கடந்து வந்த பாதை | ஜூன் 2-8 -2018

KALVISOLAI - கல்விச்சோலை - kalvisolai gk
கடந்து வந்த பாதை | ஜூன் 2-8 | போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவ- மாணவிகள் பயன்பெறும் வகையில் முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு இங்கே வழங்கப்படுகிறது. ஜூன் 2-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு இது...

 1. சிங்கப்பூரில் அமெரிக்க ராணுவ மந்திரி ஜெனரல் ஜேம்ஸ் மேட்டிசை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார். அங்கு மகாத்மா காந்தி அஸ்தி கரைத்த இடத்தில் நினைவுச்சின்னத்தையும் அவர் திறந்துவைத்தார். (ஜூன் 2)
 2. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து காயம் காரணமாக விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டார். (ஜூன் 2)
 3. சர்ச்சைக்குரிய தென்சீனக் கடல் பகுதியில் ஏவுகணைகளை நிறுத்திவைத்து, சீனா அண்டை நாடுகளை மிரட்டுகிறது என அமெரிக்கா பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியது. (ஜூன் 2)
 4. ஏப்ரல் மாதத்தில் கம்பி, தகடு உள்ளிட்ட உருக்குப் பொருள்கள் ஏற்றுமதி 25 சதவீதம் சரிவடைந்து 5.58 லட்சம் டன்னாக குறைந்தது. (ஜூன் 3)
 5. அணு ஆயுதங்களைச் சுமந்து சென்று தாக்கும் அக்னி-5 ஏவுகணை சோதனை ஒடிசா மாநிலம் பாலாசூர் அருகே உள்ள அப்துல் கலாம் தீவில் வெற்றிகரமாக நடந்தது. (ஜூன் 3)
 6. தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடு பற்றிய விசாரணையைத் தொடங்கிய நீதிபதி அருணா ஜெகதீசன், போலீசாரிடம் விசாரணை நடத்தப்படும் என அறிவித்தார். (ஜூன் 4)
 7. ‘நீட்’ தேர்வு முடிவுகள் வெளியாயின. அதில் 56.27 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். அகில இந்திய அளவில் பீகார் மாணவி கல்பனா குமாரி முதலிடம் பிடித்தார். தமிழகத்தைச் சேர்ந்த கீர்த்தனா 12-ம் இடம் பிடித்தார். (ஜூன் 4)
 8. காவிரி விவகாரத்தில் இணக்கமான நல்லுறவு ஏற்படவேண்டும் என்றும், எனவே தமிழக அரசுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார் என்றும் நடிகர் கமல்ஹாசன் உடனான சந்திப்புக்குப் பின் கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி அறிவித்தார். (ஜூன் 4)
 9. டெல்லியில் நடைபெற்ற அனைத்து மாநில கவர்னர்கள் மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, மத்திய அரசின் திட்டங்களால் மக்கள் பலனடைவதற்கு தங்களது பல்துறை அனுபவங்களை கவர்னர்கள் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். (ஜூன் 4)
 10. தமிழகம் முழுவதும் மக்காத பிளாஸ்டிக் பொருட்களைத் தயாரிக்கவோ, பயன்படுத்தவோ அடுத்த ஆண்டு ஜனவரி முதல் தடை விதிக்கப்படுவதாக சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். (ஜூன் 5)
 11. ஏர்செல்- மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப. சிதம்பரம் அமலாக்கப் பிரிவு இயக்குனரகத்தில் ஆஜர் ஆனார். அவரிடம் பல மணி நேரம் கிடுக்கிப்பிடி விசாரணை நடைபெற்றது. (ஜூன் 5)
 12. கச்சா எண்ணெய் விலை மற்றும் ரூபாய் மதிப்பு நிலவரங்களால் நடப்புக்கணக்குப் பற்றாக்குறை 3 ஆயிரத்து 120 கோடி டாலர் வரை உயரும் என இந்தியா ரேட்டிங்ஸ் நிறுவனம் மதிப்பீடு செய்தது. (ஜூன் 5)
 13. மத்திய அரசுப் பணிகளில் பதவி உயர்வில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கியது. (ஜூன் 5)
 14. ரபேல் போர் விமான பேரத்தில் ஊழல் நடைபெறவில்லை என்று ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் திட்டவட்டமாகக் கூறினார். (ஜூன் 5)
 15. தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்த முடியாது என்றும், உண்மையைக் கண்டறிய வேண்டும் என்றும் ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்துத் தெரிவித்தனர். (ஜூன் 6)
 16. கடன் வட்டி விகிதங்கள் பற்றிய தனது கொள்கை முடிவுகளை பாரத ரிசர்வ் வங்கி அறிவித்தது. இவ்வங்கி நான்கரை ஆண்டு களுக்குப் பின் முதல்முறையாக குறுகிய கால கடன் வட்டி விகிதங்களை 0.25 சதவீதம் உயர்த்தியது. (ஜூன் 6)
 17. உலகில் அதிகம் சம்பாதிக்கும் டாப்-100 விளையாட்டு வீரர் களின் பட்டியலில் இந்தியாவில் இருந்து கிரிக்கெட் வீரர் விராட் கோலி மட்டும் இடம்பிடித்தார். அவர் ஆண்டுக்கு ரூ. 160 கோடி வருவாய் ஈட்டுகிறார். (ஜூன் 6)
 18. சர்க்கரை ஆலைகளுக்குப் புத்துயிரூட்ட ரூ. 8500 கோடியிலான திட்டத்துக்கும், கிராமப்புற அஞ்சல் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கவும் மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. (ஜூன் 6)
 19. கர்நாடக மாநிலத்தில் மந்திரி பதவி கிடைக்காததால் காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி உயர்த்தினர். 2 முன்னாள் மந்திரிகள் தலைமையில் தனித்தனியாகக் கூடி ஆலோசனை நடத்தினர். இது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. (ஜூன் 7)
 20. டெல்லியில் பிரதமர் மோடியை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் சந்தித்தார். அப்போது, தூத்துக்குடி கலவரம் உள்ளிட்ட தமிழகப் பிரச்சினைகள் குறித்து அவர் தனியாக ஆலோசனை நடத்தினார். (ஜூன் 7)
 21. மராட்டிய மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். விழாவில் பேசிய முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, சகிப்புத்தன்மை இல்லை என்றால் இந்தியா சீர்குலைந்துவிடும் என்றார். (ஜூன் 7)
 22. குறுகிய கால கடன் வட்டி விகிதங்களை ரிசர்வ் வங்கி உயர்த்தியதைத் தொடர்ந்து வீட்டுக்கடன் வட்டி விகிதங்களை வங்கிகள் உயர்த்தின. (ஜூன் 7)
 23. உலகின் 200 தலைசிறந்த பல்கலைக்கழகங்களின் தரவரிசைப் பட்டியலை இங்கிலாந்தைச் சேர்ந்த குவாக்கோரெல்லி சைமண்ட்ஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட்டது. அதில் மும்பை இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், பெங்களூரு இந்திய அறிவியல் கல்வி நிறுவனம், டெல்லி இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் ஆகியவை இடம்பிடித்தன. (ஜூன் 7)
 24. மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க இயலாது என்றும், டெல்டா மாவட்ட குறுவை சாகுபடிக்காக விவசாயிகளுக்கு ரூ. 115 கோடியில் குறுவை தொகுப்புத் திட்டம் அமல்படுத்தப்படும் என்றும் சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். (ஜூன் 8)
 25. சென்னையில் நடைபெற்ற சர்வதேசக் கருத்தரங்கில் பேசிய மத்திய பாதுகாப்புத் துறை மந்திரி நிர்மலா சீதாராமன், இந்தியா- சீனா இடையேயான உறவு மேம்பட்டு வருவதாகக் கூறினார். (ஜூன் 8)
 26. நம் நாட்டில் 2017- 2018-ம் நிதியாண்டில் அன்னிய நேரடி முதலீடு 6 ஆயிரத்து 196 கோடி டாலராக உயர்ந்துள்ளது என மத்திய அரசு தெரிவித்தது. (ஜூன் 8)

Comments