Monday 2 September 2019

அடுத்த பத்து ஆண்டுகளுக்கான நாசாவின் ஆய்வுத் திட்டங்கள்

நாசாவின் விண்வெளி ஆய்வு திட்டம்
உலகின் 20 சதவீத ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்து வந்த அமேசான் காடுகள் தீப்பற்றி எரிகிறது. அந்த காட்டுத்தீ இன்னும் ஓய்ந்தபாடில்லை. இது ஒருபுறமிருக்க, துருவப் பனிமலைகள் ஆயிரக்கணக்கான டன் கணக்கில் ஒவ்வொரு நாளும் உருகி ஆறாகி, அந்த தண்ணீரானது உலக அளவில் மக்கள் வாழும் நிலப்பரப்புகளை மெல்ல மெல்ல விழுங்கி வரும் பேராபத்து மற்றொருபுறம் தடையின்றி நடந்தேறி வருகிறது.

பூமியை அழித்துவரும் எண்ணற்ற ஆபத்துகளில் இவை இரண்டு ஒரு சில மட்டுமே. அதனால், நிலவு அல்லது செவ்வாய் போன்ற வேற்று கிரகங்கள் போன்ற பிரபஞ்சத்தின் பிற பகுதிகளில் குடியேறினால் மட்டுமே பூமியிலுள்ள மனித இனமும் இன்ன பிற உயிரினங்களும் தப்பிப் பிழைக்க முடியும் என்பது உறுதியாகிவிட்டது.

அத்தகைய வேற்றுகிரக மற்றும் விண்வெளி பயணத்துக்கும், வேற்று கிரக குடியேற்றத்துக்கும் அவசியமான முன்னேற்பாடுகள் மேற்கொள்ள அமெரிக்காவின் நாசா உள்ளிட்ட உலகின் பல விண்வெளி ஆய்வு நிறுவனங்கள் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, நாசா ஆய்வு மையம் அடுத்த பத்து ஆண்டுகளுக்கு மேற்கொள்ள இருக்கும் ஆய்வுகளுக்காக பல்லாயிரம் கோடி ரூபாய் நிதியை பெற்றுள்ளது. அந்த நிதியுதவியுடன் பிரபஞ்சத்தின் பல ரகசியங்களையும், அதிசயங்களையும் நாசா விரைவில் வெளிசத்துக்கு கொண்டுவரும் என்று உலகமே எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.

பிரபஞ்சத்தின் தோற்றம் முதலான வரலாற்றை படம் பிடிக்கவும், மற்றும் பிரபஞ்சத்தின் கருப்பு பருப்பொருள், ஆற்றல் ஆகியவை இருக்கும் இடங்களை அடையாளம் கண்டு சுட்டிக்காட்டும் வரைபடத்தை உருவாக்கவும் நாசாவுக்கு திட்டம் உள்ளது என்று கூறப்படுகிறது. அடுத்த பத்து ஆண்டுகளுக்கான நாசாவின் மிகப்பெரிய திட்டங்கள் பின்வருமாறு:

1. பார்க்கர் சோலார் திட்டம்:

2018-ம் ஆண்டு ஆகஸ்டு 12-ம் தேதி சூரியனை நோக்கி செலுத்தப்பட்ட சோலார் பார்க்கர் விண்கலம் சூரியனை மொத்தம் 24 முறை சுற்றி வருமாறு திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் சூரியனில் வெளியாகும் சூரியப் புயல்கள் பூமியையும், நம்முடைய தொழில்நுட்பங்களையும் அழித்துவிடாமல் தடுக்கும் பாதுகாப்புகளை ஏற்படுத்திக்கொள்ள உதவும் என்று கூறப்படுகிறது.

2. செவ்வாய் கிரகத்தில் இன்சைட் லேண்டர்:

2018-ம் ஆண்டு மே மாதம் 5-ம் தேதி செவ்வாய் கிரகம் நோக்கி விண்ணில் செலுத்தப்பட்ட இன்சைட் லேண்டர் விண்கலம் (InSight lander) தற்போது அங்கு நிகழும் பூகம்பங்கள் பற்றி ஆய்வு செய்து வருகிறது. இதன் மூலம் செவ்வாயின் உட்கட்டமைப்பு குறித்த தகவல்கள் வெளிச்சத்துக்கு வரும்.

3. மார்ஸ் 2020 ரோவர்:

2020 ஜூலை மாதம் செலுத்தப்பட இருக்கும் இந்த ரோவர் பிப்ரவரி 2021-ல் செவ்வாயில் தரை இறங்கி அங்கு ஏலியன் உயிர்கள் இருக்கின்றனவா என்று ஆய்வு செய்யும். மேலும் மனிதர்கள் செவ்வாயின் நிலத்தில் நடக்க உதவும் தொழில்நுட்பத்தை உருவாக்க இந்த ரோவர் உதவும்.

4. செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம்:

கடந்த வருடம் நிலவுக்கு விண்வெளி ஆய்வாளர்களை மீண்டும் அனுப்பி அங்கு மனித குடியேற்றத்துக்கான தளவாடங்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக நாசா அறிவித்தது. அதற்கு அடுத்தடுத்த வருடங்களில், செவ்வாய் கிரகத்துக்கும் மனித ஆய்வாளர்களை அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

5. நிலவில் இருந்து செவ்வாய் கிரகத்துக்கு விண்வெளியாளர் பயணம்:

வருகிற 2030-களில் நிலவுக்கு செலுத்தப்படுவதாக திட்டமிடப்பட்டுள்ள நிலவுப் பயணமானது, நிலவு மற்றும் செவ்வாயில் உள்ள பொருட்களை வைத்து அங்கு வாழத் தேவையான வசதிகளை உருவாக்கிக்கொள்ள முடியுமா என்ற பரிசோதனை மேற்கொள்ளும் திட்டம் என்று கூறப்படுகிறது.

6. யூரோப்பா நிலவுக்கு பயணத் திட்டம்:

இந்த வருடம் ஜூன் மாதத்தில், அணு சக்தியின் உதவியுடன் பறக்கும் திறனுள்ள ஒரு ஹெலிகாப்டரை சனி கிரகத்தின் நிலவான டைட்டன் மீது பறக்கவிட்டு அங்கு ஏலியன் உயிர்கள் இருக்கின்றனவா என்று ஆய்வு செய்ய உள்ளதாக நாசா அறிவித்தது. அதுமட்டுமல்லாமல், வியாழன் கிரகத்தின் நிலவான யூரோப்பாவில் உயிர்கள் இருக்கின்றனவா என்றும் தேடும் திட்டமும் இருப்பதாக கூறப்படுகிறது.

7. கியூப் சாட் நானோ தொழில்நுட்ப செயற்கைக்கோள் ஆய்வுத்திட்டங்கள்:

அமெரிக்காவில் உள்ள சுமார் 93 நிறுவனங்களுடன் இணைந்து நான்கு அங்குல நீள அகலம் கொண்ட ‘கியூப் சாட்’ (CubeSat) வகை செயற்கைக்கோள்கள் மூலமாக செயல்படுத்த மொத்தம் சுமார் 176 திட்டங்களை வைத்திருக்கிறது நாசா. உதாரணமாக, வருகிற 2020-ம் ஆண்டு, நிலவின் தென் துருவத்தில் ஆய்வுகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

8. பிரபஞ்சத்தின் உயிர்கொண்ட கோள்கள் ஆய்வு 2021:

இன்ப்ரா ரெட் தொழில்நுட்பம் மற்றும் சுமார் 18 கண்ணாடிகள் கொண்ட நாசாவின் ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப் உதவியுடன் நம் பிரபஞ்சத்தில் உள்ள உயிர்கொண்ட கோள்கள், முதல் விண்மீன் மண்டலங்கள் மற்றும் நட்சத்திரங்களின் தோற்றம், கோள்கள் பிறக்கும் விதம் ஆகிய பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

9. சைக் (Psyche) கோள் குறித்த ஆய்வு 2022:

பூமியைப்போல தன்னுள்ளே இரும்பு மற்றும் நிக்கெல் ஆகியவற்றைக் கொண்ட ‘சைக்’ எனும் கோளில் ஆய்வு செய்தால் நம் சூரிய மண்டலத்தின் தொடக்ககால வருடங்கள் குறித்த குறிப்புகளைக் கண்டறியலாம் என்கிறார் நாசா ஆய்வாளர் லிண்டா எல்கின்ஸ். இதற்காக ஒளியின் உதவியுடன் தகவல்களை அனுப்பும் ஒரு புதிய வகை விண்கலத்தை வருகிற 2022-ம் ஆண்டு நாசா அனுப்பவுள்ளது.

10. டைட்டன் நிலவுக்கு பயணத் திட்டம் 2026:

சனி கிரகத்தின் நிலவான டைட்டன் பனிக்கட்டி, திரவ மீத்தேன் குளங்கள் மற்றும் அடர்த்தியான நைட்ரஜன் வாயுவால் ஆன வளி மண்டலம் ஆகியவற்றைக் கொண்டது. டைட்டனுடைய பனிக்கட்டி மேற்பரப்புக்கு கீழே சுமார் 60 மைல் ஆழத்தில் திரவத் தண்ணீர் இருக்கலாம் என்று கருதுகிறார்கள் விஞ்ஞானிகள். அதனால் அங்கு ஏலியன் உயிர்கள் இருக்கலாம் என்றும், அதனைக் கண்டறிய தன்னைத்தானே உந்தித் தள்ளிக்கொள்ளும் தும்பி என்று அழைக்கப்படும் ஒரு விண்கலத்தை வருகிற 2026-ம் ஆண்டு அனுப்பி டைட்டனில் ஆய்வுகள் மேற்கொள்ள நாசா திட்டமிட்டுள்ளது.

மொத்தத்தில் அடுத்த பத்து ஆண்டுகளில் நம் பிரபஞ்சம், நட்சத்திரங்கள் மற்றும் கோள்கள் குறித்த பல அரிய மற்றும் அதிசயமான உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும் என்பது உறுதி.



No comments: