அண்ட செல்லானது, கருவுறாமலேயே முழு உயிரியாக வளர்ச்சி அடையும் செயலுக்கு ‘கன்னி இனப்பெருக்கம்’ என்று பெயர். இது, 1745ல் சார்லஸ் பானட் என்பவரால் முதன் முதலில் கண்டறிப்பட்டது. கன்னி இனப்பெருக்கம் இருவகைப்படும்.
அவை,
- இயற்கையான கன்னி இனப்பெருக்கம் (Natural parthenogenesis)
- இளம் உயிரி கன்னி இனப்பெருக்கம் (Paedogenetic parthenogenesis/Paedogenesis)
- செயற்கையானக் கன்னி இனப்பெருக்கம் (Artificial Parthenogenesis).
1. இயற்கையான கன்னி இனப்பெருக்கம் :
சில விலங்குகளின் வாழ்க்கை சுழற்சியில் கன்னி இனப்பெருக்கம் தொடர்ச்சியாக, நிலையாக மற்றும் இயற்கையாக நடைபெறுகிறது. இது இயற்கையான கன்னி இனப்பெருக்கம் எனப்படும்.
இயற்கையான கன்னி இனப்பெருக்கத்தை இரு வகைகளாகப் பிரிக்கலாம். அவை,
- ‘முழுமையான’ கன்னி இனப்பெருக்கம் (Complete parthenogenesis)
- ‘முழுமையற்ற’ கன்னி இனப்பெருக்கம் (Incomplete parthenogenesis)
‘முழுமையான’ கன்னி இனப்பெருக்கம் (Complete parthenogenesis)
சில விலங்குகளில், இரு பெற்றோர்களால் நிகழும் பாலினப் பெருக்கம் நடைபெறுவதில்லை. மாறாக, அவை முழுமையான கன்னி இனப்பெருக்கம் மூலம் மட்டுமே இனப்பெருக்கம் செய்கின்றன. இவ்விலங்குகளில் ஆண் உயிரிகளே காணப்படுவதில்லை. பெண் உயிரிகள் மட்டுமே உள்ளன.
‘முழுமையற்ற’ கன்னி இனப்பெருக்கம் (Incomplete parthenogenesis)
முழுமையற்ற கன்னி இனப்பெருக்கம் நடைபெறும் சில விலங்குகளில், பாலினப் பெருக்கம் மற்றும் கன்னி இனப்பெருக்கம் இரண்டுமே நடைபெறுகின்றன. எ.கா: தேனீக்களில், கருவுற்ற முட்டை இராணித் தேனீயாகவும் வேலைக்காரத் தேனீக்களாகவும் வளர்ச்சியுறுகின்றன. அதே வேளையில், கருவுறாத முட்டைகள் ஆண் தேனீக்களாக வளர்ச்சியடைகின்றன.
2. இளம் உயிரி கன்னி இனப்பெருக்கம் (Paedogenetic parthenogenesis/Paedogenesis)
‘இளம் உயிரி கன்னி இனப்பெருக்கத்தில்’ (Paedogenetic parthenogenesis/Paedogenesis) இளவுயிரியே (larvae) கன்னி இனப்பெருக்கத்தின் மூலம் புதிய தலைமுறை இளவுயிரிகளை உருவாக்குகிறது. கல்லீரல் புழுவின் ஸ்போரோசிஸ்ட்டுகள் மற்றும் ரீடியா லார்வாக்கள் இவ்வகையில் இனப்பெருக்கம் செய்கின்றன.சிலவகைப் பூச்சிகளின் லார்வாக்களிலும் இது நடைபெறுகிறது. எ.கா. மொழுக்கு ஈ (Gall fly).
3. செயற்கையானக் கன்னி இனப்பெருக்கம் (Artificial Parthenogenesis).
செயற்கை கன்னி இனப்பெருக்கத்தில் கருவுறாத அண்டம் இயற்பிய அல்லது வேதிய தூண்டல்கள் மூலம் தூண்டப்பட்டு முழு உயிரியாக வளர்ச்சியடைகின்றன. எ.கா: வளை தசை புழுக்கள் மற்றும் கடல் அர்ச்சின்.
0 Comments
||| www.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||