Ad Code

மண், கனிமங்கள் மற்றும் இயற்கை வளங்கள் - இயற்கைத் தாவரங்கள் - காடுகள் மற்றும் வனவிலங்குகள்

இந்தியாவின் இயற்கை வளங்கள்
மண்வளம்
இந்தியாவில் உள்ள மண் வகைகளை வண்டல் மண், கரிசல் மண், செம்மண், சரளை மண், வறண்ட பாலை மண், மலை மண் என ஆறாகப் பகுத்துக் கூறலாம். 
வண்டல் மண் (Alluvial Soil)
வண்டல் மண் வேளாண்மைத் தொழிலுக்குப் பெரிதும் பயன்படக் கூடியது. ஆற்றுப்படுகைகள், வெள்ளப் பெருக்கு டெல்டா மற்றும் கடற்கரை சமவெளிகளில் காணப்படுகின்றது. வண்டல் மண்ணுக்கு நீர்ப் பிடிப்புத் தன்மை அதிகம் உண்டு. வண்டல் மண்ணைக் காதர், பாங்கர் என இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். வண்டல் மண் ஆறுகளால் படியவைக்கின்ற படிவுகளாகும், புதிதாகப் படிய வைக்கப்பட்ட வெளிர் நிறத்துடன் கூடிய வண்டல் ‘காதர் மண்’ எனப்படும். களிமண் கூடிய வண்டல் ’பாங்கர் மண்’ எனப்படும். சட்லெஜ், கங்கை, யமுனை, கண்டக், காக்ரா ஆறுகளினால் பெருமளவு வண்டல் மண் அடித்து வரப் படுகின்றது. பஞ்சாப், ஹரியானா, உத்திரப்பிரதேசம், பீகார், மேற்கு வங்காளம் போன்ற பகுதிகள் வண்டல் மண்ணால் பெரும் பயனடைந்துள்ளன. காவிரி ஆற்றுப் படுகைகளில் வண்டல் மண் விவசாயத்துக்குப் பெருமளவில் உதவி செய்கின்றது. நெல், கரும்பு, கோதுமை, பருத்தி, எண்ணெய் வித்துகள், சணல் போன்ற பல பயிர்வகைகள் பயிரிடப்படுகின்றன. கங்கை, பிரம்மபுத்திரா சமவெளிப் பகுதிகளில் வண்டல் படிவுகள் ஏராளம் உள்ளன. 
கரிசல் மண் (Black soil)
கரிசல் மண் கருமை நிறமாக இருக்கும். பொதுவாக கருப்பு முதல் பழுப்பு நிறம் வரை காணப்படும். சுண்ணாம்பு, இரும்பு, பொட்டாசியம், அலுமினியம், கால்சியம், மெக்னீஷியம் கார்பனேட்டுகள் காணப்படுகின்றன. பாஸ்பரஸ், நைட்ரஜன் மற்றும் உயிரிப் பொருட்கள் கரிசல் மண்ணில் இல்லை. தீப்பாறைகள் சிதைந்து கரிசல் மண் உருவாகிறது. மகாராஷ்டிரம், குஜராத், ஆந்திரப்பிரதேசம், மத்தியப்பிரதேசத்தின் ஒரு பகுதியிலும் கரிசல் மண் பெருமளவில் காணப்படுகின்றது. கரிசல் மண் கோதாவரி, நர்மதா, தபதி ஆற்றுப் பள்ளத்தாக்குகளில் காணப் படுகிறது. கரிசல் மண் பருத்தி பயிரிட மிகவும் ஏற்றது. 
செம்மண் (Red soil)
செம்மண் சிவப்பாகக் காணப்படும். இரும்பு ஆக்ஸைடு அதிக அளவில் உள்ளதால் செம்மண் சிவப்பாக உள்ளது. பழங்காலப் படிவுப் பாறைகள் மற்றும் உருமாறியப் பாறைகள் சிதைவுறும் போது, செம்மண் உருவாகின்றது. செம்மண்ணில் சுண்ணாம்புச்சத்து, நைட்ரஜன், பாஸ்பரஸ் போன்ற சத்துகள் குறைவாகவே உள்ளன. செம்மண்ணின் நிறம் பழுப்பு முதல் மஞ்சள் நிறம் என வேறுபடும். செம்மண்ணால் ஈரப்பதத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடியாது. செம்மண்ணிற்குத் தகுந்த உரங்கள் இடுவதன் வாயிலாக பயிரிடுவதற்கு ஏற்ற மண்ணாக மாற்ற இயலும். தமிழ்நாட்டில் பெரும் பகுதிகள், கர்நாடகாவின் தென்பகுதி, கோவா, வடகிழக்கு ஆந்திரா, மத்தியப் பிரதேசம், ஒடிசா ஆகிய இடங்களில் செம்மண் அதிகமாகக் காணப்படுகின்றது. செம்மண்ணில் கோதுமை, நெல், பருத்தி, கரும்பு மற்றும் பருப்பு வகைகள் பயிரிடப்படுகின்றன. 
சரளை மண் (laterite soil)
சரளை மண் ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, கர்நாடகா, கிழக்கு தொடர்ச்சி மலையின் உச்சிகள், ஒடிசா, கேரளா மற்றும் அசாமின் சில பகுதிகளில் காணப்படுகின்றது. தீபகற்ப பீடபூமியில் பெருமளவு காணப்படுகின்றது. அதிக வெப்பமும் அதிக மழையும் மற்றும் வறண்ட காலநிலை கொண்ட பகுதிகளில் சரளை மண் உருவாகின்றது. சரளை மண் கடின அமைப்பைக் கொண்டது. சரளை மண் நுண் துகள்களைக் கொண்டிருப்பதால் இதிலுள்ள சிலிகா வேதியியல் வினையால் நீக்கப்படுகிறது. சரளை மண்ணில் காபி, ரப்பர், முந்திரி, மரவள்ளி முதலிய பயிர்கள் பயிரிடப்படுகின்றன. 
பாலை மண் (Desert soil)
வறண்ட பாலை மண் ராஜஸ்தான், கட்ச், தென் பஞ்சாப் போன்ற பகுதிகளில் காணப்படுகின்றது. பாலை மண் இயற்கையாகவே மணலாகவும், காரச்சத்தைப் பெற்றதாகவும், நுண்துளை கொண்டதாகவும் இருக்கும். நீர்ப்பாசன வசதி உள்ள இடங்களில் வறண்ட பாலை மண்ணிலும் விவசாயம் செய்கின்றனர். பாலை மண்ணில் கோதுமை, நெல், பார்லி, திராட்சை, தர்பூசணி போன்றவை விளைவிக்கப்படுகின்றன. 
மலை மண்
மலை மண்ணில் தழைச் சத்தும், சாம்பல் சத்தும் அதிகமாக உள்ளது. மலை மண்ணில் தேயிலை, காபி, ரப்பர் அதிகமாகப் பயிரிடப்படுகிறது. மலை மண் கிழக்கு, மேற்குத் தொடர்ச்சி மலை, இமாச்சல், சிவாலிக் மலைத் தொடர்களிலும் உள்ளது. 
கனிம வளம்
இந்தியாவில் முக்கிய சுரங்கங்கள், எண்ணெய் வயல்கள்
சிங்பும் (ஜார்கண்ட்) : இரும்புத்தாது கியோஜார் (ஒடிஸா) : இரும்புத்தாது மயூர்பன்ச் (ஒடிஸா) : இரும்புத்தாது கஞ்சமலை, (தமிழ்நாடு) : இரும்புத்தாது தீர்த்தமலை, (தமிழ்நாடு) : இரும்புத்தாது குத்ரிமுக் (கர்நாடகம்) : இரும்புத்தாது பலாமு (ஜார்கண்ட்) : பாக்சைட் ராஞ்சி (ஜார்கண்ட்) : பாக்சைட் பாலகாட் (மத்திய பிரதேசம்) : பாக்சைட் ஜபல்பூர் (மத்திய பிரதேசம்) : பாக்சைட் ஜாரியா (ஜார்கண்ட்) : நிலக்கரி கரன்புரா (ஜார்கண்ட்) : நிலக்கரி சன்டா (மத்திய பிரதேசம்) : நிலக்கரி பேஞ்ச் பள்ளத்தாக்கு (மத்திய பிரதேசம்) : நிலக்கரி ராணிகஞ்ச் (மேற்கு வங்காளம்) : நிலக்கரி நெய்வேலி (தமிழ்நாடு) : பழுப்பு நிலக்கரி சிங்கரேனி (ஆந்திர பிரதேசம்) : நிலக்கரி நம்சுக் நம்பக் (அருணாச்சல பிரதேசம்) : நிலக்கரி திக்பாய் (அஸ்ஸாம்) : பெட்ரோலியம் மொரன் (அஸ்ஸாம்) : பெட்ரோலியம் நாகர்காடியா (அஸ்ஸாம்) : பெட்ரோலியம் சிப்சாகர் (அஸ்ஸாம்) : பெட்ரோலியம் ருத்ரசாகர் (அஸ்ஸாம்) : பெட்ரோலியம் கலோல் (குஜராத்) : பெட்ரோலியம் அங்கலேஷ்வர் (குஜராத்) : பெட்ரோலியம் கிருஷ்ணா-கோதாவரி பகுதி (ஆந்திர பிரதேசம்) : பெட்ரோலியம் நரிமணம் (தமிழ்நாடு) : பெட்ரோலியம் அக்னிகுண்டலா (ஆந்திர பிரதேசம்) : தாமிரம் மொசபானி (ஜார்கண்ட்) : தாமிரம் சிங்பும் (ஜார்கண்ட்) : தாமிரம் மலஞ்கண்ட் (மத்திய பிரதேசம்) : தாமிரம் கேத்ரி (ராஜஸ்தான்) : தாமிரம் தாரிபா (ராஜஸ்தான்) : தாமிரம் சித்ரதுர்கா (கர்நாடகம்) : தாமிரம் ஹட்டி (கர்நாடகம்) : தங்கம் கோலார் (கர்நாடகம்) : தங்கம் ராமகிரி (ஆந்திர பிரதேசம்) : தங்கம் ஜடுகுடா (ஜார்கண்ட்) : யுரேனியம் ஹசாரிபா (ஜார்கண்ட்) : மைகா கோடெர்மா (ஜார்கண்ட்) : மைகா நெல்லூர் (ஆந்திர பிரதேசம்) : மைகா 
காடுகள்
வெப்ப மண்டல பசுமை மாறாக் காடுகள், வெப்ப மண்டல இலையுதிர் காடுகள், வெப்ப மண்டல குறுங்காடு மற்றும் முட்புதர் காடுகள், மலைக்காடுகள், சதுப்பு நிலக் காடுகள் போன்றவை இந்தியாவில் காணப்படும் காடுகளாகும். 
வெப்ப மண்டல பசுமை மாறாக் காடுகள் (Tropical Evergreen Forest)
வெப்ப மண்டல பசுமை மாறாக் காடுகள் அதிக மழைப் பொழிவுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகள், லட்சத் தீவுகள், ஒடிசாவின் சில பகுதிகள், அந்தமான் நிக்கோபர், அஸ்ஸாமின் மேல் பகுதி, தமிழ்நாட்டின் கடற்கரைப் (Tamil Nadu Coast) பகுதி போன்ற இடங்களில் உள்ளன. இங்கு ஆண்டுக்கு 200 செ.மீட்டருக்கு அதிகமான மழைப் பொழிவும், குறைந்த வறண்ட காலமும் (Dry Season) நிலவும். இங்கு வளர்கின்ற மரங்கள் 60 மீ அல்லது அதற்கு மேலும் உயரமாக வளரும். இங்கு ஆண்டு முழுவதும் வெப்பமும், ஈரப்பதமும் (Warm & Wet) நிலவுவதால் பல்வேறு வகையான தாவர வகைமைகளைக் காணலாம். ஆண்டு முழுவதும் பசுமையாகவே இருக்கும். பொருளாதார ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த மரங்களான எபோனி, மகோனி, ரோஸ் மரம், ரப்பர், சின்கோனா, லயனாஸ், மூங்கில், போன்ற மரங்கள் வளர்கின்றன. 
வெப்ப மண்டல இலையுதிர் காடுகள் (Tropical Deciduous Forest)
இந்தியாவில் அதிக அளவில் காணப்படும் வெப்ப மண்டல இலையுதிர் காடுகளை ‘பருவக்காற்று காடுகள்’ (Monsoon Forest) என்றும் அழைக்கின்றனர். ஆண்டுக்கு 70 செ.மீ மற்றும் 200 செ.மீ வரை சராசரி மழைப் பொழிவுள்ள இடங்களில் இவ்வகைக் காடுகள் உள்ளன. வசந்த காலத்திலும், வறண்ட கோடை காலத்திலும் இங்குள்ள மரங்கள் சுமார் ஆறு முதல் எட்டு வாரங்கள் இலைகளை உதிர்ப்பதால் இவை வெப்ப மண்டல இலையுதிர் காடுகள் என அழைக்கப்படுகின்றன. தண்ணீர் கிடைக்கும் அளவிற்கேற்ப இக்காடுகள் ஈரமான பருவக் காற்றுக் காடுகள் என்றும் வறண்ட பருவக் காற்றுக் காடுகள் எனவும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஈரமான பருவக் காற்றுக் காடுகள் வடகிழக்கு மாநிலங்களிலும், இமய மலையின் அடிவாரங்களிலும், ஜார்கண்ட், மேற்கு ஒடிசா, சட்டீஸ்கர், மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்குச்சரிவுகள் போன்ற இடங்களிலும் காணப்படுகின்றன. வறண்ட பருவக் காற்றுக் காடுகள் தீபகற்ப பீடபூமியிலும், பீகார், உத்திரபிரதேசத்தின் சமவெளி பகுதிகளிலும் காணப்படுகின்றன. வெப்ப மண்டல இலையுதிர் காடுகள் அல்லது வெப்ப மண்டல பருவக் காற்றுக் காடுகளில் தேக்கு, சால், சிசம், சந்தன மர, வேட்டில், வேப்ப மரம் போன்ற வணிகரீதியில் முக்கியமான மரங்கள் வளர்கின்றன. 
முட்புதர்க் காடுகள் (Thorn forests)
ஆண்டுக்கு 75 செ.மீ-க்குக் குறைவான சராசரி மழையளவுடன் நீண்ட வறட்சியான பருவம் கொண்ட பகுதிகளில் குறுங்காடு மற்றும் முட்புதர் காடுகள் உள்ளன. இங்குள்ள முக்கியமான மரங்கள் அக்கேசியா, பனை, கள்ளி, கயிர், பாபூஸ், பலாஸ், கக்ரி, கஜீரி போன்றவையாகும். குறுங்காடு மற்றும் முட்புதர் காடுகளில் ஆங்காங்கே மரங்களும் வளர்கின்றன. இங்கு வாழ்வதற்கேற்ற தகவமைப்பைச் செடிகளும், மரங்களும் பெற்றுள்ளன. மரங்கள் நிலத்தடியில் வெகு ஆழத்தில் உள்ள நீரை உறிஞ்சக் கூடிய நீண்ட வேர்களைக் கொண்டவைகளாக உள்ளன. நீர் ஆவியாதலைக் குறைப்பதற்கு அடர்ந்த சிறிய இலைகளைக் கொண்டுள்ளன. முட்கள், தடித்த பட்டைகளையும் காணலாம். குஜராத், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், தென்மேற்கு பஞ்சாப், மேற்கு அரியானா, மேற்குத் தொடர்ச்சி மலையின் மழை மறைவு பகுதியான மஹாராஷ்டிரம், கர்நாடகம், ஆந்திரம், தமிழ்நாடு போன்ற பகுதிகளில் இவ்வகைக் காடுகள் காணப்படுகின்றன. 
மலைக் காடுகள் (Mountain forests)
இயற்கைத் தாவரங்கள் மலைப்பகுதிகளில் குறைந்த வெப்பத்தில் வளரக் கூடியவை. இவற்றை இமயமலைத் தொடரிலுள்ள மலைக் காடுகள், தீபகற்ப பீடபூமி மலைக் காடுகள் என இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். இமய மலைத் தொடரில் 1000 மீ உயரத்திலிருந்து 2000 மீ உயரம் வரை காணப்படுகிறது. இங்கு ஒக், செஸ்நெட் போன்ற பசுமை மாறா அகன்ற இலைக் காடுகள் உள்ளன. 1500 மீ லிருந்து 3000 மீ வரை பைன், டியோடர், சில்வர், பீர், ஸ்புருஸ், செடர் போன்ற ஊசியிலை மரங்கள் உள்ளன. ஊசியிலைக் காடுகள் இமய மலையின் தெற்கு சரிவுகள், வடகிழக்கு இந்தியாவிலும் உள்ளன. 3600 மீ உயரத்திற்கு மேல் ஊசியிலைக் காடுகளும், புல்வெளிகளையும் தாண்டி ஆல்பைன் தாவரங்கள் காணப்படுகின்றன. இங்கு சில்வர் ஃபிர், ஜூனிபெர்ஸ், பைன், பிர்ச்சஸ் போன்ற மரங்கள் வளர்கின்றன. மிக உயரமான பகுதிகளில் மோசஸ், லிச்சன்ஸ் வளர்கின்றன. தீபகற்ப இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலைகள், விந்திய மலைப்பகுதி, நீலகிரி மலைப்பகுதி என்னும் மூன்று பகுதிகளில் மலைக்காடுகள் உள்ளன. நீலகிரிலுள்ள வெப்ப மண்டலக் காடுகள் ‘சோலாஸ்’ என அழைக்கப்படுகின்றன. 
சதுப்பு நிலக் காடுகள் (Mangrove forests)
மாங்ரோவ் காடுகள் ‘சதுப்பு நிலக் காடுகள்’ என அழைக்கப்படுகின்றன. கடல் ஓதங்கள் மூலம் நீரைப் பெறும் கடலோரப் பகுதிகளில் காணப்படுகின்றன. இவ்வகைக் காடுகள் கங்கை, மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி ஆற்றின் டெல்டா பகுதிகள், அந்தமான் நிக்கோபர் தீவுகள், மேற்கு கடற்கரையின் சில பகுதிகள், மேற்கு வங்காளம் போன்ற இடங்களில் உள்ளன. மேற்கு வங்காளத்தில் ‘சுந்தரவனக் காடுகள்’ என அழைப்பர். இம்மரங்கள் வலிமையாக உள்ளதால் படகு கட்டும் தொழிலுக்குப் பயன்படுகிறது. 
பாலைவனத் தாவரங்கள் (Desert plants)
மழையளவு 25 செ.மீ-க்குக் குறைவான பகுதிகளில் பாலைவனத் தாவரங்கள் வளர்கின்றன. இம்மரங்கள் 6 முதல் 10 மீ வரை உயரமாக வளரக் கூடியவை. ஆழமான வேர்களுடன், கால்நடைகளிடமிருந்து, பாதுகாத்துக் கொள்வதற்குக் கடினமான முட்களையும் கொண்டுள்ளது. அக்கேசியா, ஈச்சமரம், பாபுல் போன்றவை முக்கியப் பாலைவனத் தாவரங் களாகும். 
வன விலங்குகள் இந்திய சரணாலயங்கள், தேசியப் பூங்காக்கள்
இந்தியாவில் 92 தேசியப் பூங்காக்களும் 500 சரணாலயங்களும் உள்ளன. காஸிரங்கா (ஒற்றைக்கொம்பு காண்டாமிருகம்) : அஸ்ஸாம். மானஸ் தேசியப் பூங்கா (காட்டெருமை) : அஸ்ஸாம். வால்மீகி தேசியப் பூங்கா : பீகார். கிர் தேசியப் பூங்கா (ஆசிய சிங்கங்கள்) : குஜராத். ரான் ஆஃப் கட்ச் (வனக் கழுதை) : குஜராத். டச்சிகாம் தேசியப் பூங்கா (காஷ்மீர் மான்) : காஷ்மீர். பெரியார் தேசியப் பூங்கா (யானைகள்) : கேரளா. ஜலதாபார சரணாலயம் : மேற்கு வங்காளம். சுந்தர வன தேசியப் பூங்கா (புலிகள்) : மேற்கு வங்காளம். ரங்கன்திட்டு சரணாலயம் (பறவைகள்) : கர்நாடகா. ஷிவ்புரி தேசியப் பூங்கா (புலிகள்) : மத்திய பிரதேசம். கன்ஹா தேசிய பூங்கா (புலிகள்) : மத்திய பிரதேசம். பிதர் கனிகா தேசிய பூங்கா : ஒடிஸா. நார்த் சிமிலி பால் (புலி) : ஒடிஸா. பந்திப்பூர் தேசியப் பூங்கா : கர்நாடகா. பன்னார் கட்டா தேசியப் பூங்கா : கர்நாடகா. சந்திரபிரபா சரணாலயம் : உத்தரகாண்ட். கார்பெட் தேசியப் பூங்கா : உத்தரகாண்ட். ராஜாஜி தேசியப் பூங்கா : உத்தரகாண்ட். பரத்பூர் சரணாலயம் (பறவைகள்) : ராஜஸ்தான். கெய்புல் லாம்ஜாவ் (தமின் மான்) : மணிப்பூர். துத்வா தேசியப் பூங்கா : உத்திரப் பிரதேசம்

Post a Comment

0 Comments

Ad Code