Monday 24 February 2020

பசும்தாள் உரம்

இன்று அதிகப்படியான வேதி உரங்களை பயன்படுத்துவதால் மண்வளம் பாதிக்கப்படுவதாக பொதுவான புரிதல் ஏற்பட்டு உள்ளது. இயற்கை உரங்களை பயன்படுத்தும் எண்ணம் அதிகரித்து உள்ளது. இயற்கை உரங்கள் தாவரங்களுக்கு அதிக அளவில் ஊட்டப் பொருட்களை கொடுக்கக்கூடியதாகும். இலைதழைகளை மக்கச் செய்து உருவாக்கும் உரங்களும், கால் நடைகளின் சாணங்களை கலந்து உருவாக்கும் தொழு உரங்களைக் கொண்டும் மண்ணை வளப்படுத்துவதும், விவசாய உற்பத்தியை பெருக்குவதும் இயற்கை வேளாண்மையாகும்.

கால்நடைத் தீவனம், சாணம், சிறுநீர் மூன்றையும் கலந்து உருவாக்கப்படும் மக்கிய கலவையே தொழு உரம் எனப்படுகிறது. நன்றாக பதப்படுத்தப்பட்ட தொழு உரத்தில் பொட்டாசியம் ஆக்சைடு மற்றும் பாஸ்பரஸ் பென்டாக்சைடு போன்ற வேதிப்பொருட்கள் காணப்படுகின்றன. இவை நேரடி வேதி உரங்களுக்கு சிறந்த இயற்கை மாற்றாக விளங்குகிறது.

இவை நன்கு மக்கிய உரமான பின்பு இதில் இன்னும் வேதி ஊட்டப்பொருட்கள் மிகுந்துவிடுகிறது. காய்கறி கழிவுகள், விலங்கு கழிவுகள், பயிர்களின் கழிவுப் பாகங்களைக் கொண்டு மக்கிய உரங்களை தயாரிக்கலாம். இவற்றை கம்போஸ்ட் உரம் என்றும் அழைப்பார்கள்.

காற்றிலும், மண்ணிலும் வாழும் நுண்ணுயிர்கள் இந்த பொருட்களை சிதைத்து ஊட்டம்மிக்க உரமாக மாற்றுகின்றன. இத்தகைய உயிர்வேதி நிகழ்வாக உருவாகும் இயற்கை உரம், பயிர்களுக்கு முக்கிய ஊட்டச்சத்து தரும் உரமாக கருதப்படுகிறது.

இந்த மக்கிய உரத்தில் 14 சதவீதம் அளவு நைட்ரஜனும், 1.4 சதவீதம் அளவு பொட்டாசியம் ஆக்சைடும், 1 சதவீதம் பாஸ்பரஸ் பென்டாக்சைடும் உள்ளன. இதை சுருக்கமாக என்.பி.கே. உரம் என்றும் குறிப்பிடுவது உண்டு.

இதேபோல ஒரு பயிரை சாகுபடி செய்து அதை நிலத்திலேயே அழுத்தி உழுது, மண்ணிற்கு உரமாக்கிவிட்டால் அதை பசும்தாள் உரம் என்று கூறுவர். இப்படி பசுந் தழைகளை மண்ணில் புதைப்பது மண்ணிற்கு நைட்ரஜன் சத்தை வழங்குகிறது. தாவரத்தின் வளர்ச்சி அதிகமாக இருப்பதற்கும், விளைச்சல் பெருகவும் முக்கியமான சத்து நைட்ரஜன் என்பது இங்கே நினைவூட்டத்தக்கது.

ரசாயன உரத்தை பயன்படுத்தாமலே மண்ணுக்கு நைட்ரஜன் கிடைக்கச் செய்பவை பசுந்தாள் உரங்கள். இதை ஏற்படுத்த அதிக செலவாவதில்லை என்பது குறிப் பிடத்தக்கது. ஆவாரை, எருக்கு, புங்கை, தக்கைப்பூண்டு, சீமை அகத்தி, அவுரி உள்ளிட்ட பல்வேறு பசுந்தழை தாவரங்கள் பசுந்தாள் உரத்திற்காக பயன்படுத்தப்படுகின்றன. நஞ்சைத் தோட்டத்திற்கு கொளுஞ்சி சிறந்தது என்று கூறப்படுகிறது.

இயற்கை உரங்களால் மண்ணை வளப்படுத்தும் மண்புழுக்கள் மற்றும் நன்மை தரும் பூச்சியினங்களும் அழிவதில்லை. அவையும் வேளாண்மை உற்பத்தியை பெருக்கத் துணை செய்கின்றன.

No comments: