Monday 12 March 2018

ரத்தம் சுவாரசியங்கள்


ரத்தம் சுவாரசியங்கள் | நம் உடல் உறுப்புகளின் இயக்கத்திற்கு தேவையான ஆற்றலை தருவது ரத்தம். ஒவ்வொரு உறுப்புக்கும் ரத்தம் சீராகச் சென்றடையாவிட்டால் உறுப்பு முடக்கம் உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். நம் உடலுக்கு அத்தியாவசியப் பொருளாக இருக்கும் ரத்தம் பற்றிய சுவாரசியங்களை பார்ப்போம்..! ரத்தத்தில் உள்ள பொருட்கள்: ரத்த சிவப்பு அணுக்கள், ரத்த வெள்ளை அணுக்கள், பிளேட்லெட்டுகள் என ரத்தத்தில் மூன்று வகையான அணுக்கள் உள்ளன. அவை தவிர, திரவ நிலையில், 'பிளாஸ்மா' என்ற பொருளும் உள்ளது. உற்பத்தியாகும் இடம்: எலும்புகளுக்கு நடுவில் வெற்றிடம் இருக்கும். அந்த வெற்றிடத்தைச் சுற்றி, எலும்பு மஜ்ஜை இருக்கும். எலும்பு மஜ்ஜையில் ரத்த சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், 'பிளேட்லெட்'கள் உற்பத்தியாகின்றன. சிவப்பு நிறம் ஏன்?: ரத்த சிவப்பு அணுக் களின் உள்ளே; 'ஹீமோகுளோபின்' என்ற வேதிப்பொருள் உள்ளது. அதுதான், ரத்தத்திற்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது. ஹீமோகுளோபின் பணி: இது உடலில் உள்ள அனைத்து செல்களுக்கும், ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைந்தால், ரத்த சோகை நோய் ஏற்படும். ரத்த சோகை, ரத்த இழப்பு ஏற்படும்போது, ரத்த சிவப்பு அணுக் களைச் செலுத்துவர். ரத்தத்தின் வகைகள்: ரத்தம் என்பது பொதுவாக 4 வகைப்படும். அதாவது ஏ, பி, ஓ, ஏபி ஆகும். இந்த 4 வகைகளில் மனிதன் ஏதாவது ஒரு வகையாகத்தான் இருப்பான். அதிலும் ஏ பாசிடிவ், ஏ நெகடிவ், பி பாசிடிவ், பி நெகடிவ், ஓ பாசிடிவ், ஓ நெகடிவ், ஏபி பாசிடிவ், ஏபி நெகடிவ் ஆகிய ரத்த அமைப்புகள் உள்ளன. ரத்த அணுக்களின் வேலை: ரத்த வெள்ளை அணுக்களை, 'படை வீரர்கள்' என்று அழைப்பர். ஏனெனில், உடலுக்குள் நுழையும் நோய்க்கிருமிகளை எதிர்த்து போராடுபவை, ரத்த வெள்ளை அணுக்களே. ரத்தத்தில் உள்ள, 'பிளேட்லெட்' அணுக்கள், உடலில் காயம் ஏற்பட்டவுடன், ரத்தம் வெளியேறுவதை இயற்கையாகவே தடுக்கும் அமைப்பாக செயல்படுகிறது. உடல் செல்களுக்கு ஆக்சிஜனை கொண்டு சேர்ப்பதும், கார்பன்டைஆக்சைடு வாயுவை சுமந்து சென்று வெளியேற்றுவதும் சிவப்பு செல்களின் பணியாகும். ரத்த ஓட்டம்: உடலில் ரத்த ஓட்டம் சீராக இல்லையெனில், சிறுநீரகப் பிரச்சினை, உயர் ரத்த அழுத்தம், நரம்பு வீக்கம் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். நல்ல உணவுகளை சாப்பிடுவது, உடற்பயிற்சி செய்வது போன்ற சில வழிமுறைகளைப் பின்பற்றினால், ரத்த ஓட்டத்தை அதிகரிக்கலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். 'பிளாஸ்மா' என்றால் என்ன?: ரத்தத்தில் உள்ள திரவப் பொருள்தான் பிளாஸ்மா. 100 மில்லி லிட்டர் ரத்தத்தில், 50 சதவீதம் பிளாஸ்மாவும், 40 சதவீதம் ரத்த சிவப்பு அணுக்களும் உள்ளன. மற்ற அணுக்கள், 10 சதவீதம் இருக்கும். பிளாஸ்மாவில், தண்ணீர், வைட்டமின்கள், தாதுப் பொருட்கள், ரத்தத்தை உறைய வைக்கக்கூடிய காரணிகள், புரதப் பொருட்களும் இருக்கின்றன. ரத்த அழுத்தம் என்பது என்ன?: உடலின் எல்லா உறுப்புகளுக்கும், ரத்தத்தை இதயம், 'பம்ப்' செய்யும்போது ஏற்படும் அழுத்தமே, ரத்த அழுத்தம். இதயத்திலிருந்து நிமிடத்திற்கு, ஐந்து லிட்டர் ரத்தம், எல்லா உறுப்புகளுக்கும் செல்கிறது. உடலில் ரத்தம் பயணம் செய்யும் தூரம்: ஒரு சுழற்சியில் ரத்தம் பயணம் செய்யும் தொலைவு, ஒரு லட்சத்து, 19 ஆயிரம் கி.மீ. தூரத்திற்கு சமமாகும். ரத்தக் குழாய்களுக்குள் செல்லும்போது, அதன் வேகம் மணிக்கு, 65 கி.மீ., மோட்டார் சைக்கிளின் சராசரி வேகத்தை விட அதிகமாகும்.

No comments: