Tuesday 20 February 2018

உலகில் அதிக மக்களால் பேசப்படும் மொழி


1. 'சர்வதேசத் தாய்மொழி நாளை' ஐ.நா. சபையின் துணை அமைப்பான யுனெஸ்கோ எந்த நாளில் கொண்டாடுகிறது?
2. உலகில் அதிக ஆட்சி மொழிகளைக் கொண்ட நாடு இந்தியா என்று தவறாக நினைத்திருப்போம். இல்லை, இந்தியாவில் இருப்பவை 2 ஆட்சி மொழிகள் 22 அலுவல் மொழிகள். உலகில் அதிக அளவில், 16 ஆட்சி மொழிகளைக் கொண்டது ஒரு ஆப்பிரிக்க நாடு. 2013-ம் ஆண்டு மே மாதம் அந்த அங்கீகரத்தை வழங்கிய அந்த நாட்டின் பெயர் என்ன?
3. உலகில் அதிக மக்களால் பேசப்படும் மொழி ஆங்கிலம் அல்ல, சீனம். 110 கோடிப் பேர் சீன மாண்டரின் மொழியைப் பேசுகிறார்கள். தாய்மொழியைக் கணக்கில் எடுத்தால் இரண்டாவது இடத்திலும் ஆங்கிலம் இல்லை. ஸ்பானிய மொழியே 40 கோடிப் பேரால் பேசப்படுகிறது. அதற்குப் பிறகே ஆங்கிலம் வருகிறது. சரி, அமெரிக்காவில் அதிகம் பேசப்படும் மூன்றாவது மொழி எது?
4. உலகிலுள்ள பெரும்பாலான நாடுகளை உறுப்பினராகக் கொண்டது ஐ.நா. சபை. அந்த சபையில் அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் என்னென்ன?
5. இத்தாலியத் தலைநகர் ரோமுக்குள் உள்ள தன்னாட்சிப் பிரதேசம் வாத்திகன் நகரம். உலகின் மிகச் சிறிய சுதந்திர நாடாகக் கருதப்படும் இந்த நகரத்தின் ஏ.டி.எம்.களில் ஒரு சிறப்பு வசதி உண்டு. அது என்ன?
6. உலகில் 7,105 மொழிகள் பேசப்படுகின்றன. உலக மொழிகளில் பாதிக்கும் குறைவான மொழிகளுக்குத்தான் எழுத்து வடிவம் இருக்கிறது. 1950-க்குப் பிறகு உலகில் 360 மொழிகள் அழிந்திருக்கின்றன. சராசரியாக எந்தக் கால இடைவெளியில் ஒரு மொழி தற்போது அழிவதாகக் கணிக்கப்பட்டுள்ளது?
7. உலகில் பேசப்படும் மொழிகளில் கிட்டத்தட்ட பாதி மொழிகள் (3,200) இந்தப் பகுதியில் பேசப்படுகின்றன. நில நடுக்கோட்டுக்குப் பக்கத்தில் இந்த நிலப்பரப்பு அமைந்திருப்பதும், பன்மயமான மக்கள் குழுக்கள் இங்கு வாழ்வதுமே இதற்குக் காரணம். உலகில் அதிக மொழிகள் பேசப்படும் இந்தப் பிராந்தியத்தின் பெயர் என்ன?
8. சிங்கப்பூர், இலங்கையில் தமிழ் ஓர் ஆட்சி மொழி. மலேசியா, தென்னாப்பிரிக்கா, மொரிஷியஸ், கனடா ஆகிய நான்கு நாடுகளில் சிறுபான்மை மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர இரண்டு ஆப்பிரிக்க நாடுகளில் தமிழ் பண்பாட்டு மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அந்த நாடுகள் எவை?
9. ஆல்பா, ஒமேகா என்ற சொற்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்போம். இவை இரண்டையும் முதல், கடைசி எழுத்துகளாகக் கொண்ட மொழி எது?
10. உலகில் மொழிப் பன்மை மிகுந்த நாடு இது. இங்கே 850 மொழிகள் பேசப்படுவதாகக் கணிக்கப்பட்டுள்ளது. அதாவது, உலகில் பேசப்படும் மொழிகளில் 12 சதவீதம். தொடக்கக் கல்வி, ஆரம்பக் கல்வி மட்டும் 350-400 மொழிகளில் கற்றுத் தரப்படும் இந்த நாட்டின் பெயர் என்ன?

விடைகள்:

1. பிப்ரவரி 21
2. ஸிம்பாப்வே
3. மாண்டரின் - சீனம்
4. ஆங்கிலம், அரபி,மாண்டரின், ஃபிரெஞ்சு,ரஷ்யன், ஸ்பானியம்
5. தற்போது பேசப்படாத செவ்வியல் மொழியான லத்தீனில் தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம்.
6. சராசரியாக இரண்டு வாரங்கள்
7. ஆசிய பசிஃபிக் பிராந்தியம்
8.செஷெல்ஸ் தீவு,ரியூனியன் தீவு.
9. கிரேக்கம்
10. பப்புவா நியூ கினி.

No comments: