Saturday 4 January 2020

தார் ஏரி

தார், கச்சா எண்ணெயின் கழிவுப் பொருள்தான். அதாவது குரூட் ஆயில் எனப்படும் கச்சாஎண்ணெய்ப் பொருளை பெட்ரோல் உள்பட பல பொருட்களாக பிரித்தெடுக்கும் சமயத்தில்தான் இந்த தாரும் வெளியேற்றப்படுகிறது. தார் குளிர்ந்த நிலையில் கெட்டியாக இருக்கும். காய்ச்சி சூடாக்கினால் 230 டிகிரி சென்டிகிரேடில் திரவமாக மாறும்.


பெட்ரோலியத்தை சுத்திகரிக்கும்போதுதான், பெட்ரோல் ஆலைகளில் இருந்து 95 சதவீத அளவுக்கு தார் உற்பத்தியாகிறது. சில இடங்களில் இயற்கையாகவே தார் படிவு காணப்படுகிறது. டிரினிடாட் என்ற இடத்தில் தார், ஏரிபோல பரந்துவிரிந்து படர்ந்து காணப்படுகிறது. இங்கு மட்டும் 15 மில்லியன் டன்கள் வரை தார் காணப்படுவதாக மதிப்பிடப்பட்டு உள்ளது.

மனிதன், தார் பயன்பாட்டை சுமார் 4500 ஆண்டுகளுக்கு முன்பே அறிந்துவிட்டான். மொகஞ்சதாரோ கட்டிடங்களில் செங்கற்களை பூச, தார் பயன்படுத்தப்பட்டிருப்பதாக புதைபொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.

தாருடன், கற்களை கலந்து சாலை அமைக்கும் பணி இங்கிலாந்தில் தோன்றியது. 1845-ல் அங்கு தார் சாலை உருவாக்கப்பட்டது. தார் சாலைகள் உறுதியாக இருந்ததுடன், காற்று மழையினால் பாதிக்கப்படவில்லை. மேலும் வாகனங்களின் டயர்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தவில்லை. எனவே தார் சாலையின் தேவை அதிகரித்தது. 1920-க்குப் பின்புதான் பெருமளவில் தார் சாலைகள் அமைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 100 ஆண்டுகளில்தான் உலகம் முழுக்க தார் சாலைகள் மிளிர்கின்றன.

No comments: