Tuesday 10 September 2019

CURRENT AFFAIRS, 2019

உள்நாட்டு உற்பத்தி 5 சதவீதமாகச் சரிவு

ஆகஸ்ட் 30: இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி 2019 ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ஐந்து சதவீதமாகச் சரிந்துள்ளது என்று மத்தியப் புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உள்நாட்டு உற்பத்தி சரிவைச் சந்தித்துள்ளது. சீனாவின் உள்நாட்டு உற்பத்தி ஜூன் வரையிலான காலாண்டில் 6.2 சதவீதமாக உள்ளது.

5 மாநில ஆளுநர்கள் நியமனம்

செப்டம்பர் 2: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஐந்து மாநிலங்களுக்கான ஆளுநர்களை நியமித்திருக்கிறார். ராஜஸ்தான் ஆளுநராகக் கல்ராஜ் மிஷ்ரா, இமாச்சலப் பிரதேசத்தின் ஆளுநராக முன்னாள் மத்திய அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா, தெலங்கானா ஆளுநராக டாக்டர். தமிழிசை சௌந்திரராஜன், மகாராஷ்டிர ஆளுநராகப் பகத் சிங் கோஷ்யாரி, கேரளத்தின் ஆளுநராக ஆரிஃப் முஹம்மது கான் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

20 ஆண்டுகளில் 20 அணு உலைகள்

செப்டம்பர் 4: ரஷ்யா, அடுத்த இருபது ஆண்டு களில் இருபது அணு உலைகளை இந்தியாவில் நிறுவ விருப்பதாகத் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான கூட்டறிக்கையை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோர் ரஷ்யாவில் இரண்டு நாடுகளுக்கு இடையேயான இருபதாம் ஆண்டு உச்சி மாநாட்டில் வெளியிட்டனர்.

வாழும்திறன் கொண்ட நகரங்கள்

செப்டம்பர் 4: 2019-ம் ஆண்டுக்கான உலகளாவிய வாழும்திறன் கொண்ட நகரங்களின் பட்டியலை ‘எகானமிக்ஸ் இன்டலிஜென்ஸ் யூனிட்’ வெளியிட்டுள்ளது. உலகின் 140 நகரங்கள் இடம்பெற்றிருந்த இந்தப் பட்டியலில், வியன்னா, மெல்போர்ன், சிட்னி ஆகிய நகரங்கள் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன. இந்தியாவின் டெல்லி 118-ம் இடத்திலும், மும்பை 119-ம் இடத்திலும் இருக்கின்றன. நிலைத்தன்மை, கல்வி, சுகாதாரம், உள்கட்டமைப்பு, கலாச்சாரம், சுற்றுச்சூழல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

எழுத்தாளர் கிரண் நகர்கர் மறைவு

செப்டம்பர் 5: சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் கிரண் நகர்கர் உடல்நலக் குறைவால் மும்பையில் காலமானார். அவருக்கு வயது 77. இவர் மராத்தி, ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் நாவல்கள், நாடகங்கள், திரைக்கதைகள் ஆகியவற்றை எழுதியிருக்கிறார். ‘சா சக்கம் த்ரேச்சாளிஸ்’, ‘ராவண் அண்ட் எட்டி’, ‘குக்கோல்ட்’ ஆகியவை அவரது படைப்புகளில் முக்கியமானவை.

ப. சிதம்பரத்துக்கு நீதிமன்றக் காவல்

செப்டம்பர் 5: ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரத்தைச் செப்டம்பர் 19 வரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கும்படி, சி.பி.ஐ. நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அவர் திஹார் சிறையில் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த ஐ.என்.எக்ஸ். மீடியா நிதி மோசடி வழக்கில், சிதம்பரத்தின்மீது முதல் குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ. 2017, மே 15 அன்று பதிவுசெய்தது.

சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ராஜினாமா

செப்டம்பர் 6: சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி விஜயா கே. தஹில் ரமானி, மேகாலயா மாநிலத் தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டதை மறுபரிசீலனை செய்யுமாறு உச்ச நீதிமன்ற கொலிஜியத்திடம் கோரியிருந்தார். உச்ச நீதிமன்ற கொலிஜியம் அவரது கோரிக்கையை நிராகரித்ததைத் தொடர்ந்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். தனது ராஜினாமா கடிதத்தைக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கும், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கும் அனுப்பியிருக்கிறார்.

ஜனநாயகம் சமரசம் செய்யப்படுகிறது!

செப்டம்பர் 6: தக்ஷிண கன்னடத் துணை ஆணையர் சசிகாந்த் செந்தில், நாட்டில் ஜனநாயகத்தின் அடிப்படைகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குச் சமரசம் செய்துகொள்ளப்படுவதைக் காரணமாகக் கூறி, தனது இந்திய ஆட்சிப் பணி வேலையை ராஜினாமா செய்திருக்கிறார். கேரளத்தில் இந்திய ஆட்சிப் பணியில் இருந்த கே. கோபிநாத், காஷ்மீரில் கருத்துச் சுதந்திரம் மறுக்கப்பட்டதைக் காரணமாகக் கூறிச் சமீபத்தில் ராஜினாமா செய்திருந்தார். அவரைத் தொடர்ந்து, சசிகாந்த் செந்தில் ராஜினாமா செய்திருக்கிறார்.

சந்திரயான் 2: தொடர்பை இழந்த விக்ரம் லேண்டர்

செப்டம்பர் 7: நிலவுக்கு 2.1 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தபோது, சந்திரயான்-2 விண்கலத்துடன் அனுப்பப்பட்ட ‘விக்ரம் லேண்டர்’, உடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதாக இஸ்ரோ தலைவர் கே. சிவன் அறிவித்தார். தகவல் தொடர்புத் துண்டிப்பு பற்றித் தொடர்ந்து ஆய்வுசெய்து வருவதாக கே. சிவன் தெரிவித்துள்ளார்.

No comments: