Monday 20 January 2020

தமிழக சீர்திருத்தவாதிகள்

தமிழகத்தில் ஏராளமான சீர்திருத்தவாதிகள் தோன்றி சமூகம் மற்றும் அரசியல் மாற்றங்களை உருவாக்கினார்கள். அவர்களில் ராமலிங்க அடிகளார், ஸ்ரீவைகுண்ட சுவாமிகள் மற்றும் பெரியார் ஆகியோர் குறிப்பிடத்தக்க சமூக சீர்திருத்தவாதிகளாவர்.

ராமலிங்க அடிகளார்

ராமலிங்க அடிகளார், 1823-ம் ஆண்டு பிறந்தார். ஆன்மிக ஈடுபாடு கொண்ட அவர், கடலூர் அருகே வடலூரில் தனது இருப்பிடத்தை அமைத்து சமய கருத்துக்களை பரப்பினார். இவர் ‘சமரச சுத்த சன்மார்க்க சங்கம்’ என்ற அமைப்பை 1865-ல் ஏற்படுத்தினார்.

கடவுளை ஜோதி வடிவில் வழிபடலாம் என்றும், மற்ற உயிரினங்களிடமும் ஜீவகாருண்யம் காட்ட வேண்டும் என்பதையும் மக்களுக்குப் போதித்தார். வடலூர் அருகே மேட்டுக்குப்பத்தில் 1872-ல் சத்திய ஞானசபையை நிறுவினார். அவரை மக்கள், வள்ளலார் என்று சிறப்பித்து அழைத்தனர்.

வள்ளலார் இயற்றிய குறிப்பிடத்தக்க நூல் திருவருட்பா. மனுமுறை கண்ட வாசகம், ஜீவகாருண்யம் ஆகியவையும் இவரது பிற படைப்புகளாகும்.

வைகுண்ட சுவாமிகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சாமித்தோப்பில் 1809-ல் பிறந்தார். முடிசூடும் பெருமாள் என்ற இயற்பெயரைக் கொண்ட அவரை, முத்துக்குட்டி என்று அழைத்தனர்.

சாதி முறை மற்றும் தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராக போராடினார். சமூக மாற்றத்திற்கு அடிகோலினார். அவரது போதனைகள் ‘அய்யா வழி’ எனும் பெயரில் சமய வழியாக பின்பற்றப்படுகிறது. கன்னியாகுமரி, திருநெல்வேலி பகுதிகளில் இவரது வழிபாட்டு முறைகள் பரவி உள்ளது. அகிலத்திட்டு அம்மானை, அருள்நூல் ஆகியவை வைகுண்டர் அருளிய நூல்களாகும்.

பெரியார்

சமீபகாலத்தில் தோன்றிய குறிப்பிடத்தக்க சமூக சீர்த்திருத்தவாதி ஈ.ெவ.ராமசாமி எனும் பெரியார். சுதந்திரப் போராட்டத்தில் காந்தியடிகளின் கொள்கைகளை பரப்பும் முக்கிய செயல்பாட்டாளராக தமிழகத்தில் விளங்கினார். 1921-ல் கள்ளுக்கடை மறியலுக்காக தனது தென்னந்தோப்பில் 500க்கும் மேற்பட்ட தென்னைகளை வெட்டி வீழ்த்தினார்.

1924-ல் கேரளாவில் வைக்கம் என்ற இடத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஆதரவாக போராடி அவர்களுக்கான உரிமையை நிலைநாட்டி ‘வைக்கம் வீரர்’ என போற்றப்பட்டார்.

வருணாசிரம முறையை எதிர்த்த அவர், 1925-ல் சுயமரியாதை இயக்கத்தை தொடங்கினார். பிராமணர் அல்லாதார் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட இந்த இயக்கம், இந்து சமயம் மக்களின் வாழ்வில் ஏற்படுத்தியிருந்த கட்டுப்பாடுகளை தகர்ப்பதற்காக போராடுவதை முக்கிய கொள்கையாக கொண்டிருந்தது. பல சடங்கு முறைகளை எதிர்த்தார்.

தனது கருத்துக்களை குடியரசு, புரட்சி, விடுதலை போன்ற ஏடுகளைத் தொடங்கி எழுதினார். பெண்கள் உரிமைக்காக போராடிய அவரது அரும்பணிகளை பாராட்டி தமிழ்நாடு பெண்கள் மாநாட்டில் அவருக்கு பெரியார் பட்டம் (1938-ல்) வழங்கப்பட்டது. அவரது சமூக சீர்திருத்த கருத்துகளுக்காக யுனெஸ்கோ நிறுவனம் பெரியாரை ‘தெற்கு ஆசியாவின் சாக்ரட்டீஸ்’ என்று பாராட்டியது.

No comments: