Tuesday, 18 May 2021

பிரபஞ்ச அழகியாக மெக்சிகோவின் ஆண்ட்ரியா மெசா தேர்வு


பிரபஞ்ச அழகியாக மெக்சிகோவை சேர்ந்த ஆண்ட்ரியா மெசா தேர்வு செய்யப்பட்டார். இந்த போட்டியில் இந்திய அழகி அட்லைன் காஸ்டெலினோவுக்கு 4-வது இடம் கிடைத்தது.

கடந்த 1952-ம் ஆண்டு முதல் பிரபஞ்ச அழகியை (மிஸ் யுனிவர்ஸ்) தேர்வு செய்வதற்கான சர்வதேச அழகிப் போட்டி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் மிஸ் யுனிவர்ஸ் அமைப்பால் இந்த போட்டி நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு கொரானா வைரஸ் பரவல் காரணமாக இந்த போட்டி ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் 69-வது பிரபஞ்ச அழகி போட்டி

அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் ஹாலிவுட் நகரில் உள்ள ராக் ஓட்டல் அண்ட் கேசினோவில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்தது.

கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் மிகுந்த பாதுகாப்புடன் இந்த பிரபஞ்ச அழகி போட்டி நடந்தது.

இந்த பிரபஞ்ச அழகி போட்டி இந்தியா உள்பட 74 நாடுகளை சேர்ந்த அழகிகள் பங்கேற்றனர். இந்தியாவின் சார்பில் இந்திய அழகி பட்டம் வென்ற அட்லைன் காஸ்டெலினோ (வயது 22) பங்கேற்றார்.

மெக்சிகோ அழகி ஆண்ட்ரியா மெசா

3 மணி நேரம் நடந்த இந்த போட்டியை ஹாலிவுட் நடிகர் மரியா லோபஸ் மற்றும் நடிகை ஒலிவியா கல்போ ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

முன்னாள் பிரபஞ்ச அழகிகள் செஷ்லி கிறிஸ்ட், பவுலினா வேகா, டெமி லீ டெபோ ஆகியோர் போட்டியின் நடுவர்களாக இருந்தனர்.

இந்த போட்டியில் பல்வேறு சுற்றுகளை கடந்து மெக்சிகோ நாட்டின் 26 வயதான ஆண்ட்ரியா மெசாவும், பிரேசிலின் ஜூலியா காமாவும் (28) இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

அப்போது மெக்சிக்கோ அழகி ஆண்ட்ரியா மெசாவிடம் நடுவர்கள் ‘‘நீங்கள் உங்கள் நாட்டின் தலைவராக இருந்தால் தொற்று நோயை எவ்வாறு கையாண்டு இருப்பீர்கள்?’’ என கேள்வி எழுப்பினர்.

அதற்கு ஆண்ட்ரியா மெசா ‘‘இந்த கடினமான சூழ்நிலையை கையாள சரியான வழி இல்லை. இருப்பினும் நிலைமை மோசமாவதற்கு முன்பே நான் ஊரடங்கு அமல்படுத்தி இருப்பேன் என்று நம்புகிறேன்.‌ ஏனென்றால் நாங்கள் பல உயிர்களை இழந்து உள்ளோம் அதை நம்மால் வாங்க முடியாது. எங்கள் மக்களை நாங்கள் கவனித்துக் கொள்ள வேண்டும் நான் ஆரம்பத்திலிருந்தே அவர்களைக் கவனித்து இருப்பேன்’’ என பதிலளித்தார்.‌

இறுதியாக அவரிடம் அழகின் தரம் குறித்து கேட்கப்பட்டது.‌ அதற்கு அவர் ‘‘நாம் மேலும் மேலும் முன்னேறிய ஒரு சமூகத்தில் வாழ்கிறோம். இப்போதெல்லாம் அழகு தான் நாம் பார்க்கும் ஒரே வழி. என்னைப் பொறுத்தவரை அழகின் தாக்கம் நம் ஆத்மாவுக்கு மட்டுமல்ல, நம் இதயத்திலும் நாம் நடந்து கொள்ளும் விதத்திலும் உள்ளது’’ என‌ கூறினார். அதனை தொடர்ந்து பிரபஞ்ச அழகியாக மெக்சிகோவின் ஆண்ட்ரியா மெசா அறிவிக்கப்பட்டார்.

2019-ம் ஆண்டின் பிரபஞ்ச அழகியான தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த ஜோஜிபினி டுன்சி, பிரபஞ்ச அழகிக்கான தேர்வை அறிவித்தவுடன் ஆண்ட்ரியா மெசா மகிழ்ச்சியில் உற்சாக குரலிட்டு, கண்ணீர் விட்டார். அதனை தொடர்ந்து ஆண்ட்ரியா மெசாவுக்கு பிரபஞ்ச அழகி மகுடத்தை ஜோஜிபினி டுன்சி சூட்டினார்.

2-வது இடம் பிரேசில் நாட்டு அழகி ஜூலியா காமாவுக்கு கிடைத்தது, பெரு நாட்டைச் சேர்ந்த ஜானிக் மெக்டா (27) 3-வது இடத்தை பெற்றார். இவர்களைத் தொடர்ந்து இந்திய அழகி அட்லைன் காஸ்டெலினோ பிரபஞ்ச அழகி போட்டியில் 4-வது இடத்தை பிடித்தார்.

இதுபற்றி அவர் கூறுகையில் ‘‘கொரோனா வைரஸ் தொற்று நோயின் 2-வது அலையுடன் போராடும் இது போன்ற கடினமான காலங்களில் நாட்டின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி’’ என கூறினார்.

மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த பெண்கள் 3-வது முறையாக பிரபஞ்ச அழகிப் பட்டத்தைத் கைப்பற்றியுள்ளனர். இதற்கு முன் கடந்த 2010-ல் ஜிமினா நவரெட்டேவும், கடந்த 1991-ல் லுபிடா ஜோன்சும் கைப்பற்றினர். ஏறக்குறைய 11 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் மெக்சிகோவை சேர்ந்த பெண் ஒருவர் பிரபஞ்ச அழகியாக முடிசூடப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: