Thursday 28 November 2019

பிஎஸ்எல்வி சி-47 ராக்கெட் மூலம் நேற்று செலுத்தப்பட்ட கார்ட்டோசாட்-3 செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம் 25 செ.மீ. அளவுக்கு நிலப்பரப்பை துல்லியமாக படம்பிடிக்க முடியும்

புவி கண்காணிப்புக்கான கார்ட்டோ சாட்-3 உள்ளிட்ட 14 செயற்கைக் கோள்கள், பிஎஸ்எல்வி சி-47 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக நேற்று விண்ணில் செலுத்தப்பட்டு நிலைநிறுத்தப்பட்டன.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ), புவி கண் காணிப்புக்கான அதிநவீன கார்ட் டோசாட்-3 செயற்கைக்கோளை தயாரித்தது. இந்த செயற்கைக் கோளுடன் அமெரிக்காவின் 13 நானோ வகை செயற்கைக் கோள்களையும் பிஎஸ்எல்வி சி-47 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டு, அதற்கான 26 மணி நேர கவுன்ட்டவுன் நேற்று முன்தினம் தொடங்கியது.

அதைத் தொடர்ந்து ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி-47 ராக்கெட் நேற்று காலை 9.28 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. தரையில் இருந்து புறப்பட்ட 17 நிமிடம் 42 விநாடியில் 515 கி.மீ தூரத்தில் திட்டமிட்ட சூரிய ஒத்திசைவு சுற்றுப்பாதையில் செயற்கைக்கோளை ராக்கெட் வெற்றிகரமாக நிலைநிறுத்தியது. அடுத்த 10 நிமிட இடைவெளியில் அமெரிக்காவுக்குச் சொந்தமான 13 நானோ வகை செயற்கைக் கோள்களும் அதற்கான சுற்றுப் பாதைகளில் நிலைநிறுத்தப்பட்டன.

மூன்றாம் தலைமுறை செயற் கைக்கோளான கார்ட்டோசாட், 1,625 கிலோ எடையுடையது. இதன் ஆயுட்காலம் 5 ஆண்டுகள். இது முழுவதும் புவி கண்காணிப்பு மற்றும் ராணுவப் பாதுகாப்புக்கு பயன்படும். இதிலுள்ள நவீன பல்நோக்கு கேமராக்கள் புவியை பல்வேறு கோணங்களில் முப்பரி மாணத்தில் படம் எடுக்கும். அனைத்து சீதோஷ்ண நிலை களிலும், இரவு நேரங்களிலும் படம் பிடிக்கும் திறன் கொண்டது.

இதேபோல், நகர்ப்புற திட்ட மிடல், விவசாயம், பேரிடர் மேலாண் மைக்கும் இது பயன்படும். மேலும், போக்குவரத்து கண்காணிப்பு, ஊரகப் பகுதி வளங்களைக் கண் டறிதல் மற்றும் அடிப்படை கட்ட மைப்பை மேம்படுத்துதல், கட லோர நிலங்களை முறைப்படுத்தல், நீர்வள மேம்பாடு, வனங்களைக் கண்காணித்தல் போன்ற புவி சார்ந்த ஆய்வு பணிகளுக்கும் பயன்படும். இது கார்ட்டோசாட் வரிசையில் 9-வது செயற்கைக்கோளாகும்.

இதுதவிர, இந்தியாவின் நிலப்பரப்பு மற்றும் அதன் எல்லைப் பகுதிகளையும் இது கண்காணிக்கும். இதன்மூலம் நாட்டின் எல்லைப் பகுதிகளில் தீவிரவாதிகள் ஊடுருவலைத் தடுக்க முடியும்.

கார்ட்டோசாட்டைத் தொடர்ந்து ரிசாட்-2பிஆர்1, ரிசாட்-2பிஆர்2 ஆகிய செயற்கைக்கோள்களும் பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் டிசம்பர் மாதம் விண்ணில் ஏவப்பட உள்ளன. இதனால் நாட்டின் ராணுவ பாதுகாப்பு மேலும் பலமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது:

இதற்கு முன்பு ஏவப்பட்ட கார் ட்டோசாட் வகை செயற்கைக்கோள் கள் மூலம் அதிகபட்சம் 65 செ.மீட்டர் அளவுள்ள நிலப்பரப்பை மட்டுமே படம் பிடிக்க முடியும். ஆனால், கார்ட்டோசாட்-3 செயற் கைக்கோளில் உள்ள நவீன கேமராக் கள் மூலம் 25 செ.மீட்டர் பரப்பளவை நெருங்கி விண்ணில் இருந்து மிகத் துல்லியமாக 3-டியில் படம் பிடிக்கலாம். அதை 2-டிக்கு மாற்றும் வசதியும் உள்ளது. அமெரிக்காவின் வேர்ல்டுவியூ-3 செயற்கைக்கோள் நிலப்பரப்பை அதிகபட்சம் 31 செ.மீ அளவில்தான் படம் எடுக்கும். இதன்மூலம் உலகிலேயே மிகத் துல்லியமாக நிலப்பரப்பை படம் எடுக்கும் திறனை நாம் பெற்றுள்ளோம்.

இதில் உள்ள கேமராக்கள், செயற்கைக்கோள் சுழற்சிக்கேற்ப தன் கோணங்களை மாற்றிக் கொள்ளும். அதிலுள்ள நவீன ஆண்டெனா அதிக அளவு படங்கள் மற்றும் தகவல்களை ஒருங்கிணைத்து விரைவாக அனுப்பவும், பெறவும் உதவியாக இருக்கும். இதன் சிறப்பம்சமே 24 மணி நேரமும் கண்காணிப்பு பணிகளுக்கு பயன்படுத்தலாம். இதனால் நமது நாட்டின் பாதுகாப்பு மேலும் வலுப்பெறும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இஸ்ரோ, 1999-ம் ஆண்டு முதல் இதுவரை 368 செயற்கைக் கோள்களை விண்ணில் வெற்றி கரமாக நிலைநிறுத்தி சாதனை புரிந் துள்ளது. அதில் 48 செயற்கைக் கோள்கள் இந்தியாவுக்காகவும், 310 செயற்கைக்கோள்கள் வணிக ரீதியாக வெளிநாடுகளுக்காகவும் அனுப்பப்பட்டன. மேலும் 10 செயற்கைக்கோள்கள் மாணவர்கள் தயாரித்தவையாகும்.

கார்ட்டோசாட்-3 செயற்கைக் கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரோ விஞ்ஞானி களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவரது ட்விட்டர் பதிவில், ‘‘கார்ட் டோசாட்-3 மற்றும் அமெரிக்காவின் 13 செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி-47 ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டதற்காக, இஸ்ரோ விஞ்ஞானிகள் குழுவுக்கு மனமார்ந்த பாராட்டு. தொலையுணர்வு திறனை அதிநவீன கார்ட்டோசாட்-3 அதிகரிக்கும். இஸ்ரோ விஞ்ஞானிகளின் சாதனையால், நாடு மீண்டும் பெருமையடைகிறது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments: