Tuesday 3 July 2018

கடந்த வாரம் | 03.07.2018

கல்விச்சோலை பொது அறிவு - kalvisolai latest g.k and qr code


எட்டுவழிச் சாலை: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
சென்னை-சேலம் எட்டுவழிச் சாலைத் திட்டம், சுற்றுச்சூழல், காட்டுயிர்களுக்குப் பாதிப்பில்லாமல் செயல்படுத்த ஆய்வுக் குழு அமைக்கவேண்டும் எனத் தொடரப்பட்ட பொதுநல வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் ஜூன் 29 அன்று நோட்டீஸ் அனுப்பியது. இந்தத் திட்டத்துக்குப் பொதுமக்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கே.கே. சசிதரன், ஆர். சுப்ரமணியன் அடங்கிய அமர்வு, இது குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜூலை 12 அன்று ஒத்திவைத்தது.

எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கு
அதிமுக எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கில் மூன்றாவது நீதிபதியாக சத்தியநாராயணாவை நியமனம் செய்து உச்ச நீதிமன்றம் ஜூன் 24 அன்று உத்தரவிட்டது. இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதைத் தொடர்ந்து, வழக்கை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி 18 எம்எல்ஏக்கள் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, எஸ்.கே.கவுல் அடங்கிய அமர்வு விசாரித்தது. இந்த வழக்கு உயர் நீதிமன்றத்திலேயே நடைபெறும் என்று தெரிவித்த நீதிபதிகள், மனுதாரர்களின் கோரிக்கையை ஏற்று மூன்றாவது நீதிபதியாகச் சத்தியநாராயணாவை நியமித்தனர். அத்துடன், இந்த வழக்கை விரைவாக விசாரித்துத் தீர்ப்பு வழங்க வேண்டுமென்றும் உத்தரவிட்டனர்.

ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ.69.10-ஆக ஜூன் 28 அன்று கடும் வீழ்ச்சியடைந்தது. இதற்குமுன், 2016-ம் ஆண்டு நவம்பர் 24 அன்று இருந்த ரூ.68.86 என்பதுதான் மிகக் குறைவான ரூபாய் மதிப்பு. கடந்த வாரம், ரூபாய் மதிப்பு அடைந்த கடும் சரிவு முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வும் இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைந்ததுக்குக் காரணம். இந்த நிலை நீடித்தால், நாட்டில் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை, பணவீக்கம் ஏற்படுவதற்கு வாய்ப்பிருப்பதாகப் பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

புதிய உயர்கல்வி ஆணையம்
நாட்டில் 50 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கிவரும் பல்கலைக்கழக மானியக் குழுவை நீக்கிவிட்டு உயர் கல்வி ஆணையம் அமைக்க மத்திய அரசு முடிவெடுத்திருப்பதாக மத்திய மனிதவளத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஜூன் 27 அன்று தெரிவித்தார். இதன்படி, அமையவிருக்கும் உயர்கல்வி ஆணையம், கல்வி தொடர்பான விவகாரங்களை மட்டுமே நிர்வகிக்கும். நிதி மானியங்கள் வழங்குவது போன்ற பணிகள் மனிதவளத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘1956 பல்கலைக்கழக மானியக் குழு சட்ட’த்தை நீக்கிவிட்டு ‘இந்திய உயர்கல்வி ஆணையச் சட்டம் 2018’ கொண்டுவரப்பட இருக்கிறது. இது தொடர்பான தங்கள் கருத்துகளைக் கல்வியாளர்களும் பொதுமக்களும் ஜூலை 7-ம் தேதி மாலை 5 மணிவரை மனிதவளத்துறைக்கு அனுப்பலாம்.

பிரதமரின் பயணச் செலவு ரூ.355 கோடி
பிரதமர் நரேந்திர மோடி நான்கு ஆண்டுகளில் 52 நாடுகளுக்கு 41 பயணங்கள் மேற்கொண்டிருக்கிறார். பிரதமரின் இந்த வெளிநாட்டு பயணங்களுக்காக ரூ. 355 கோடி செலவு செய்யப்பட்டிருப்பது தகவல் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவலால் தெரியவந்துள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த ஆர்.டி.ஐ. செயற்பாட்டாளர் பீமப்பா, பிரதமர் அலுவலகத்திடம் இருந்து பெறப்பட்ட இந்தத் தகவலை ஜூன் 28 அன்று வெளியிட்டார். பதவியேற்ற நான்கு ஆண்டுகளில் பிரதமர் மோடி 165 நாட்களை வெளிநாட்டில் கழித்திருக்கிறார். இந்தத் தகவலில் பிரதமரின் உள்ளூர் பயணச் செலவுகள் குறிப்பிடப்படவில்லை.

பெண்களுக்கு ஆபத்தான நாடு இந்தியா!
தாமஸ் ராய்ட்டர்ஸ் நிறுவனம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக உலக நாடுகளில் எடுக்கப்பட்ட ஆய்வு முடிவுகளை ஜூன் 26 அன்று வெளியிட்டது. இந்த ஆய்வில், உலகில் பெண்களுக்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருப்பது தெரியவந்ததுள்ளது. இந்தியாவைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானும் சிரியாவும் அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன. கடந்த 2011-ம் ஆண்டு, நடத்தப்பட்ட இதே ஆய்வில், இந்தியா நான்காவது இடத்தில் இருந்தது. பெண்களுக்கான சுகாதார நலன், பாலின வேறுபாடு, பாரம்பரிய வழக்கங்கள், பாலியல் குற்றங்கள், இதர குற்றங்கள், கடத்தல் போன்ற ஆறு காரணிகளின் அடிப்படையில் இந்தியா பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடாக இருப்பதாக வரையறுத்ததாகத் தெரிவித்திருக்கிறது தாமஸ் ராய்ட்டர்ஸ் நிறுவனம். ஆனால், இந்த ஆய்வு முடிவுகள் தவறானவை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

உலகின் மிகச் சிறிய கணினி
உலகின் மிகச் சிறிய கணினியை அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்திருக்கின்றனர். 0.3 மில்லிமீட்டர் நீளத்தில் இந்தக் கணினி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஓர் அரிசியின் அளவைவிட மிகச் சிறியதாக இருக்கிறது. இதற்குமுன், கடந்த மார்ச் மாதம் ஐ.பி.எம். நிறுவனம் 1 மில்லி மீட்டர் நீளத்தில் சிறிய கணினியை வடிவமைத்திருந்தது. தற்போது அதைவிட சிறிய அளவிலான கணினியை மிச்சிகன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தயாரித்திருக்கின்றனர். இந்தக் கணினியில் அமைந்துள்ள ‘டெம்பரேச்சர் சென்சாரைப்’ பயன்படுத்திப் புற்றுநோய் செல்களில் ஆராய்ச்சியை மேற்கொள்ள முடியும் என்று தெரிவிக்கின்றனர் மிச்சிகன் ஆராய்ச்சியாளர்கள்.

பாஸ்போர்ட் விண்ணப்பச் செயலி
மொபைல் ஃபோன் செயலியான ‘பாஸ்போர்ட் சேவா ஆப்’ மூலம் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் வசதியை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஜூன் 26 அன்று தொடங்கிவைத்தார். பாஸ்போர்ட் சேவை நாளை முன்னிட்டு இந்தச் செயலி அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தச் செயலியின் மூலம் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தால், காவல் துறையினர் சரிபார்த்து ஒப்புதல் அளித்த பிறகு, தபாலில் பாஸ்போர்ட் அனுப்பிவைக்கப்படும். அத்துடன், தற்போது நாட்டில் செயல்படும் 260 பாஸ்போர்ட் மையங்கள், அனைத்து மக்களவை தொகுதிகளுக்கும் ஒன்றாக விரிவாக்கம் செய்யப்படும் என்றும் மத்திய அமைச்சர் சுஷ்மா தெரிவித்தார்.


No comments: