Monday 16 September 2019

புவிசார் குறியீட்டின் முக்கியத்துவம்

பண்டைய கலை, கைவினை பொருட்களை பாதுகாத்து, சந்தைபடுத்த புவிசார் குறியீடு எவ்வாறு உதவி செய்கிறது? புவிசார் குறியீட்டின் முக்கியத்துவம் என்ன?

உலக வர்த்தக நிறுவனத்தின் உறுப்பு நாடுகளிடையே ஏற்பட்ட வர்த்தகம் தொடர்பான அறிவுசார் சொத்துரிமை ஒப்பந்தம், அறிவுசார் சொத்துரிமைகள் பற்றிய மிக முக்கியமான பன்னாட்டு ஒப்பந்தம் ஆகும். இதில் புவிசார் குறியீடு பெற்ற பண்டங்களுக்கான குறைந்தபட்ச பாதுகாப்பு விதிகள் வகுக்கப்பட்டு உள்ளது. மது வகைகளுக்கு கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. உலக வர்த்தக நிறுவன உறுப்பினர் நாடான இந்தியாவின் ‘தனித்துவம் மிக்க பாரம்பரிய பண்டங்ளை’ பாதுகாக்க சட்டம் இயற்றியுள்ளது. காப்புரிமை மற்றும் புவிசார் குறியீடு பற்றிய நிபுணர் சுப்ரீம்கோர்ட்டு வழக்கறிஞர் விஜய் பால் டால்மியா கூறுகையில், ‘ஒரு புவிசார் குறியீடு என்பது ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பை சேர்ந்த அப்பகுதியின் தனித்தன்மைகள் அல்லது பெயரை கொண்ட பண்டங்களுக்கான குறியீடு ஆகும்.

புவிசார் குறியீட்டுக்கு தகுதியான பொருளுக்கு அதை போன்ற இதர பண்டங்களில் இருந்து வேறுபடுத்தி காட்டும் குணநலன்கள் இருக்க வேண்டும். அது காலநிலை சூழல், மண் வளத்தின் தனித்தன்மை (விவசாய பண்டங்களுக்கு) அல்லது தனித்துவம் கொண்ட தயாரிப்பு முறை அல்லது ஒரு பகுதியில் பாரம்பரியமாக வளர்த்தெடுக்கப்பட்டு தொடர்ந்து பயன்படுத்தப்படும் திறன்கள் போன்றவையாக இருக்கலாம்.” என்கிறார் புவிசார் குறியீட்டு பதிவேட்டின் துணை பதிவாளர் சின்னராஜா ஜி நாயுடு.

உதாரணமாக காஞ்சீபுரம் பட்டுக்கு, அதன் தனித்துவமான பாரம்பரியத்திற்காக புவிசார் குறியீடு அளிக்கப்பட்டு உள்ளது. தூய மல்பெரி பட்டு நூலை கொண்டு, மூன்று நெசவு முறையில், மூன்று நாடாக்களை கொண்டு நெய்யப்படுகிறது. ‘இதை எந்திரங்கள் மூலம் நெய்வது மிகவும் கடினமாகும். பல வருட கடும் உழைப்பை கொண்டு காஞ்சீபுரத்தில் இது உருவாக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான வருடங்களாக ஒரே தரத்தை நாங்கள் அளித்து வருகிறோம்’ என்கிறார் நாயுடு.

‘புவிசார் குறியீடு பெறப்பட்ட பின், அதே வகையான, தரம் குறைந்த பண்டங்களை தடை செய்ய முடியும். இதன்மூலம் கிராமப்புறங்களில் உருவாக்கப்படும் புவிசார் குறியீடு பெற்ற பண்டங்களின் சந்தை விரிவடைந்து, அந்த பகுதியின் பொருளாதாரம் வளரும்’ என்று தமிழகத்தை சேர்ந்த 18 பண்டங்களுக்கு புவிசார் குறியீடு பெற காரணமாக இருந்த புவிசார் குறியீடு வக்கீல் சஞ்சய்காந்தி கூறுகிறார்.

உற்பத்தியாளர் அமைப்புகளுக்கு, கூட்டுறவு சங்கங்களுக்கு அல்லது திறன் கொண்ட குழுவினருக்கு புவிசார் குறியீடு வழங்கப்படுகிறது. தனிநபர்களுக்கு அளிக்கப்படுவதில்லை. அந்த அமைப்பு அல்லது சங்கம், பரிந்துரைக்கப்பட்ட தரத்தை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். மீறல்களை புவிசார் குறியீட்டு அமைப்பின் கவனத்திற்கு எடுத்துச்செல்ல வேண்டும்.

No comments: