில் பி.ஏ. (தகவல் தொடர்பு) படித்து வருகிறார். மிகப்பெரிய கவுரவம் வெற்றி பெற்ற ஸ்டிபானிக்கு கடந்த ஆண்டு மிஸ் வேர்ல்ட் ஆக தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்பெயின் நாட்டின் மிரெயா லாலாகுனா கிரீடம் அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். உலக அழகியாக தேர்வான ஸ்டிபானி கூறுகையில், "உலக அழகிப் பட்டம் எனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம் ஆகும். இதில் நான் ஆற்றவேண்டிய கடமையும் பொறுப்பும் நிறையவே உள்ளது. அதை நிச்சயம் நிறைவேற்றுவேன்" என்று புன்னகையுடன் கூறினார்.