Sunday 8 December 2019

இரு பெயரிடுதல் முறை

உலகம் முழுவதும் உள்ள மக்கள் குழப்பமின்றி புரிந்து கொள்ள ஏதுவாக தாவரங்கள் மற்றும் விலங்குகளை இரு சொல்லால் ஆன ஒரே அறிவியல் பெயரால் அழைக்கும் முறை உள்ளது. இதை ஆங்கிலத்தில் பைனாமியல் நாமன்கிலச்சர் என்பார்கள்.

இந்த முறையை அறிவியல் பூர்வமாக முதலில் உருவாக்கியவர் ஸ்வீடன் நாட்டு தாவரவியல் வல்லுநரான கரோலஸ் லின்னேயஸ் ஆவார். இவரே இருசொல் பெயர்முறையின் தந்தை எனப்படுகிறார்.

லின்னேயஸுக்கு முன்னரே கஸ்பர்டு பாஹின் என்பவர் இந்த முறையை அறிமுகம் செய்துவிட்டதாக சில ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் பாஹீன் பின்பற்றிய முறை அறிவியல் பூர்வமானதல்ல என்று புறம்தள்ளப்படுகிறது.

அசாடிரசக்டா இண்டிகா, எலபஸ் மேக்சிமஸ், ஹோமோ செப்பியன்ஸ் போன்றவை இரு சொல் பெயரிடல் முறைக்கு சில சான்றுகள். இந்த மூன்றும் முறையே வேம்பு, ஆசிய யானை, மனிதன் ஆகியவற்றை குறிக்கும் இருசொல் பெயர்களாகும்.

இந்த முறையில் எழுதும்போது முதலில் உள்ள சொல் பேரினப் பெயரை குறிக்கும். அதன் முதல் எழுத்தை ஆங்கிலத்தில பெரிய எழுத்தில் குறிப்பிடுவார்கள். இரண்டாவது சொல் சிற்றினத்தை குறிக்கும். பேரினச் சொல் ஒரு பெயர்ச் சொல்லாகும், சிற்றினப் பெயர் ஒரு உரிச்சொல்லாகும்.

ஹோமோ என்பது மனித இனத்தின் பேரினப் பெயர், செப்பியன்ஸ் என்பது தற்கால மனிதர்களை குறிக்கும் சிற்றின பெயராகும். ஹோமோ செப்பியன்ஸ் என்றால் புத்திசாலி மனிதன் என்பது பொருளாகும். மனிதனின் பரிணாம வளர்ச்சியில் இதற்கு முந்தைய மனித இனத்தின் பெயர் ஹோமோ எரக்டஸ் எனப்படுகிறது. இதற்கு நிமிர்ந்து நின்ற மனிதன் என்பது பொருளாகும்.

No comments: