Monday, 16 September 2019

பாரம்பரியத்தை காக்கும் புவிசார் குறியீடு முறை

புவிசார் குறியீடு,
தமிழகத்தில் மேலும் 2 தனித்துவமிக்க பாரம்பரிய பொருட்களுக்கு புவிசார் குறியீடு அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால் அரசு இவைகளுக்கு ஒரு முத்திரை மற்றும் இணை வாக்கியம் அளித்தால் தான் இவற்றை சந்தைப்படுத்த முடியும்.

சென்ற வாரம், தமிழகத்தை சேர்ந்த மேலும் 2 பாரம்பரிய பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. கைகளால் செய்யப்படும் திண்டுக்கல் பூட்டு மற்றும் அதன் 200 வருட உற்பத்தி முறை மற்றும் செட்டிநாட்டை சேர்ந்த வண்ணங்கள் நிறைந்த கட்டம் போட்ட, பருத்தியால் நெய்யப்பட்ட கண்டாங்கி சேலைகள்.

திண்டுக்கல் பூட்டுக்களை பற்றிய குறிப்புகள் 19-ம் நூற்றாண்டின் ஆங்கிலேய அரசிதழ்களில் காணப்படுகின்றன. 10 வயதில் தனது தந்தையின் பட்டறையில் சேர்ந்து, இன்றும் அதே தொழிலில் ஈடுபட்டுள்ள முருகேசன் (49) கூறுகையில், ‘1980-ம் ஆண்டு சுமார் 200 பேர் இந்த தனித்துவமான பூட்டை செய்து வந்தனர். இன்று 20-க்கும் குறைவானவர்களே உள்ளனர். இரும்பு, பித்தளை மற்றும் செம்பினால் செய்யப்படும் இந்த பூட்டுகள், ரூ.400 முதல் ரூ.2,000 வரை கிடைக்கின்றன. சிறைச்சாலைகள், கிடங்குகள், கல்லூரிகளில் திண்டுக்கல் பூட்டுக்கு தேவை அதிகமாக உள்ளது. இந்த பூட்டு தனித்துவம் மிக்கது என்பதால் மாற்றுச்சாவி கொண்டு இதை திறக்க முடியாது. புவிசார் குறியீடு கிடைத்ததால் இதன் விற்பனை அதிகரித்து, இந்த தொழிலை விட்டு சென்றவர்களை மீண்டும் திரும்பச்செய்யும்’ என்று தெரிவித்தார்.

தமிழகத்திற்கு மொத்தம் 33 புவிசார் குறியீடுகள் கிடைத்துள்ளன. கலாசார ரீதியாக தமிழகத்தின் நீட்சியாக உள்ள புதுச்சேரிக்கு இரண்டு கிடைத்துள்ளதால் மொத்தம் 35 ஆக உள்ளது. இந்த பிராந்தியத்தின் தனித்துவமான கலாசாரம், பாரம்பரியம், கைத்திறன் மற்றும் புவியமைப்பின் விசித்திரமான தன்மை ஆகியவற்றிற்கு சாட்சியாக இவை உள்ளன.

டார்ஜிலிங் தேயிலை, பாஸ்மதி அரிசி, காஷ்மீரி பஷ்மினா சால்வை, காஞ்சீபுரம் பட்டுப் புடவை, கங்க்ரா தேயிலை, கோவாவின் பென்னி அல்போன்சா மாம்பழம், ஆழப்புலாவின் பச்சை ஏலக்காய், கூர்க் ஏலக்காய், கோலாப்புரி செருப்பு மற்றும் ரசகுல்லா போன்ற பல வகையான இந்திய பொருட்களுக்கு புவிசார் குறியீடு அளிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் புவிசார் குறியீடு அளிக்கப்பட்ட 359 பொருட்கள் உள்ளன.

இவற்றில் 14 இத்தாலி, பிரான்ஸ், போர்ச்சுகல், மெக்சிகோ, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து வந்தவை ஆகும்.

(முழு பட்டியலுக்கு ‘கிராபிக்ஸ்’ படத்தை காணவும்).

புவிசார் குறியீடு பெற அனைத்து பொருட்களும் ஐந்து வகைகளாக பிரிக்கப்படுகின்றன. விவசாயம் சார்ந்த, கைவினைகள், இயற்கையாக கிடைப்பவை, உற்பத்தி செய்யப்படுபவை மற்றும் உணவுப்பொருள் ஆகிய ஐந்து பிரிவுகள். இந்தியாவில் பெரும்பாலான பொருட்கள் விவசாயம் சார்ந்த மற்றும் கைவினைப்பிரிவுகளில் உள்ளன.

விண்ணப்பம் சரியாக இருந்து, அந்த பொருள் அனைத்து விதிமுறைகளுக்கும் பொருந்தி வந்தால், ஆறு மாதங்களில் ஒப்புதல் கிடைக்கும். புவிசார் குறியீடு பெற தற்போது 100 பண்டங்களுக்கு விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டு உள்ளன. இவற்றில் தமிழகத்தில் இருந்து 20 வந்துள்ளன என்று புவிசார் குறியீட்டு பதிவேட்டின் துணை பதிவாளர் சின்னராஜா ஜி நாயுடு தெரிவித்தார்.

இந்தியாவில், அனைத்து மாநிலங்களிலும் நூற்றுக்கணக்கான வாழை மர வகைகள் உள்ளன. காலநிலை சூழல்கள், மண் வளம், மணம், மருத்துவக்குணங்கள் போன்றவற்றில் ஒவ்வொன்றும் தனித்துவமானவை. நன்கன்கூடு வாழை (ஆந்திரா), விருபாச்சி மலை வாழை (தமிழ்நாடு), சிறுமலை வாழை (தமிழ்நாடு), கமலாப்பூர் செவ்வாழை (கர்நாடகா), செங்கலிக்கோடன் நேந்திர வாழை (கேரளா), ஜல்கோவன் வாழை (மராட்டியம்) ஆகியவற்றிற்கு புவிசார் குறியீடு அளிக்கப்பட்டு உள்ளது.

பலா மரத்தில் செய்யப்படும் பாரம்பரிய இசைக்கருவியான தஞ்சாவூர் வீணை, இசைக்கலைஞர்கள் மத்தியில் பிரபலமாக இருக்க அதன் தனித்துவமான ஓசை நயம் தான் காரணம். 10 வருடங்களுக்கு முன்பு இதற்கு புவிசார் குறியீடு அளிக்கப்பட்ட பின்னர், இதன் விற்பனை 50 சதவீதம் அதிகரித்துள்ளது. இன்று வீணை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று தஞ்சாவூர் வீணை தயாரிப்பாளர் குழுமத்தின் உறுப்பினர் ஸ்ரீநிவாசன் தெரிவித்தார். மேலும் மற்றொரு வகை வீணைக்கு புவிசார் குறியீடு பெற முயற்சி செய்யப்படுவதாக கூறினார்.

தஞ்சாவூர் கலை தட்டுக்கு 2013-ல் புவிசார் குறியீடு அளிக்கப்பட்டது. அதன்பிறகு அதன் விற்பனை 70 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆந்திராவை சேர்ந்த பிரபலமான, போலி கலை தட்டுகள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று தஞ்சாவூர் கலை கூட்டுறவு சங்கத்தை சேர்ந்த எ.ராஜா தெரிவித்தார். சுமார் 70 பேர் இந்த தனித்துவமான கலைத்தட்டுக்களை உருவாக்கி வருகின்றனர். வெண்கலம், செம்பு மற்றும் வெள்ளி ஆகிய மூன்று உலோகங்களை கொண்டு இது செய்யப்படுகிறது. பெரும்பாலான நேரங்களில், வெள்ளியில் செய்யப்பட்ட உருவப்படங்கள் செம்புத்தட்டில் பொருத்தப்படுகின்றன. உருவப்படங்கள் ஒட்டப்படுவதில்லை. பொருத்தப்படுகின்றன’ என்றார்.

பிரான்ஸ், இத்தாலி, பிரிட்டன் போன்ற ஐரோப்பிய யூனியன் நாடுகள் புவிசார் குறியீடுகளை பெறுவதில் முன்னோடிகள். உலக அளவில் பிரபலமான பல பண்டங்களுக்கு புவிசார் குறியீடுகளை பெற்று, அதன்மூலம் பெரும் பலனை அடைந்துள்ளனர். புவிசார் குறியீடு பெற்ற பிரெஞ்சு ஒயின் மற்றும் ரம் உலகெங்கும் மிகவும் பிரபலமானவை. மற்றொரு பிரபலமான மதுவான ஸ்காட்லாந்தை சேர்ந்த ஸ்காட்ச் விஸ்கி, பல நூறு கோடி டாலர்கள் மதிப்புள்ள சந்தையை உடையது. இந்தியாவின் மது வகைகளில் கோவாவை சேர்ந்த பெனி சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால் பொருத்தமில்லாத கலால் வரிகளினால், இதை அதிக அளவு விற்பனை செய்ய முடியாமல், இதன் சந்தையின் அளவு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவின் கலாசார பன்முகத்தன்மைகள், புவிசார் தனித்தன்மைகள் அதிகம் என்பதால், உள்ளூர் தொழில்நுட்பம், கச்சா பொருட்கள், காலநிலைகளை சார்ந்து, நூற்றுக்கணக்கான தனித்தன்மை வாய்ந்த பாரம்பரிய உற்பத்தி முறைகள் உள்ளன. “பல பண்டங்களுக்கு புவிசார் குறியீடு பெறும் ஆற்றல் இந்தியாவிற்கு உள்ளது. காஷ்மீரி பஷ்மினா சால்வையை போல, இமாசலபிரதேசத்தின் குலுவின் சால்வைக்கும் பாரம்பரியம் மற்றும் தனித்தன்மை உண்டு என்பதால், இதை சந்தைப்படுத்த பெரும் வாய்ப்பு உள்ளது. இத்தகைய உற்பத்தியில் ஈடுபட்டுள்ள உள்ளூர் சங்கங்கள், புவிசார் குறியீடு பெற விண்ணப்பிக்க வேண்டும். அதன் மூலம் அவர்களின் பொருளாதாரம் வளரும்” என்கிறார் சுப்ரீம்கோர்ட்டு வக்கீல் விஜய் பால் டால்மியா நாயுடு இதை ஆமோதிக்கிறார். திருநெல்வேலி அல்வா ஒரு நூதனமான செய்முறை கொண்ட தனித்துவமான உணவு பண்டம். அதேபோல் கோவில்பட்டி கடலை மிட்டாய் மற்றும் லோனாவாலா சிக்கி (கடலை மிட்டாய்) போன்றவைகளும் புவிசார் குறியீடு பெற தகுதியானவை தான். தேசிய மற்றும் சர்வதேச சந்தையை பிடிக்க, புவிசார் குறியீடு மட்டும் போதாது என்று டால்மியா எச்சரிக்கிறார். “சில பண்டங்களை இந்திய எல்லைக்கு அப்பால் பிரபலப்படுத்த முடியாது. பன்னாட்டு சந்தையில் விற்க முடிந்த பண்டங்களை சந்தைப்படுத்த, உற்பத்தியாளர் சங்கங்கள், பொருட்காட்சிகளில் கலந்து கொண்டு, இலவச மாதிரிகளை வினியோகம் செய்து, விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்” என்கிறார்.

இந்தியாவில் இதில் ஒரு சிக்கல் உள்ளது. ஒரு பொருளுக்கு புவிசார் குறியீடு அளிக்கப்பட்டாலும், அது போலியா? அல்லது அசலா? என்று ஒரு வாடிக்கையாளர் எப்படி கண்டுபிடிக்க முடியும்?. இந்த பிரச்சினையை தீர்க்க, தொழில் மற்றும் உள்நாட்டு வணிக மேம்பாட்டுத்துறை ஒரு பொதுவான புவிசார் குறியீட்டு லோகோ முத்திரை மற்றும் இணை வாக்கியத்தை அளிக்கும் திட்டத்தை துவக்கியுள்ளது. ‘புவிசார் குறியீட்டு லோகோ முத்திரை ஒரு சான்றிதழ் போல் செயல்பட்டு, புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ள இந்திய பொருட்களை அடையாளம் கண்டறிய பயன்படும். இதன்மூலம் வாடிக்கையாளர்கள் உண்மையான புவிசார் குறியீடு பெற்ற பொருட்களை எளிதாக அடையாளம் காண முடியும்’ என்கிறது கடந்த ஜூலை 24-ந்தேதி வெளியிடப்பட்ட அரசின் சுற்றறிக்கை.

லோகோ முத்திரை திட்டம் இந்த பிரச்சினை தீர்த்து, புவிசார் குறியீடு பெற்ற பொருட்களை பெரிய அளவில் சந்தைப்படுத்த உதவும் என்று நாயுடு நம்பிக்கை தெரிவிக்கிறார்.

No comments: