Monday, 23 March 2020

மூலக்கூறு ஆய்வில் முதன்மை பெண்மணி

அறிவியல் உங்கள் விருப்பப்பாடமா? இங்கே விடுகதைபோல கொடுக்கப்படும் குறிப்புகள் எந்த விஞ்ஞானியைக் குறிக்கிறது என்று உங்களால் கண்டுபிடிக்க முடியுமா?

விஞ்ஞானி விடுகதை

* நான் எகிப்தில் பிறந்தவள்.

* இங்கிலாந்து குடியுரிமை பெற்றவள்.

* ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் ஆண்களுடன் இணைந்து படிப்பதற்காக போராடி வேதியியல் துறையில் படித்த முதல் பெண் என்ற பெருமை பெற்றேன்.

* பென்சிலின் மற்றும் இன்சுலின் மூலக்கூறு கட்டமைப்பை கண்டுபிடித்தேன்.

* அறிவியல் துறையில் நோபல் பரிசு பெற்ற முதல் இங்கிலாந்து பெண் என்ற பெருமைக்குரியவள் நான்.

நான் யார் கண்டுபிடித்துவிட்டீர்களா?

விடை :

நான்தான் டோரத்தி ஹாட்கின்.

வாழ்க்கை குறிப்புகள்

டோரத்தி எகிப்தின் கெய்ரோவில் 1910-ம் ஆண்டு மே 12-ந் தேதி பிறந்தவர். அவரது பெற்றோரான ஜான் மற்றும் கிரேஸ் ஆகியோர் தொல்லியல் ஆய்வாளர்கள். அவருக்கு 4 வயதாக இருந்தபோது முதல் உலகப்போர் சமயத்தில் அவரது பெற்றோர் இங்கிலாந்தில் குடியேறினார்கள்.

டோரத்தி வேதியியல் மீது ஆர்வம் கொண்டிருந்ததை அவரது சிறிய வயது செயல்கள் காண்பிக்கின்றன. 10 வயதிலேயே அவர் படிகங்களை எரித்து நிகழும் மாற்றங்களை ஆச்சரியமாகப் பார்த்தார். உற்றுக் கவனித்து என்ன நடக்கிறது? என்பதை ஆராய்ந்தார். அவரது செயல்களை ஊக்குவித்து ஆதரவு தெரிவித்தவர் அவரது அன்னை.

அந்தக் காலத்தில் ஆண்களுடன் சேர்ந்து பெண்கள் அறிவியல் படிக்க முடியாத நிலை இருந்தது. டோரத்தி மிகுந்த போராட்டத்துடன் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் வேதியியல் படிக்கும் வாய்ப்பை பெற்றார். அவர் வேதியியல் பட்டப்படிப்பை படித்து முடித்து, வேதிப்பொருட்களின் கட்டமைப்பை ஆராய்ந்து பார்த்த முதல் பெண்மணியாக டோரத்தி கருதப்படுகிறார்.

எக்ஸ்ரே படிகவியல் முறையில் அணுகட்டமைப்பு, மூலக்கூறு கட்டமைப்பை ஆராய்ந்தார். இதன் அடிப்படையில் கதிர்களின் வேறுபாட்டை பகுப்பாய்வு செய்தார்.

பென்சிலின் கட்டமைப்பை இவர் 1945-ல் கண்டுபிடித்தார். அதுபோல வைட்டமின்-பி12 கட்டமைப்பை 1950-ல் கண்டறிந்தார்.

இதுபோல இன்சுலின் படிக கட்டமைப்பை கண்டுபிடிக்க 35 ஆண்டுகள் உழைத்தார். அதற்கு 4 ஆண்டுகளுக்குப் பிறகு இளம் ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து கொலஸ்டிரால் மற்றும் வைட்டமின்-டி ஆகியவற்றின் மூலக்கூறு கட்டமைப்பையும் கண்டுபிடித்து வெளியிட்டார்.

அவரது ஆய்வுக் கண்டுபிடிப்புகள் 1964-ல் அவருக்கு நோபல் பரிசைப் பெற்றுத் தந்தது. வேறு பல்வேறு கவுரவங்களும் பெற்றுள்ளார். பிரிஸ்டோல் பல்கலைக்கழகத்தின் வேந்தராக 18 ஆண்டுகள் பொறுப்பு வகித்தார்.

இவரது மாணவர்களில் ஒருவராக விளங்கிய மார்க்ரெட் தாட்சர் பின்னாளில் இங்கிலாந்தின் பிரதமராக உயர்ந்தார்.

டோரத்தி 1994-ம் ஆண்டு ஜூலை 29-ந் தேதி மரணம் அடைந்தார்.