Friday 17 April 2020

கோழி முட்டையின் வடிவம் உருண்டையாக இல்லாமல் நீண்டு இருப்பதேன்?

பொதுவாக முதிர்ந்த அண்டங்கள் ( Ovum ) அனைத்தும் உருண்டை வடிவம் உடையவை. ஆனால் சில விலங்குகளில், அதிலும் பூச்சியினத்தில் முட்டைகள் நீள வடிவமுடையவை. சுத்தி மீன் மற்றும் பறவைகளின் முட்டைகளும் நீள்வட்ட வடிவமுடையவை. கோழி முட்டை நீள்கோள வடிவமுடையது. இதன் ஒரு முனை சற்று கூர்மையாகவும் மற்றொரு முனை மழுங்கியும் காணப்படும்.

கோழியின் அண்டச் சுரப்பியில் உருவாகும் அண்டம் கோள வடிவம் கொண்டு ஒரு அங்குல விட்டமுடையதாக உள்ளது. இந்த முதிர்ந்த அண்டம், அண்ட நாளத்தில் இறங்கும்போது பல்வேறு சுரப்புகள் மூலம் நாம் பார்க்கும் முட்டையாக மாறுகிறது. முட்டையின் மையத்தில் கருமையம் இருக்க வேண்டி சலாஜா ( Chalaza ) என்ற வெண்திரி அமைப்பும், அல்புமின் என்ற முட்டை வெள்ளையும் அண்டச் சுரப்பியின் முன்பகுதியில் சுரக்கப்பட்டு அண்டத்தோடு இணைக்கின்றன. அதன் மேல், கருப்பையின் கீழ்பகுதியில் கெரடின் இழைகளாலான உள் / வெளி ஓட்டுச்சவ்வுகள் சுரக்கப்படுகின்றன.

முடிவாக அண்டச் சுரப்பியின் இஸ்துமஸ் ' என்ற பகுதியிலுள்ள நிடமென்டல் சுரப்பிகள் ( ஓட்டுச் சுரப்பிகள் ) கால்சியத்தாலான ஓடு சுரக்கப்படுகிறது. இந்த வெளிப்புற ஓட்டில் பல நுண்துளைகள் ( 0.04 முதல் 0.05 மி.மீ குறுக்களவு ) உள்ளன. சுமார் 7500 நுண்துளைகள் உள்ளன. முட்டையின் அகன்ற முனையில் நிறைய துளைகள் இருக்கின்றன. இந்த அமைப்புகளின் கூட்டே நாம் காணும் முட்டை ஆகும். ஆக, முட்டையின் வடிவம் அதிலுள்ள கருவுணவின் அளவு அண்டப் படலங்களின் அமைப்பு, அவ்வுயிரியின் கருநிலை வளர்ச்சி ஆகியவற்றைப் பொறுத்து அமைகிறது.

கோழி முட்டையின் மஞ்சள் நிறக் கோளம்தான் உண்மையான அண்டம். அதைச் சுற்றியுள்ள ஆல்புமின், உள், வெளி ஓட்டுச் சவ்வுகள், ஓடு ஆகியவை மூன்றாம் நிலை அண்டப் படலங்கள் ஆகும்.