Tuesday 15 October 2019

பொருளாதார துறையில் இந்தியருக்கு நோபல் பரிசு

பொருளாதார துறையில் இந்தியர் உள்பட 3 பேருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

இயற்பியல், வேதியியல், இலக்கியம் ஆகிய துறைகளுக்கும், அமைதிக்காக பாடுபட்டவருக்கும் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.

இந்நிலையில், பொருளாதார துறைக்கான நோபல் பரிசை நோபல் பரிசு குழு நேற்று அறிவித்தது.

இந்தியாவில் பிறந்த அபிஜித் பானர்ஜி, அவருடைய மனைவியும், பிரான்ஸ் நாட்டில் பிறந்தவருமான எஸ்தர் டப்லோ, அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் மைக்கேல் கிரமர் ஆகியோருக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பகிர்ந்து அளிக்கப்படுவதாக அறிவித்துள்ளது.

இந்த பரிசு, ரூ.6 கோடியே 52 லட்சம் ரொக்கம், தங்கப்பதக்கம், விருது பட்டயம் ஆகியவை அடங்கியது ஆகும். பரிசுத்தொகை, 3 பேருக்கும் சமமாக பகிர்ந்து அளிக்கப்படும்.

உலகளாவிய வறுமை ஒழிப்புக்காக முன்னோடி திட்டங்களை தீட்டியதற்காக 3 பேரும் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக விருது குழு கூறியுள்ளது.

அவர்களின் ஆராய்ச்சி முடிவுகள், உலகளாவிய வறுமையை கட்டுப்படுத்தும் நமது திறனை மேம்படுத்தி இருப்பதாகவும் விருது குழு பாராட்டி உள்ளது.

நோபல் பரிசு பெறும் இந்தியர் அபிஜித் பானர்ஜிக்கு வயது 58. கடந்த 1961-ம் ஆண்டு மும்பையில் பிறந்தவர். கொல்கத்தாவில் உள்ள பிரசிடன்சி பல்கலைக்கழகத்திலும், பிறகு டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்திலும் படித்தவர். அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் பிஎச்.டி. பட்டம் பெற்றார். அமெரிக்க குடியுரிமை பெற்றார். பிரான்ஸ் நாட்டில் பிறந்து அமெரிக்காவில் குடியேறிய எஸ்தர் டப்லோவை திருமணம் செய்து கொண்டார்.

2003-ம் ஆண்டு, தன் மனைவியையும், செந்தில் முல்லைநாதன் என்பவரையும் சேர்த்துக்கொண்டு, அப்துல் லத்தீப் ஜமீல் வறுமை ஒழிப்பு ஆய்வகம் என்ற அமைப்பை தொடங்கினார். அதன் இயக்குனராக இன்னும் நீடிக்கிறார்.

தற்போது, அமெரிக்காவில் உள்ள மசாசுசெட்ஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் போர்டு அறக்கட்டளை சர்வதேச பொருளாதார பேராசிரியராக பணியாற்றி வருகிறார். ஏராளமான புத்தகங்களை எழுதி உள்ளார்.

நோபல் பரிசை கூட்டாக பகிர்ந்து கொள்ளும் அவருடைய மனைவி எஸ்தர் டப்லோ, 1972-ம் ஆண்டு பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பிறந்தவர். அங்கு வரலாறு, பொருளாதார பாடங்களில் பட்டம் பெற்றுள்ளார். மசாசுசெட்ஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் 1999-ம் ஆண்டு பிஎச்.டி. பட்டம் பெற்றார்.

ஏராளமான புத்தகங்கள் எழுதியதுடன், விருதுகளும் பெற்றுள்ளார்.

இதற்கிடையே, அபிஜித் பானர்ஜி நோபல் பரிசு பெற்றதற்கு அவர் படித்த கொல்கத்தா பிரசிடன்சி பல்கலைக்கழகம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென்னும் இதே பல்கலைக்கழகத்தில் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அபிஜித் பானர்ஜிக்கு மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

No comments: