Tuesday 18 June 2019

சமீபத்திய நிகழ்வுகள் ஜூன் 13, 2019 வரை

கிரிஷ் கர்னாட் காலமானார்
ஜூன் 10: நாடக எழுத்தாளர், நடிகர், இயக்குநர், ஆசிரியர், செயற்பாட்டாளர் எனப் பன்முக ஆளுமையாக அறியப்பட்ட கிரிஷ் கர்னாட் உடல்நலக் குறைவு காரணமாக பெங்களூருவில் காலமானார். அவருக்கு வயது 81. கன்னட மொழியில் அவரது இலக்கிய பங்களிப்புகளுக்காக ஞானபீட விருது, சாகித்ய அகாடமி விருதுகளைப் பெற்றவர். ‘துக்ளக்’, ‘ஹயவதனா’, ‘நாகமண்டலா’ போன்றவை அவரது முக்கியமான படைப்புகள்.

போக்குவரத்து நெரிசல்: மும்பை முதலிடம்
ஜூன் 10: உலகில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் நகரங்களில் மும்பை முதல் இடத்திலும், டெல்லி நான்காவது இடத்திலும் இருக்கின்றன. ஆம்ஸ்டர்டாமைச் சேர்ந்த ‘டாம்டாம்’ நிறுவனம் வெளியிட்ட ‘போக்குவரத்து 2018’ பட்டியலில் 56 நாடுகளைச் சேர்ந்த 403 நகரங்கள் இடம்பெற்றிருந்தன. இதில், மும்பை (இந்தியா), போகோட்டா (கொலாம்பியா), லிமா (பெரு) ஆகியவை உலகின் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களில் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன.

கிரிக்கெட் வீரர் யவுராஜ் சிங் ஓய்வு
ஜூன் 10: இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். யுவராஜ் சிங் தன் 19 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையில், 40 டெஸ்ட் போட்டிகள், 304 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள், 58 ‘ட்வென்டி20’ சர்வதேசப் போட்டிகள் ஆகியவற்றில் விளையாடியிருக்கிறார்.

2018: கார்பன் உமிழ்வு 2% அதிகரிப்பு
ஜூன் 11: 2018-ம் ஆண்டில், உலகளாவிய கார்பன் உமிழ்வு 2 சதவீதம் அதிகரித்திருப்பதாக பிரிட்டனைச் சேர்ந்த ‘பிபி’ (BP) ஆற்றல் நிறுவனத்தின் ஆய்வு தெரிவிக்கிறது. உலகின் ஆற்றல் தேவையும் கார்பன் உமிழ்வும் அதிவேகமாக வளர்ந்துவருவதால், உலகம் நிலையற்ற பாதையில் பயணிப்பதாக இந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

அமிதவ் கோஷுக்கு ஞானபீட விருது
ஜூன் 12: இந்திய ஆங்கில எழுத்தாளர் அமிதவ் கோஷுக்கு 54-வது ஞானபீட விருது வழங்கப்பட்டது. அவரது இந்திய இலக்கிய பங்களிப்புக்காக நாட்டின் உயரிய இலக்கிய விருதான ஞானபீட விருது டெல்லியில் நடந்த விழாவில் வழங்கப்பட்டது. மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி இந்த விருதை அவருக்கு வழங்கினார். 1990-ம் ஆண்டு, அவரது ‘தி ஷேடோ லைன்ஸ்’ புத்தகத்துக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது.

கஜகஸ்தான்: புதிய அதிபர் பதவியேற்பு
ஜூன் 12: கஜகஸ்தானின் புதிய அதிபராக காசிம்-யோமர்ட் டோக்யேவ் பதவியேற்றார். ஜூன் 9 அன்று நடைபெற்ற அதிபர் தேர்தலில் 71 சதவீத வாக்குகள் பெற்று அவர் வெற்றிபெற்றார். 30 ஆண்டுகள் கஜகஸ்தான் அதிபராக இருந்த நுர்சுல்தான் நஸர்பயேவ் பதவி விலகியதால், புதிய அதிபராக காசிம்-யோமர்ட் டோக்யேவ் பதவியேற்றிருக்கிறார்.

இந்தியாவுக்கான விண்வெளி நிலையம்
ஜூன் 13: இந்தியாவுக்கான பிரத்யேகமான விண்வெளி நிலையத்தை அமைக்கும் திட்டத்துக்கான பணிகள், 2022 ஆகஸ்ட்டில் ‘ககன்யான்’ திட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு, தொடங்கப்படும் என்று இஸ்ரோ தலைவர் கே. சிவன் தெரிவித்துள்ளார். பூமிக்கு மேல் 400 கிலோமீட்டர் சுற்றுவட்டப்பாதையில் இந்தியாவின் விண்வெளி நிலையம் அமைக்கப்படவிருக்கிறது. இந்த விண்வெளி நிலையம் 2030-ம் ஆண்டுக்குள் அமைக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

No comments: