Ad Code

வாராந்திர முக்கிய நிகழ்வுகள் (ஜூலை 26 - ஆகஸ்டு 1) - போட்டித் தேர்வுகளுக்குப் பயன்படும் தகவல்கள்.

வாராந்திர முக்கிய நிகழ்வுகள் (ஜூலை 26 - ஆகஸ்டு 1) - போட்டித் தேர்வுகளுக்குப் பயன்படும் தகவல்கள்.

 உலகச் செய்திகள்

  • கல்வித் தரம்: `டைம்ஸ்' உயர்கல்வி அமைப்பு வெளியிட்ட தரவரிசைப்படி, அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக உலகிலேயே 2வது சிறந்த கல்வி நிறுவனங்களைக் கொண்ட நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது (ஜூலை 29).
  • இந்தியா - அமெரிக்கா வர்த்தகம்: இந்தியப் பொருட்களுக்கு 25% இறக்குமதி வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார் (ஜூலை 30).
  • பாலஸ்தீனம் தனிநாடு: பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்தைத் தொடர்ந்து பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்க கனடா திட்டமிட்டுள்ளது (ஜூலை 31).
  • பாகிஸ்தான் செயற்கைக்கோள்: சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள ஜிச்சாங் விண்வெளி மையத்திலிருந்து பாகிஸ்தான் தனது புதிய தொலையுணர்வு செயற்கைக்கோளை (பி.ஆர்.எஸ்.எஸ்-1) வெற்றிகரமாக ஏவியது (ஜூலை 31).
இந்தியச் செய்திகள்
  • ராணுவப் பிரிவுகள்: இந்திய ராணுவத்தில் ஆளில்லா விமானங்கள் மற்றும் வீரர்கள் ஒருங்கிணைந்து செயல்படும் வகையில் ருத்ரா' என்ற புதிய படைப்பிரிவும், பீரங்கிப்படையில் சக்திபான்' என்ற புதிய பிரிவும் உருவாக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இத்தகவலை ராணுவ தலைமை தளபதி உபேந்திர துவிவேதி தெரிவித்தார் (ஜூலை 26).
  • ஸ்மார்ட்போன் ஏற்றுமதி: அமெரிக்காவுக்கு ஸ்மார்ட்போன் ஏற்றுமதியில் சீனாவை பின்னுக்குத்தள்ளி இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்தியாவின் மொத்த ஸ்மார்ட்போன் ஏற்றுமதி 240% உயர்ந்துள்ளது (ஜூலை 29).
  • விழிஞ்சம் துறைமுகம்: சர்வதேச பன்னோக்கு சரக்கு கப்பல் போக்குவரத்தால் தெற்காசியாவின் நீலப் புரட்சிக்கு வித்திடும் இந்தியாவின் முதல் ஆழ்கடல் தானியங்கி துறைமுகம் என்ற பெருமையை கேரளாவின் விழிஞ்சம் துறைமுகம் பெற்றுள்ளது (ஜூலை 30).
  • தென்னிந்திய ராணுவத் தளபதி: இந்திய ராணுவத்தின் தென்னிந்திய பகுதிக்கு புதிய ராணுவத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் வி.ஹரி பொறுப்பேற்றார் (ஜூலை 31).
  • வெளிநாட்டு மாணவர்கள்: வெளிநாடுகளில் 18.8 லட்சம் இந்திய மாணவர்கள் கல்வி பயின்று வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது (ஜூலை 31).
  • தேசிய திரைப்பட விருதுகள்: மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை சார்பில் 71வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன. சிறந்த நடிகருக்கான விருது ஷாருக்கான் மற்றும் விக்ராந்த் மாசேவுக்கும், சிறந்த நடிகைக்கான விருது ராணி முகர்ஜிக்கும், சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜி.வி. பிரகாஷ்குமாருக்கும் வழங்கப்பட்டது. `பார்க்கிங்' திரைப்படம் சிறந்த திரைக்கதை, சிறந்த தமிழ்ப்படம், சிறந்த துணை நடிகர் ஆகிய பிரிவுகளின் கீழ் 3 தேசிய விருதுகளை வென்றது (ஆகஸ்டு 1).
தமிழகச் செய்திகள்
  • தூத்துக்குடி விமான நிலையம் & ராஜேந்திர சோழன் நினைவு நாணயம்: பிரதமர் நரேந்திர மோடி தூத்துக்குடியில் ரூ.452 கோடி செலவில் விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையத்தைத் திறந்து வைத்தார். பின்னர் அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெற்ற விழாவில் மாமன்னர் ராஜேந்திர சோழனின் பெருமையை போற்றும் விதமாக ரூ.1000 மதிப்பிலான நினைவு நாணயத்தை வெளியிட்டார். இது 40 கிராம் எடையும் 44 மி.மீ. விட்டமும் கொண்டது (ஜூலை 27).
  • வறுமை ஒழிப்பு: பொது விநியோகத் திட்டத்தின் கீழ், மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை உரிய நேரத்தில் வழங்கி, வறுமை ஒழிப்பில் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது (ஜூலை 27).
  • பாதுகாப்பு தொழில் வழித்தடம்: திருச்சியில் உள்ள தமிழக பாதுகாப்பு தொழில் வழித்தடத்தில் அதிநவீன பரிசோதனை மையம் அமைக்க ஒப்பந்தம் கையெழுத்தானது. இது பாதுகாப்புத் துறையில் இந்தியா தற்சார்பு அடைவதற்கு மேலும் ஊக்கம் அளிக்கும் (ஜூலை 28).
  • மென்பொருள் ஏற்றுமதி: இந்தியாவில் 3வது பெரிய மென்பொருள் ஏற்றுமதியாளராக தமிழ்நாடு திகழ்வதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார் (ஜூலை 30).
  • சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி: தெலங்கானாவைச் சேர்ந்த டி. வினோத்குமார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்றார். இவருக்கு தலைமை நீதிபதி எம்.எம். வத்சவா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இவர் பதவியேற்றதைத் தொடர்ந்து உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்தது (ஜூலை 31).
பொருளாதாரம்
  • அந்நியச் செலாவணி கையிருப்பு: இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஜூலை 18ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 118.3 கோடி டாலர் குறைந்து 69,548 கோடி டாலராக உள்ளது (ஜூலை 26).
  • ஸ்மார்ட்போன் விற்பனை: இந்திய சந்தையில் நடப்பு 2025ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் சரிவைக் கண்டிருந்த ஸ்மார்ட்போன்களின் விற்பனை ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான இரண்டாவது காலாண்டில் 7% உயர்வை பதிவு செய்துள்ளது (ஜூலை 26).
  • உற்பத்தித் துறை வளர்ச்சி: இந்திய உற்பத்தித் துறை கடந்த ஜூலை மாதத்தில் 16 மாதங்களில் இல்லாத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது (ஆகஸ்டு 1).
அறிவியல்
  • ககன்யான் திட்டம்: ககன்யான் திட்டத்திற்காக வரும் டிசம்பர் மாதம் விண்ணில் ஏவப்பட உள்ள ஆளில்லா சோதனை ராக்கெட்டில் `வியோமித்ரா' என்ற பெண் ரோபோ பயணம் செய்ய உள்ளதாக இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் தெரிவித்தார். இத்திட்டம் வெற்றி பெற்றால் மனித உருவ ரோபோவை விண்வெளிக்கு அனுப்பிய 4வது நாடு என்ற பெருமையை இந்தியா பெறும் (ஜூலை 28).
  • பிரளய் ஏவுகணை: போர்முனைகளுக்கு உதவும் மேம்படுத்தப்பட்ட `பிரளய்' எனப்படும் புதிய ரக ஏவுகணை இந்திய ராணுவத்தால் வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டது. இது 500 முதல் 1000 கிலோ எடை கொண்ட குறுகிய தூர இலக்கை தாக்கும் திறன் கொண்டது (ஜூலை 29).
  • நிசார் செயற்கைக்கோள்: இஸ்ரோ மற்றும் நாசாவின் கூட்டுமுயற்சியில் உருவான நிசார் செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இரு நாடுகளும் இணைந்து செயற்கைக்கோளை உருவாக்கியது இதுவே முதல் முறையாகும். பூமியை கண்காணிக்கும் இரட்டை அதிர்வெண் கொண்ட முதல் செயற்கைக்கோள் இதுவாகும் (ஜூலை 30).
விளையாட்டு
  • ஃபார்முலா 1 கார் பந்தயம்: 2025ஆம் ஆண்டுக்கான `ஃபார்முலா 1' கார் பந்தயம் உலகம் முழுவதும் 24 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 13வது சுற்றான பெல்ஜியம் கிராண்ட் பிரீ போட்டி ஸ்பா ஓடுதளத்தில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலிய வீரர் ஆஸ்கர் பியாஸ்ட்ரி 1 மணி 25 நிமிடம் 22.601 வினாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து முதலிடம் பிடித்தார் (ஜூலை 27).
  • டபிள்யூ.டி.டி. கண்டெண்டர் டேபிள் டென்னிஸ்: நைஜீரியாவில் நடைபெற்ற டபிள்யூ.டி.டி. கண்டெண்டர் டேபிள் டென்னிஸ் போட்டியில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சத்தியன், ஆகாஷ் பால் இணை சாம்பியன் கோப்பையை வென்றது (ஜூலை 27).
  • பிடே பெண்கள் உலகக் கோப்பை செஸ்: ஜார்ஜியாவில் உள்ள பதுமி நகரில் நடைபெற்ற 3வது பிடே பெண்கள் உலகக் கோப்பை செஸ் போட்டியில் 19 வயதான இந்தியாவின் திவ்யா தேஷ்முக் 2½-1½ என்ற புள்ளிக்கணக்கில் சக நாட்டவரான கோனெரு ஹம்பியை தோற்கடித்து உலகக் கோப்பை பட்டத்தைக் கைப்பற்றி சாதனை படைத்தார். இந்திய வீராங்கனை ஒருவர் உலகக் கோப்பை வெல்வது இதுவே முதல் முறையாகும் (ஜூலை 28).
  • பெண்கள் ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: சுவிட்சர்லாந்தின் பல்வேறு நகரங்களில் நடைபெற்ற 14வது பெண்கள் ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் 16 அணிகள் பங்கேற்றன. இதன் இறுதி ஆட்டத்தில் உலக சாம்பியன் ஸ்பெயின் அணியை நடப்பு சாம்பியன் இங்கிலாந்து எதிர்கொண்டது. இங்கிலாந்து அணி 3-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி தொடர்ந்து 2வது முறையாக சாம்பியன் கோப்பையை சொந்தமாக்கியது (ஜூலை 28).
  • உலக நீச்சல் சாம்பியன்ஷிப்: சிங்கப்பூரில் நடைபெற்ற உலக நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான 1500 மீட்டர் ஃபிரீஸ்டைல் பந்தயத்தில் அமெரிக்காவின் கேட்டி லெடெக்கி தங்கப்பதக்கத்தை வென்றார். இது உலக நீச்சலில் அவரது 22வது தங்கப்பதக்கமாகும் (ஜூலை 29).

Post a Comment

0 Comments

Ad Code