இந்திய அரசியலமைப்பு உலகின் மிக நீளமான எழுதப்பட்ட அரசியலமைப்பாகும். இது மாநிலங்கள், மத்திய அரசு மற்றும் அவற்றுக்கிடையேயான உறவுகள் குறித்த விரிவான விதிகளைக் கொண்டுள்ளது. நமது அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் உலகின் பல அரசியலமைப்புகளில் இருந்தும் பல்வேறு மூலங்களிலிருந்தும் உத்வேகம் பெற்றுள்ளனர்.
அரசியலமைப்பின் சிறப்பம்சங்கள்:
- நீளமான எழுதப்பட்ட அரசியலமைப்பு: தனிநபர் உரிமைகள் (அடிப்படை உரிமைகள்), அரசு கொள்கையின் வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் நிர்வாகச் செயல்முறை விவரங்கள் என விரிவாகப் பட்டியலிடப்பட்டுள்ளன.
- இறுக்கம் மற்றும் நெகிழ்வுத்தன்மை: அமலாக்கச் செயல்முறைகளின் அடிப்படையில் இந்திய அரசியலமைப்பு இறுக்கமும் நெகிழ்வும் கொண்டதாக உள்ளது.
- இறையாண்மை, சமதர்மம், மதச்சார்பின்மை, மக்களாட்சி, குடியரசு:
- இறையாண்மை: இந்தியா தனது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விவகாரங்களை எந்தவித வெளி தலையீடும் இன்றி நிர்வகிக்கும்.
- சமதர்மம்: 42வது திருத்தச் சட்டம் மூலம் இணைக்கப்பட்ட சமதர்மம், மக்களாட்சி வழியில் அகிம்சை முறைகளைக் கையாண்டு சமூக இலக்குகளை எட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தியாவில் கலப்புப் பொருளாதாரம் (சமதர்மம் மற்றும் முதலாளித்துவம்) கடைப்பிடிக்கப்படுகிறது.
- மதச்சார்பின்மை: இந்தியாவுக்கு அரசு மதம் என்று ஒன்றில்லை; அனைத்து மதங்களும் சமமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
- மக்களாட்சி: வயதுவந்த அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டு, தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகள் மூலம் மக்களே இந்தியாவை ஆள்கிறார்கள்.
- குடியரசு: முடியரசு இல்லாமல், தேர்தல் மூலம் அரசின் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
- நாடாளுமன்ற ஆட்சிமுறை: அமைச்சரவைக் குழுவின் செயல்பாடுகளை நாடாளுமன்றம் கட்டுப்படுத்துவதால் நாடாளுமன்ற ஆட்சிமுறை எனப்படுகிறது. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு இருக்கும் வரை அரசு நீடிக்கும். குடியரசுத் தலைவர் நிர்வாக மற்றும் அரசியலமைப்புத் தலைவர் என்றாலும், பிரதமரே உண்மையான நிர்வாகத் தலைவர் ஆவார்.
- ஒற்றைக் குடியுரிமை: இந்திய அரசியலமைப்பு ஒற்றைக் குடியுரிமை வழங்குகிறது. ஒன்றிய அரசு வழங்கும் குடியுரிமையே அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும்.
- வயதுவந்தோர் வாக்குரிமை: ஒருநபர், ஒரு வாக்குரிமை கோட்பாட்டின் அடிப்படையில் 18 வயது நிறைவடைந்த அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டுள்ளது. சாதி, மதம், பால், இனம் அல்லது தகுதி அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுவதில்லை.
- சுதந்திரமான, ஒருங்கிணைந்த நீதி அமைப்பு: நீதி அமைப்பு நிர்வாக அல்லது நாடாளுமன்ற, சட்டமன்றத் தலையீடுகள் இல்லாமல் செயல்படும் ஒரு தன்னாட்சி அமைப்பாகும். உச்சநீதிமன்றம் தலைமை அமைப்பாகவும், அதன் கீழே உயர்நீதிமன்றங்கள், கீழமை நீதிமன்றங்கள் மற்றும் துணை நீதிமன்றங்கள் இயங்குகின்றன.
- அடிப்படை உரிமைகள்:
- இவை மீறப்பட முடியாதவை. நெருக்கடி காலங்களில் சில குறிப்பிட்ட உரிமைகள் (20, 21 தவிர) விலக்கி வைக்கப்படலாம்.
- அடிப்படை உரிமைகள் மீறப்படும்போது நீதிமன்றங்கள் தலையிட்டு அவற்றைச் செயல்படுத்துகின்றன.
- ஆறு தலைப்புகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளன: சமத்துவத்துக்கான உரிமை, சுதந்திரத்துக்கான உரிமை, சுரண்டப்படுவதற்கு எதிரான உரிமை, மத வழிபாட்டுக்கான உரிமை, கல்வி மற்றும் பண்பாட்டு உரிமை, அரசமைப்புப்படி நிவாரணம் கோரும் உரிமை.
- தொடக்கத்தில் சொத்துரிமை அடிப்படை உரிமையாக இருந்தது, ஆனால் 44வது திருத்தச்சட்டம் 1978 மூலம் சட்ட உரிமையாக மாற்றப்பட்டது (உறுப்பு 300அ).
- அடிப்படை உரிமைகள் நீதிமன்றத்தால் நிலைநாட்டப்படுபவை. உறுப்பு 32 நேரடியாக உச்சநீதிமன்றத்தை அணுகும் உரிமையை உறுதிப்படுத்துகிறது.
- இந்தியாவில் அடிப்படை உரிமைகள் முழுமையானவை அல்ல; நாட்டின் பாதுகாப்புக் கருதி தடைகள் விதிக்கப்படலாம்.
- கல்வி உரிமை: 82வது திருத்தம் 2002, உறுப்பு 21அ-வில், 6 முதல் 14 வயது வரையிலான அனைத்துச் சிறார்களுக்கும் இலவச, கட்டாயக் கல்வி வழங்குவதை அடிப்படை உரிமையாக இணைத்துள்ளது. சிறார் இலவச கட்டாயக் கல்வி சட்டம், 2009 இதனை அமல்படுத்துகிறது.
- அரசின் வழிகாட்டு நெறிகள்: அரசியலமைப்பின் நான்காவது பகுதியில் இடம் பெற்றுள்ளன. இவை சமூக, பொருளாதார நீதியை நிலைநாட்டுவதற்கான வழிகாட்டு நெறிகளாகும். ஆணுக்கும் பெண்ணுக்கும் சம ஊதியம், இலவசக் கல்வி, வேலை பார்க்கும் உரிமை, முதுமை, வேலையின்மை, நோய்வாய்ப்படுதல் போன்றவற்றுக்கு அரசு உதவிகள் வழங்குதல் போன்ற விதிகள் இதில் உள்ளன. இவை நீதிமன்றங்கள் மூலம் நிலைநாட்டப்பட முடியாவிட்டாலும், அரசாட்சிக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தவை.
- கூட்டாட்சி அல்லது ஒற்றையாட்சி: இந்தியா சிதைக்க முடியாத ஒன்றியம் (மத்திய அரசு) மற்றும் சிதைக்கத்தக்க மாநிலங்கள் கொண்ட ஆட்சி முறையாகும். நெருக்கடி காலத்தில் ஒற்றை ஆட்சி குணாம்சம் கொண்டது. இது முழுமையான கூட்டாட்சி இல்லை என்றாலும், கிட்டத்தட்ட கூட்டாட்சி முறை என்று கூறலாம். ஒற்றையாட்சி மற்றும் கூட்டாட்சி இரண்டும் தேவைக்கேற்ப பயன்படுத்திக்கொள்ளப்படுகிறது.
- நீதி சீராய்வு மற்றும் நாடாளுமன்ற மேலாதிக்கம்: நீதித்துறைக்கு அடிப்படை உரிமைகளை மீறாமல் கண்காணிப்பதிலும், நாடாளுமன்ற நிர்வாகச் செயல்பாடுகளில் தலையிடுவதிலும் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. நீதி அமைப்பும், நாடாளுமன்றமும் ஒன்றுக்கொன்று சமமான மேலாதிக்க தன்மை கொண்டவை. நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டம் அரசியலமைப்பின் அடிப்படைத் தத்துவத்திற்கு முரணாக இருந்தால், அதை செல்லாததாக்கும் அதிகாரம் நீதி சீராய்வு எனப்படும்.
- இந்தியக் குடியுரிமை:
- ஒரு நாட்டின் சட்டப்பூர்வ உறுப்பினர்களை அடையாளம் காண்பது குடியுரிமை ஆகும்.
- குடியுரிமைச் சட்டம் 1955, குடியுரிமை பெறுதல் மற்றும் உறுதிப்படுத்தலை ஒழுங்குபடுத்துகிறது.
- பிறப்பு, வாரிசு, பதிவு, இயற்கை வயப்படுத்தல் மற்றும் ஒரு பகுதியில் தொடர்ந்து வசித்தல் ஆகிய வழிகளில் குடியுரிமை பெற வழிவகை செய்கிறது.
- குறிப்பிட்ட சூழ்நிலைகளில் குடியுரிமையை விலக்கிக் கொள்ளவும் ரத்துசெய்யவும் விதிகள் உள்ளன.
- குடியுரிமைச் சட்டவரைவு 2015, 1955 சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வந்துள்ளது.
- இந்தியாவில் தொடர்ந்து குடியிருந்தாலோ அல்லது அரசுப்பணியில் 12 மாதங்கள் இருந்தாலோ இந்திய குடியுரிமைக்கோரி விண்ணப்பிக்க முடியும். அசாதாரண சூழலில் தகுதிகள் தளர்த்தப்படலாம்.
பஞ்சாயத்து ராஜ் - காந்தி Vs அம்பேத்கர்:
- காந்தி: மத்திய அரசிடம் குறைந்த அதிகாரம் இருக்க வேண்டும் என்றும், கிராமங்கள் கிராமத் தலைவர்கள், உறுப்பினர்கள் மூலம் தமக்குத் தாமே ஆட்சி செய்ய வேண்டும் என்றும் விரும்பினார். "இந்தியா தனது நாடு என்று உணரும் நிலையை உருவாக்கி, அதில் அவரது குரல் வலுவாக உயரும் வகையில் வலிமையான இந்தியாவை உருவாக்க நான் பாடுபடுவேன்" என்றார். கிராம சுயராஜ்ஜியம் என்பது அருகாமையில் வாழ்வோரின் முக்கிய விருப்பங்களுக்கான சுதந்திரம் கொண்ட முழுமையான குடியரசு என்றார்.
- அம்பேத்கர்: கிராமங்கள் அறியாமை மற்றும் வகுப்புவாதத்தின் இருப்பிடம் என்றார். கிராமங்களில் ஆதிக்கம் கொண்ட சமூகங்கள் மற்ற சமூகங்களைக் குரலற்றதாக்கும் என்று கருதினார். இதன் விளைவாக, அரசியலமைப்பில் பஞ்சாயத்து ராஜ் என்ற சொல் கூட குறிப்பிடப்படவில்லை.
- காந்தியவாதிகளின் வலியுறுத்தல்: அரசியலமைப்பின் பாகம் IV, அரசு கொள்கை வழிகாட்டு நெறிகள் பிரிவில் கிராம பஞ்சாயத்துகளை உருவாக்குவதற்கான பொறுப்பினை மாநிலச் சட்டமன்றங்களுக்கு அளிக்கும் வகையில் ஒரு விதி கொண்டிருக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதன்படி சேர்க்கப்பட்ட உறுப்பு 40, கிராம பஞ்சாயத்து அமைப்புகள் உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும், அவற்றுக்கான அதிகாரங்களை மாநில அரசு தன் பொறுப்பிலிருந்து அளிக்க வேண்டும் என்றும், கிராம நிர்வாக அலகுகள் தன்னாட்சியாக செயல்படுவதற்குத் தேவையான அதிகார அமைப்புகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்றும் கூறுகிறது.
அடிப்படை கடமைகள் (பாகம் 4அ, உறுப்பு 51அ):
ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் பின்பற்ற வேண்டிய கடமைகள்:
- அரசியலமைப்பிற்கு கீழ்ப்படிந்து அதன் மாண்புகள், நிறுவனங்கள், தேசியக்கொடி, தேசிய கீதம் ஆகியனவற்றிற்கு மரியாதை அளிக்க வேண்டும்.
- நாட்டு விடுதலைக்கான போராட்டத்தின் போது பின்பற்றப்பட்ட உன்னதமான மாண்புகளை ஏற்று பின்பற்ற வேண்டும்.
- இந்தியாவின் இறையாண்மை, ஒற்றுமை, ஒருமைப்பாடு ஆகியனவற்றைப் பாதுகாத்து போற்ற வேண்டும்.
- தேவையான காலங்களில் அழைப்பு விடுக்கப்படும் போது நாட்டைப் பாதுகாக்கவும் நாட்டுக்கு சேவைபுரியவும் முன்வர வேண்டும்.
- மத, மொழி, சாதி வேறுபாடுகளை கடந்து மக்களிடையே ஒருமைப்பாட்டினையும் உலகளாவிய சகோதரத்துவத்தினையும் உருவாக்க வேண்டும்; பெண்களின் மாண்பிற்குப் பாதிப்பு ஏற்படுத்தும் நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும்.
- நமது பன்மைத்துவப் பண்பாட்டின் வளமான மரபினை மதித்துப் பாதுகாக்க வேண்டும்.
- வனங்கள், ஏரிகள், ஆறுகள், வன உயிரினங்கள் உள்ளிட்ட நமது இயற்கை வளங்களைப் பாதுகாத்து மேம்படுத்தி அனைத்து உயிரினங்களும் வாழத் தகுந்ததாக பராமரிக்க வேண்டும்.
0 Comments
||| www.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||