Wednesday 26 June 2019

அமெரிக்காவில் 10-வது உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு.

10-வது உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு அமெரிக்காவில் 4 நாட்கள் நடக்கிறது. தொல்லியல் மற்றும் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் க.பாண்டியராஜன் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- 10-வது உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு, 32-வது வட அமெரிக்கா தமிழ் சங்க பேரவை தமிழ் விழா, சிகாகோ 50-வது தமிழ் சங்க ஆண்டு விழா ஆகியவை முப்பெரும் விழாவாக அமெரிக்க நாட்டின் சிகாகோ நகரில் உள்ள சாம்பர்க் கருத்தரங்கு மையத்தில் அடுத்த மாதம் (ஜூலை) 4-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை 4 நாட்கள் நடக்கிறது. உலக தமிழ் ஆராய்ச்சி மன்றம் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் இந்த மாநாடு ஏற்கனவே மலேசியா, இந்தியாவில் தலா 3 முறையும், இலங்கை, மொரீஷியஸ், பிரான்சில் தலா ஒரு முறையும் நடந்துள்ளது. கீழடியில் நடந்த தொல்பொருள் ஆராய்ச்சி குறித்தும் அமெரிக்க மாநாட்டில் சிறப்பிக்கப்பட இருக்கிறது. ‘கீழடியில் தாய்மொழி’ என்ற தலைப்பில் நடக்கும் இந்த அமர்வில் தமிழர்களின் தொன்மை குறித்து பேசப்படும். தமிழின் ஆய்வு, மொழி, கலை, பண்பாடு ஆகியவை குறித்த 1,150-க்கும் மேற்பட்ட கட்டுரைகள் வந்திருந்தன. அதில் 82 கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றன. தமிழ் அறிஞர்கள் ஜி.யு.போப், வா.செ.குழந்தைசாமி ஆகியோரை மாநாட்டில் நினைவுபடுத்த உள்ளனர். மாநாட்டின் முதல் நாளில் (4-ந் தேதி) சிறப்பு பட்டிமன்றம், ஈழத்தமிழ் நாட்டியமும் மரபுகளும், தமிழ் இசை- சிம்பொனி, இளைஞர் போட்டிகள், குறும்பட போட்டிகள், ராஜேந்திர சோழன் பற்றிய நாட்டிய நாடகம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. 5-ந் தேதி காலை தமிழ் இசை, கல்வியரங்கம், இலக்கிய வினாடி வினா, தமிழ் சங்கங்களின் அணிவகுப்பு நிகழ்ச்சியும், மாலையில் வி.ஜி.பி. தமிழ் சங்கம் சார்பில் சிகாகோவில் திருவள்ளுவர் சிலை திறப்பு, இயற்கையில் பிறந்த தமிழ் என்ற தலைப்பில் நாட்டிய நாடகமும் நடைபெறுகிறது. 6-ந் தேதி காலை உலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் முதல் நாள் அமர்வுகளும், மாலையில் பெருவிருந்துடன், நாட்டுப்புற இசை நிகழ்ச்சியும் நடக்கிறது. 7-ந் தேதி இரண்டாம் நாள் அமர்வுகளுடன் மாநாடு முடிவடைகிறது. இதில் மொத்தம் 35 இணை அமர்வுகளும் நடைபெற இருக்கிறது. மாநாட்டுக்கு தமிழக அரசு முழு ஆதரவு அளித்து இருக்கிறது. உலக தமிழ் சங்கங்களின் மாநாட்டுக்கு ஒதுக்கிய நிதியில் ஒரு பங்கை கொடுக்க முதல்-அமைச்சர் சொல்லி இருக்கிறார். அரசு சார்பில் நானும் கலந்து கொள்ள இருக்கிறேன். மேலும் 25 பேர் பங்கு பெற இருக்கிறார்கள். தமிழினம், தமிழ்மொழி, இலக்கியம், பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றின் தொன்மை, தற்கால இலக்கியம் குறித்து புதுவரலாற்றின் நோக்கிலும், அறிவியல் அடிப்படையிலும் ஆய்வு செய்ய வேண்டும் என்பது இந்த மாநாட்டின் மையப்பொருளாக வைக்கப்பட்டு இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது உலக தமிழ் ஆராய்ச்சி மன்ற துணைத்தலைவர் மு.பொன்னவைக்கோ, தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம், வாஷிங்டன் வட்டார தமிழ்ச்சங்க முன்னாள் தலைவர் ச.பார்த்தசாரதி உள்பட பலர் உடன் இருந்தனர்.

No comments: