Thursday 4 October 2018

3 பேருக்கு வேதியியல் நோபல் பரிசு 

இந்த ஆண்டின் வேதியியல் துறைக்கான நோபல் பரிசு ஒரு பெண் உட்பட 3 விஞ்ஞானிகளுக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமைதிக்கான நோபல் பரிசு நாளை அறிவிக்கப்படுகிறது. ஸ்வீடனைச் சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் நினைவாக ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. நடப்பு ஆண்டுக்கான நோபல் பரிசு கடந்த 1-ம் தேதி முதல் துறை வாரியாக அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், பிரான்செஸ் எச்.அர்னால்ட், ஜார்ஜ் பி.ஸ்மித் மற்றும் சர் கிரிகோரி பி.வின்ட்டர் ஆகிய 3 பேருக்கு வேதியியல் துறைக்கான நோபல் பரிசு வழங்கப்படும் என ‘ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயன்சஸ்’ நேற்று அறிவித்தது. மனித குலத்துக்கு உதவும் வகையில் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத வேதியியல் பொருட்களைக் கண்டுபிடித்ததற் காக இவர்களுக்கு இந்த பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த பெண் விஞ்ஞானியான பிரான்செஸ் எச்.அர்னால்ட் கலிபோர்னியா தொழில்நுட்பக் கழகத்தில் பேராசிரி யராக உள்ளார். இவர் வேதியியல் செயல்பாட்டில் நொதிகளின் (Enzymes) பரிணாமம் மற்றும் புரதங்களின் வினையூக்கம் குறித்து மேற்கொண்ட ஆய்வுக்காக இந்த பரிசு வழங்கப்படுகிறது. இவருக்கு பரிசு தொகையான ரூ.6.5 கோடியில் 50 சதவீதம் வழங்கப்படும். அமெரிக்காவைச் சேர்ந்தவரும் மிசவுரி பல்கலைக்கழக (கொலம்பியா) பேராசிரியருமான ஜார்ஜ் பி.ஸ்மித் மற்றும் பிரிட்டனைச் சேர்ந்தவரும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பேராசிரியருமான சர் கிரிகோரி பி.வின்ட்டர் ஆகிய இருவருக்கும், மீதம் உள்ள 50 சதவீத பரிசுத் தொகை சரிசமமாக பகிர்ந்தளிக்கப்படும். பாக்டீரியாக்களை தாக்கும் வைரஸ்கள் மூலம் புதிய புரதங்கள் உருவாவதை ஸ்மித் கண்டறிந்துள்ளார். புதிய மருந்து உருவாக்கத்துக்கு இந்த நுட்பம் உதவிகரமாக உள்ளதால் இவர் நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதே நுட்பத்தைப் பயன்படுத்தி மருந்து கண்டுபிடிக்க உதவியதற்காக மற்றொரு விஞ்ஞானியான வின்ட் டருக்கு நோபல் பரிசு வழங்கப் படுகிறது. மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அமெரிக்கா மற்றும் ஜப்பானை சேர்ந்த இரு விஞ்ஞானிகளுக்கு கடந்த 1-ம் தேதியும், இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு பெண் உட்பட 3 விஞ்ஞானிகளுக்கு கடந்த 2-ம் தேதியும் அறிவிக்கப்பட்டது. அமைதிக்கான நோபல் பரிசு நாளையும் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு வரும் 8-ம் தேதியும் அறிவிக்கப்பட உள்ளது. இலக் கியத்துக்கான நோபல் பரிசுக்கு உரியவர்களை தேர்வு செய்யும் தேர்வுக் குழு மீது புகார் எழுந்துள்ளதால், இத்துறைக் கான நோபல் பரிசு ஒத்தி வைக்கப் பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள் ளது.

No comments: