Tuesday, 7 May 2019

நடப்பு நிகழ்வுகள் ஏப்ரல் 29 - மே 3, 2019

ஏப்ரல் 29: இந்தியாவில் 2018-ம் ஆண்டில் மதச் சுதந்திரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகச் சர்வதேச மதச் சுதந்திரத்துக்கான அமெரிக்க ஆணையத்தின் (USCIRF) 20-வது ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில், கவனம் தேவைப்படும் இரண்டாம் அடுக்குப் பட்டியலில் ஆப்கானிஸ்தான், எகிப்து, இந்தியா, இந்தோனேசியா, ஈராக், கஜகஸ்தான், மலேசியா, துருக்கி உள்ளிட்ட 12 நாடுகள் இடம்பெற்றுள்ளன.

646 தமிழக கிராமங்களில் தீண்டாமை

ஏப்ரல் 30: தமிழ்நாட்டின் 20 மாவட்டங்களைச் சேர்ந்த 646 கிராமங்களில் தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாகத் தகவல் உரிமைச் சட்டத்தின்கீழ் பெறப்பட்ட தகவல்கள் உறுதிசெய்திருக்கின்றன. ‘இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வுச் சமூகம்’ (SASY) என்ற அமைப்பு, 2014-2018 ஆண்டுகளில் மாவட்ட நிர்வாகம், காவல்துறையிடம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்தத் தரவுகளை வெளியிட்டுள்ளது. தீண்டாமையைக் கடைப்பிடிக்கும் முதல் மூன்று இடங்களில் திருவாரூர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் இருக்கின்றன.

அரிய வார்ப்புச் சிற்பம் கண்டுபிடிப்பு

ஏப்ரல் 30: இந்திய தொல்பொருள் ஆய்வாளர்கள், தெலங்கானாவின் சூர்யபேட்டையிலுள்ள பௌத்தப் பகுதியான பானிகிரியில் மிகப் பெரிய அரியவகை வார்ப்புச் சிற்பத்தைக் கண்டுபிடித்திருக்கின்றனர். இதுவரை, இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட வார்ப்புச் சிற்பத்திலேயே இதுதான் பெரியது என்று தெரிவிக்கின்றனர் ஆய்வாளர்கள். இந்தச் சிற்பம் 1.73 மீட்டர் உயரமும், 35 சென்டிமீட்டர் அகலமும் உள்ளது. 1700 ஆண்டுகளுக்குமுன், இக்ஷ்வாகு வம்சத்தைச் சேர்ந்த கலைஞர்களால் இந்தச் சிற்பம் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர். போதிசத்துவரை இந்தச் சிற்பம் பிரதிபலிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மசூத் அசார்: பயங்கரவாதியாக அறிவிப்பு

மே 1: பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் தலைவரான மசூத் அசாரைப் பயங்கரவாதியாக அறிவித்தது ஐ.நா. பாதுகாப்புக் குழு. கடந்த மார்ச் மாதமே, மசூத் அசாரை ஐ.நா. பாதுகாப்புக் குழுவின் கறுப்புப் பட்டியலில் சேர்த்துத் தடைவிதிக்க பிரான்ஸ், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகள் முன்மொழிவைக் கொண்டுவந்தன. ஆனால், சீனாவின் ஆட்சேபனையால் இந்த முன்மொழிவு அப்போது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. தற்போது, சீனா ஆட்சேபனையை விலக்கிக்கொண்டதால் மசூத் அசார் ஐ.நா.வால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

சந்திரயான்-2: விரைவில் செல்கிறது

மே 1: நிலவுக்கு விண்கலம் அனுப்பும் இந்தியாவின் இரண்டாவது திட்டமான சந்திரயான்-2 செயற்கைக்கோள் ஜூலை 9 16 ஆகிய நாட்களுக்குள் விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. இந்த ஆண்டு, ஏப்ரல் மாதம் நிறைவேற்றப்படுவதாக இருந்த இந்தத் திட்டம், இரண்டு மாதங்கள் கழித்து நிறைவேற்றப்படவிருக்கிறது. ஜிஎஸ்எல்வி எம்கே-III ஏவுகணையில், 2019, செப்டம்பர் 6 அன்று சந்திராயன்-2 நிலவைச் சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் பணிநீக்கம்

மே 1: ஆசிரியர் தகுதித் தேர்வில் (Teachers Eligibility Test) தேர்ச்சி பெறாமல் அரசு உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் 1,500 ஆசிரியர்களைப் பணிநீக்கம் செய்யத் தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, தகுதித் தேர்வில் தேர்ச்சிபெறாத ஆசிரியர்கள் விளக்கமளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

29-வது இடத்தில் பெங்களூரு ஐஐஎஸ்சி

மே 2: 2019 ஆசியப் பல்கலைக் கழகங்களின் தரவரிசைப் பட்டியலை லண்டனில் ‘டைம்ஸ் ஹையர் எஜுகேஷன்’ இதழ் வெளியிட்டுள்ளது. ஆசியாவின் 100 பல்கலைக்கழகங்கள் இடம்பெற்றிருக்கும் இந்தப் பட்டியலில், இந்தியாவின் 49 கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இதில், பெங்களூருவில் இருக்கும் இந்திய அறிவியல் நிறுவனம் (IISc) 29-வது இடத்தைப் பிடித்துள்ளது. சீனாவின் ஷிங்குவா (Tsinghua) பல்கலைக்கழகம், சிங்கப்பூரின் நேஷனல் பல்கலைக்கழகம் ஆகியவை முதல் இரண்டு இடங்களைப் பிடித்திருக்கின்றன.

91 நீர்நிலைகளில் குறைந்த நீர் சேமிப்பு

மே 2: நாட்டின் 91 நீர்நிலைகளில் 25 சதவீதம் மட்டுமே நீர் சேமிப்பு இருப்பதாக மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 25 அன்று 26 சதவீதமாக இருந்த நீர் சேமிப்பு, ஒரு வார காலத்தில் ஒரு சதவீதம் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு, இதே காலகட்டத்தில், நீர்நிலைகளின் நீர் சேமிப்பு 115 சதவீதம் இருந்ததாக நீர்வளத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த 91 நீர்நிலைகளில், 37 நீர்நிலைகளில் நீர்மின்திறன் வசதியுள்ளது.

சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பில் 83.4% தேர்ச்சி

மே 2: சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 வகுப்புத் தேர்வை எழுதிய 12.87 லட்சம் பேரில், 83.4 சதவீதத்தினர் தேர்ச்சியடைந்திருக்கின்றனர். உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஹன்சிகா ஷுக்லா, கரிஷ்மா அரோரா ஆகிய இருவரும் 500-க்கு 499 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தைப் பிடித்திருக்கின்றனர். 500-க்கு 498 மதிப்பெண்கள் பெற்று இரண்டாவது இடத்தை கவுரங்கி சாவ்லா, ஐஸ்வர்யா, பவ்யா ஆகிய மூன்று மாணவிகள் பிடித்திருக்கின்றனர். மாணவிகள் 88.7 சதவீதத்தினரும், மாணவர்கள் 79.4 சதவீதத்தினரும் இந்தத் தேர்வில் தேர்ச்சியடைந்திருக்கின்றனர்.

ஃபானி புயல்: 38 பேர் பலி

மே 3: தீவிரமான புயலான ‘ஃபானி’ புயல் ஒடிஷாவைத் தாக்கியதில் 38 பேர் உயிரிழந்திருப்பதாக அம்மாநில அரசு தெரிவித்திருக்கிறது. இந்தப் புயலின் போது, 11 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டிருப்பதாக அம்மாநில அரசு தெரிவித்தது. இந்தியாவை 20 ஆண்டுகளுக்குப் பிறகு, தாக்கியிருக்கும் வலிமையான புயல் இது என்கிறார்கள் வானிலை ஆய்வாளர்கள். ஒடிஷாவைத் தாக்கிய பிறகு, இந்தப் புயல் வலுவிழந்து வங்கதேசத்தை நோக்கி நகர்ந்தது.

No comments: