Tuesday 26 December 2017

தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாத அய்யர்


தமிழ் மொழியின் பழம்பெருமையைப் பலர் அறியாமல் வாழ்ந்து வந்த காலத்தில், அதாவது 19 -ஆம் நூற்றாண்டின் நடுவில், தமிழுக்கு புத்துயிர் ஊட்ட, பலர் தோன்றினார்கள். அவர்களில் பெருமைக்குரியவராகத் திகழ்பவர்தான் தமிழ்த் தாத்தா என்று அழைக்கப்படும் பேராசிரியர் உ.வே. சாமிநாதன் என்கிற உ.வே.சா. தமிழுக்கு ஆற்றிய அரும்பணியும், அதன்பொருட்டு அவர் அடைந்த இன்னல்களும், தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்ட அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய அரிய வரலாறு."வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்தெய்வத்துள் வைக்கப் படும்" - என்பது வள்ளுவம். அவ்வகையில் தமது 87 வயது வரையிலும் வாழ்வாங்கு வாழ்ந்தவர் தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாத அய்யர் அவர்கள். வயதால் மட்டுமின்றி தமிழ்ப் பணியிலும் வாழ்வாங்கு வாழ்ந்தவர். இவர் 19.02.1855 ஆம் ஆண்டு நாகை மாவட்டம் சூரியமலை என்ற ஊரில் திரு. வேங்கட சுப்பையர் அவர்களுக்கும் திருமதி சரசுவதி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். பெற்றோர் இவருக்கு வேங்கட ரத்தினம் என்று பெயரிட்டனர். இப்பெயரை மாற்றி இவருக்கு சாமிநாதன் என்று பெயரிட்டவர் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள். கல்விஇவர் தொடக்கக் கல்வியை உத்தமதானபுரம் திண்ணைப் பள்ளியிலும், அரியலூர் சடகோப ஐயங்காரிடமும், முத்து வேலாயுதம் பண்டாரத்தாரிடமும், குன்னம் சிதம்பரம் பிள்ளை அவர்களிடமும், கார்குடி கஸ்தூரி ஐயங்காரிடமும், செங்ஙனம் விருத்தாசல ரெட்டியாரிடமும் கல்வி கற்ற உ.வே.சா தனது 17 வயதில் திருவாவடுதுறை ஆதீனத்தில் திவானாகப் பணியாற்றிய மகாவித்துவான் மீனாட்சி சுந்தரத்திடம் ஆறு ஆண்டுகள் பயின்று தமது கல்வி அறிவைப் பட்டை தீட்டிக் கொண்டார். ஆசிரியப் பணி தமது 25வது வயதில் அதாவது 1880 ஆம் ஆண்டு பிப்ரவரி 16ந் தேதி முதல் 1903 ஆம் ஆண்டு வரை 23 ஆண்டுகள் இவர் கும்பகோணம் அரசு கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார். அதனைத் தொடர்ந்து 1903 முதல் 1919 ஆம் ஆண்டு வரை 16 ஆண்டுகள் சென்னை மாகாணக் கல்லூரியிலும், 1924 இல் சிதம்பரம் மீனாட்சித் தமிழ்க் கல்லூரியிலும் இவர் ஆசிரியராகப் பணியாற்றினார். ஏறக்குறைய 40 ஆண்டுக் காலம் இவர் கற்பித்தல் பணியில் ஈடுபட்டிருந்தார். இவர் மாநிலக் கல்லூரியில் பணிபுரிந்த போது, சென்னை திருவல்லிக்கேணி திருவேட்டீஸ்வரன் பேட்டைக்கு நிரந்தரமாகக் குடி பெயர்ந்தார். பதிப்பித்தல் பணிஅக்காலத்தில் நூல்கள் அனைத்தும் ஏட்டுச் சுவடிகளில் (பனை ஓலையில்) எழுதப்பட்டிருந்தன. ஒரு நூலைத் தேடிக் கண்டுபிடிப்பதும், படிப்பதும், அதனைப் பதிப்பிப்பதும் மிக எளிய செயலன்று. அனைத்து வசதிகளும் நிரம்பிய இக்காலத்திலேயே இது சவால் நிறைந்ததாக இருக்கும்பொழுது அக்காலத்தில் இப்பணி எத்துனைத் துன்பம் நிறைந்ததாக இருந்திருக்கும் என்று சொல்லித் தெரிய வேண்டுவதில்லை. இதுபோன்ற ஏட்டுச்சுவடிகளை ஆராய்ந்து பின்பு நூல் வடிவிலே பதிப்பிக்கும் பொருட்டு திருவாவடுதுறை, திருப்பனந்தாள், தருமபுரம் போன்ற தமிழ் வளர்த்து வரும் ஆதீனங்களில் சுவடிகளைத் தேடி அலைந்தார். அங்கு அருமையான சுவடிகள் பல கரையான்கள் அரிக்கப்பட்ட நிலையில் இருக்கக் கண்டு மனம் புண்பட்டார். உ.வே.சா. அவர்கள் குறிஞ்சிப் பாட்டைப் பதிப்பிக்க முயலும் பொழுது அதில் கூறப்பட்டுள்ள 99 பூக்களில் மூன்று பூக்களின் பெயர்கள் தெளிவு பெறாமலே இருந்தனவாம். அதனைத் தெளிவுபடுத்திப் பதிப்பித்தாராம். அதனைப் போலவே சிலப்பதிகாரமா அல்லது சிறப்பதிகாரமா என்ற ஐயப்பாடு எழுந்து சிலப்பதிகாரம் தான் என்று அவர் முடிவு எடுப்பதற்கு மிகுந்த காலம் தேவைப்பட்டது என்பர். அப்போது ஆங்கிலேயர் ஆட்சி நம் நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்நாளில் பழந்தமிழ் சுவடிகளைக் கற்பவரும் இல்லை, அவற்றை பாதுகாக்க நினைப்பவரும் இல்லை என்ற நிலை நாட்டில் நிலவியது. இந்நிலையிலும் இவரது தமிழ் ஆர்வத்தைக் கண்டு வியந்த தருமபுரம் ஆதீனத்தின் தலைவராக இருந்த ஸ்ரீ மாணிக்கவாசகர் தேசிகர் ஆதீனத்தில் இருந்த 50-க்கும் மேற்பட்ட சுவடிகளை உ.வே. சாமிநாதருக்கு கொடுத்து உதவினார். அந்த ஏட்டுச் சுவடிகளை நூலாக வெளியிட, இவருக்கு வேண்டிய உதவிகளை செய்ய கும்பகோணத்தில் முன் சீப்பாக இருந்த ராமசாமி என்பவர் முன்வந்தார். பின்னர் ராமசாமியின் உதவியால் உ.வே.சா. முதன் முதலில் பதிப்பித்த நூல் "சீவகசிந்தாமணி'. அடுத்து சங்க இலக்கியங்களுள் ஒன்றான "பத்துப்பாட்டு' என்ற நூலை உ.வே.சா. அச்சிட்டு வெளியிட்டார். அதன் பிறகு ஐம்பெருங்காப்பியங்களில் "சிலப்பதிகாரம்', "மணிமேகலை' போன்ற நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டார். அடுத்து "குறுந்தொகை' என்ற இலக்கியத்திற்கு உரை எழுதி வெளியிட்டார். இதைத் தொடர்ந்து எண்ணற்ற நூல்களை வெளியிட்டு தமிழுக்கு அரும்பணியாற்றினார். இவர்பதிப்பித்த நூல்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம். "சங்க நூல்கள்', "பிற்கால நூல்கள்', "இலக்கண நூல்கள்', "திருவிளையாடற் புராணம்' போன்ற காவிய நூல்களாகும். ஆகமொத்தம் ஏட்டுச் சுவடிகளைப் பதிப்பித்து நூலாக வெளியிட உ.வே.சா. பட்ட இன்னல்கள் கணக்கில் அடங்காதவை. பதிப்புச் சிக்கல் ஏடு எடுக்கும்போது ஓரஞ் சொரிகிறது. கட்டு அவிழ்க்கும் போது இதழ் முறிகிறது. ஏட்டைப் புரட்டும் போது துண்டு துண்டாய்ப் பறக்கிறது. இனி எழுத்துக்களோ என்றால் வாலும் தலையும் இன்றி, நாலு புறமும் பாணக் கலப்பை மறுத்து மறுத்து உழுது கிடக்கின்றது என்று சி.வை.தாமோதரம்பிள்ளை பதிப்புப் பணியில் நேரிடும் சிக்கல்களை எடுத்துக் காட்டுகிறார். (கலித்தொகை பதிப்புரை) ஏட்டுச் சுவடியிலுள்ள ஒரு நூலை ஆராய்ந்து, வெளியிடுவதில் உண்டாகும் துன்பம் மிக அதிகம். அச்சுப் பிரதியில் உள்ளவாறு ஏட்டுச் சுவடி அமைந்திராது. சுவடியில் எழுதுவோரால் நேரும் பிழைகள் குறியீடுகள் கொம்பு கால் புள்ளி முதலியவை இரா. நெடிலுக்கும் குறிலுக்கும் வேறுபாடு தெரியாது. அடிகளின் வரையறைகளும் இரா. இது மூலம், இஃது உரை, இது மேற்கோள் என்று அறியவும் இயலாது. எல்லாம் ஒன்றாகவே எழுதப்பட்டிருக்கும். ஏடுகள் அவிழ்ந்தும் முறை பிறழ்ந்தும் முன் பின்னாக மாறியும்முழுதும் எழுதப் படாமலும் இருக்கும் என்று உ.வே.சா. பதிப்புப் பணியின் சிக்கல்களைப் பட்டியலிட்டுக் காட்டுகிறார். இத்துணை இடையூறுகளுக்கு இடையிலும் உ.வே.சா. அவர்கள் பதிப்பித்த நூல்கள் ஏராளம். அவை: 1. வேணு வனலிங்க விலாசச் சிறப்பு (1878) - தமது 23-வது வயதில் பதிப்பித்தார். காப்பிய வரிசையில்,2. சீவகசிந்தாமணி (1887) 3. சிலப்பதிகாரம் (1892) 4. மணிமேகலை (1898) 5. பெருங்கதை (1924) 6. உதயகுமார காவியம் (1935) சங்க இலக்கிய வரிசையில், 7. பத்துப்பாட்டு (1889) 8. புறநானூறு ( 1894) 9. ஐங்குறுநூறு (1903) 10. பதிற்றுப்பத்து (1904) 11. பரிபாடல் ( 1918) 12. குறுந்தொகை ( 1937) இலக்கண வரிசையில், 13. புறப்பொருள் வெண்பாமாலை (1895) 14. நன்னூல் மயிலைநாதர் உரை (1925) 15. நன்னூல் சங்கர நமசிவாயர் உரை (1928) 16. தமிழ் நெறி விளக்கம் (1937) பிரபந்தங்கள் வரிசையில், 17. மீனாட்சிசுந்தரம் பிள்ளை பிரபந்தத் திரட்டு 18. சிவக்கொழுந்து தேசிகர் பிரபந்தத் திரட்டு19. குமரகுரபரர் பிரபந்தத் திரட்டு20. தக்கயாகப் பரணி21. பாசவதைப் பரணி22. மூவருலா23. கப்பற் கோவை24. தென்றல் விடு தூதுஆகியவற்றைப் பதிப்பித்துள்ளார். மேலும் 1883 முதல் 1940 வரை 14 புராணங்களைப் பதிப்பித்துள்ளார். இவர் ஏறக்குறைய 84 நூல்களைப் பதிப்பித்துள்ளார். (மேலும் ஆய்விற்குரியது) இதனைக் கீழ்க்கண்டவாறு பகுக்கலாம். · சங்க இலக்கியங்கள் - 18 · காப்பியங்கள் - 05 · புராணங்கள் - 14 · உலா - 09 · கோவை - 06 · தூது - 06 · வெண்பா நூல்கள் - 13 · அந்தாதி - 03 · பரணி - 02 · மும்மணிக்கோவை - 02 · இரட்டை மணிமாலை - 02 · இதர பிரபந்தங்கள் - 04 பட்டமும் விருதுகளும்இவ்வாறு தமிழ்ப் பணியைத் தனது உயிர் மூச்சாகக் கொண்டு செயல்பட்ட உ.வே.சா அவர்கள் பெற்ற பட்டங்களும் சிறப்புகளும் ஏராளம். அவை:§ 1905 இல் அரசாங்கம் 1000 ரூபாய் பரிசு.§ 1906-ஆம் ஆண்டு சென்னை அரசாங்கம் இவரது தமிழ்த் தொண்டை பாராட்டி "மகா மகோ பாத்யாய' (பெரும் பேராசிரியர்) என்ற பட்டத்தை வழங்கியது.§ ஜி.யு.போப், சூலியஸ் வின்கோன் ஆகியோரின் பாராட்டு.§ 1917 திராவிட வித்தியா பூஷணம் பட்டம்.§ 1925 இல் தாஷிணாத்ய கலாநிதி.§ 1925 இல் மதுரைத் தமிழ்ச் சங்கம் 5000 ரூபாய் பரிசு.§ 1932-ஆம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகம் இவருக்கு "தமிழ் இலக்கிய அறிஞர்' என்ற விருதை வழங்கிக் கௌரவித்தது.§ பாண்டித்துரை தேவரின் 4வது தமிழ்ச் சங்கத்தின் வாழ்நாள் புலவர்.§ பெசன்ட் நகரில் 1942 இல் உ.வே.சா. நூல் நிலையம். 2006 இல் அஞ்சல் தலையை இந்திய அரசு வெளியிட்டது.1937-ஆம் ஆண்டு சென்னையில் மகாத்மா காந்தி தலைமையில் நடைபெற்ற இலக்கிய மாநாட்டில் வரவேற்புக் குழுத் தலைவராக இருந்து உ.வே.சா. உரை நிகழ்த்தினார்.இந்த உரையை கேட்ட மகாத்மா, "இந்த பெரியவரின் அடிநிழலில் இருந்தவண்ணம் நான் தமிழ் கற்க வேண்டுமென்ற ஆர்வமிகுதிதான் என்னிடம் எழுகிறது' என்றார். இம் மாநாட்டின் போது அனைவராலும் "தமிழ்த் தாத்தா' என்று அழைக்கப்பட்ட உ.வே. சாமிநாதன் காந்தியடிகளைவிட பதினைந்து வயது மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.மறைவு:இவர் 1940-ஆம் ஆண்டு "என் சரித்திரம்' என்ற நூலை எழுதத் தொடங்கினார். இந்நூலில் தமிழ் வளர்ச்சி, தமிழ் நாட்டின் வரலாறு, அவர் காலத்தில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்கள், புரவலர்கள், ஆதீனத் தலைவர்கள் ஆகியோரின் வரலாற்றுக் குறிப்புகள் அடங்கியிருந்தன. இந்நூல் முழுமையடைவதற்கு முன்னரே 1942-ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 28 ஆம் நாள் இரு நூற்றாண்டைக் கண்ட பெருமிதத்தோடு உ.வே.சா. இவ்வுலகை விட்டு மறைந்த போதிலும், காலமெல்லாம் வாழும் தமிழ்மொழிபோல் தமிழ்த் தாத்தாவாக என்றென்றும் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்.உ.வே.சா. அவர்களின் தமிழ்ப்பணி தமிழின் பெருமையை உலகறியச் செய்வித்தது. அவர்தம் பணியால் தமிழ் செம்மொழித் தகுதியைப் பெற்று விளங்குகிறது எனில் மிகையன்று. இன்றைய இளைஞர்களும் மாணவர் சமுதாயமும் அறிஞர் பெருமக்களும் அவரது பணியைப் பாராட்டுகின்ற வகையில் தமிழைக் காத்து நிற்பதோடு அகிலமெங்கும் தழைத்தோங்க சபதம் மேற்கொள்ள வேண்டும்.
TAG: uveca Their Tamilnadu made the world proud of the world. If their work gets Tamil classical qualifications, Today's youth, student community and scholar mentors will appreciate his work and have to wait for Tamils to wake up all the way.

No comments: