Ad Code

வாராந்திர முக்கிய நிகழ்வுகள் (ஆகஸ்டு 2-8) - போட்டித் தேர்வுகளுக்குப் பயன்படும் தகவல்கள்.

 

வாராந்திர முக்கிய நிகழ்வுகள் (ஆகஸ்டு 2-8) - போட்டித் தேர்வுகளுக்குப் பயன்படும் தகவல்கள்.

அறிவியல்

  • இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், செவ்வாய்க் கோளின் சூழ்நிலையை ஒத்த லடாக்கின் சோகர் பள்ளத்தாக்கில், எதிர்கால நிலவு மற்றும் செவ்வாய்க் கோள் பயணங்களுக்கான ஆராய்ச்சி கூடத்தை அமைத்துள்ளது. (ஆகஸ்டு 3)
  • ஸ்பெயினிடமிருந்து 16-வது சி-295 ரக ராணுவ விமானத்தை இந்தியா பெற்றுள்ளது. இந்த விமானம் 5 முதல் 10 டன் எடை பொருட்களை சுமந்து செல்லும் வகையில் நவீன தொழில்நுட்பங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. (ஆகஸ்டு 2)
  • நிலவில் அணுமின் நிலையம் அமைக்கும் திட்டத்தை அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, 2030-ம் ஆண்டுக்குள் செயல்படுத்த விரைவுபடுத்த உள்ளது. இது நிலவில் மனிதர்கள் நிரந்தரமாக வாழும் தளத்தை உருவாக்கும் அமெரிக்காவின் லட்சியத்தின் ஒரு பகுதியாகும். (ஆகஸ்டு 8)
உலகம்
  • நேபாளத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் இந்தியர்கள் முதலிடம் வகிப்பதாக அந்நாட்டு சுற்றுலாத் துறையின் தரவுகள் தெரிவிக்கின்றன. (ஆகஸ்டு 2)
  • போர்த் திட்டங்களை வகுப்பது, படையினரின் வலிமையை அதிகரிப்பது ஆகிய விவகாரங்களை கவனித்துக்கொள்வதற்காக புதிய தேசிய பாதுகாப்பு கவுன்சிலை ஈரான் உருவாக்கியுள்ளது. இந்த கவுன்சிலுக்கு அதிபர் மசூத் பெஸெஷ்கியான் தலைமை வகிப்பார். (ஆகஸ்ட் 4)
  • பிலிப்பைன்சில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச மின் விசா வசதியை விரிவுபடுத்த இந்தியா முடிவு செய்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார். (ஆகஸ்டு 5)
பொருளாதாரம்
  • இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த ஜூலை 25-ந் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 69 ஆயிரத்து 819 கோடி டாலராக உயர்ந்துள்ளது. (ஆகஸ்டு 2)
  • அரசுக்குச் சொந்தமான கோல் இந்தியா நிறுவனத்தின் உற்பத்தி, கடந்த ஏப்ரல்- ஜூலை காலகட்டத்தில் 6 சதவிகிதம் குறைந்துள்ளது. (ஆகஸ்டு 2)
  • கடந்த ஜூன் மாதத்தில் இந்தியாவின் தேயிலை உற்பத்தி 9 சதவிகிதம் குறைந்து 13.35 கோடி கிலோவாக இருந்தது. பருவநிலை பாதிப்பு மற்றும் பூச்சி தாக்குதல்கள் காரணமாக உற்பத்தி சரிந்ததாக இந்திய தேயிலை சங்கம் தெரிவித்துள்ளது. (ஆகஸ்டு 4)
  • இந்தியாவின் மின் நுகர்வு கடந்த ஜூலை மாதத்தில் 15 ஆயிரத்து 363 கோடி யூனிட்டுகளாக பதிவாகி உள்ளது. இது முந்தைய ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் 2.6 சதவிகிதம் அதிகமாகும். (ஆகஸ்டு 5)
  • இந்தியாவின் சேவைகள் துறையின் பி.எம்.ஐ. (பர்சேசிங் மேனேஜர்ஸ் இன்டெக்ஸ்) கடந்த ஜூன் மாதத்தில் 60.4 ஆக இருந்தது. அது ஜூலை மாதத்தில் 60.5 ஆக உயர்ந்துள்ளது. இது முந்தைய 11 மாதங்கள் காணாத அதிகபட்ச பி.எம்.ஐ. ஆகும். (ஆகஸ்டு 6)
  • ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை குழு மும்பையில் நடத்திய கூட்டத்தில் வங்கிக்கடன் வட்டி விகிதத்தை மாற்றமின்றி 5.5 சதவிகிதமாக தொடர முடிவு செய்யப்பட்டது. இதனால் வங்கிகளில் வீடு, வாகன, தனிநபர் கடன்களின் வட்டி விகிதமும் மாற்றப்படாது. (ஆகஸ்டு 6)
  • இந்தியாவின் மின்னணு பொருட்கள் ஏற்றுமதி நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 47 சதவிகித வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. (ஆகஸ்டு 7)
  • இந்தியாவில் மின்சார வாகனங்களின் விற்பனை கடந்த ஜூலை மாதத்தில் 93 சதவிகிதம் அதிகரித்துள்ளது. (ஆகஸ்டு 8)
இந்தியா
  • மீன் உற்பத்தியில் உலகின் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் ஒட்டுமொத்த மீன் உற்பத்தியில் 103 சதவிகித வளர்ச்சியை இந்தியா கண்டுள்ளதாக மத்திய மீன்வளத் துறை அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங் தெரிவித்தார். (ஆகஸ்டு 2)
  • 2018-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் 'பரிக்‌ஷா பே சர்ச்சா' என்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மைகவ் இணையதளத்தில் ஒரே மாதத்தில் 3.53 கோடி பேர் பதிவு செய்திருந்தனர். மேலும் பல்வேறு ஊடகங்களில் இந்நிகழ்ச்சியை 21 கோடி பேர் பார்த்தனர். இதன்மூலம் பொதுமக்கள் பயன்பாட்டு இணையதளத்தில் ஒரே மாதத்தில் அதிகம் பேர் பதிவு செய்த காரணத்துக்காக இந்த நிகழ்ச்சி புதிய கின்னஸ் சாதனை படைத்தது. (ஆகஸ்டு 5)
  • இந்தியாவின் மிக நீண்டகால உள்துறை மந்திரி என்ற பெருமையை அமித் ஷா பெற்றுள்ளார். இதற்கு முன் முன்னாள் காங்கிரஸ் தலைவர் கோவிந்த் வல்லப பந்த், முன்னாள் பா.ஜ.க. தலைவர் எல்.கே.அத்வானி ஆகியோர் மத்திய உள்துறை மந்திரியாக மிக நீண்டகாலம் பணியாற்றி உள்ளனர். (ஆகஸ்டு 5)
  • இந்திய தபால்துறையில் பதிவு தபால் சேவை கடந்த 1849-ம் ஆண்டு நவம்பர் மாதம் 1-ந் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. 176 ஆண்டுகளுக்கு மேல் நடந்து வரும் இந்த சேவையை வருகிற 1-ந் தேதி முதல் நிறுத்திவிட்டு விரைவு தபால் சேவையுடன் இணைக்க இருப்பாதாக தபால் துறை அறிவித்துள்ளது. (ஆகஸ்டு 6)
  • இந்தியாவுக்கு 25 சதவிகித வரி விதிக்கப்படுவதாக ஏற்கனவே அறிவித்த நிலையில், அதை 50 சதவிகிதமாக உயர்த்தி அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். (ஆகஸ்டு 6)
  • உணவுப் பாதுகாப்பில் ஆற்றிய சிறந்த பங்களிப்புக்காக நைஜீரிய வேளாண் ஆராய்ச்சியாளர் ஏ.அடன்லேவுக்கு முதலாவது 'எம்.எஸ்.சுவாமிநாதன் உணவு மற்றும் அமைதி விருது' வழங்கி இந்திய அரசு கவுரவித்தது. (ஆகஸ்டு 7)
விளையாட்டு
  • உலக நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்தது. இதில் ஆண்களுக்கான 400 மீட்டர் தனிநபர் மெட்லே பிரிவில் பிரான்சின் லியோன் மார்சந்த் 4 நிமிடம் 4.73 வினாடிகளில் முதலாவதாக வந்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். (ஆகஸ்டு 3)
  • கஜகஸ்தானில் நடைபெற்ற கொசானோவ் நினைவு தடகள போட்டியில் இந்தியாவின் நீளம் தாண்டுதல் வீரர் முரளி சங்கர் சாம்பியன் பட்டம் வென்றார். (ஆகஸ்டு 3)
  • அமெரிக்காவின் கென்டகி மாகாணத்தில் உள்ள லெக்சிங்டன் நகரில் ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டி நடைபெற்றது. இதில் ஆடவர் இரட்டையர் இறுதி போட்டியில் இந்தியாவின் ராம்குமார் - அனிருத் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது. (ஆகஸ்டு 3)
  • இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்தது. இதில் இந்திய அணி 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு தொடரையும் சமன் செய்தது. இரு இன்னிங்சையும் சேர்த்து மொத்தம் 9 விக்கெட்டுகளை அள்ளிய முகமது சிராஜ் ஆட்டநாயகன் விருதையும், இந்தியாவின் சுப்மன் கில், இங்கிலாந்தின் ஹாரி புரூக் தொடர்நாயகன் விருதையும் பெற்றனர். (ஆகஸ்டு 4)
  • மகளிர் கால்பந்து தரவரிசை பட்டியலை 'பிபா' வெளியிட்டது. இதில் இந்திய பெண்கள் கால்பந்து அணி 7 இடங்கள் முன்னேறி 63-வது இடத்தை பிடித்துள்ளது. (ஆகஸ்டு 7)
  • போலந்தில் நடைபெற்ற 8-வது சர்வதேச வீஸ்லா மேனியாக் நினைவு தடகள போட்டியில் ஈட்டி எறிதலில் இந்திய வீராங்கனை அன்னு ராணி சாம்பியன் பட்டம் வென்றார். (ஆகஸ்டு 7)
தமிழகம்
  • 'நலம் காக்கும் ஸ்டாலின்' என்ற புதிய திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த முகாம்கள் மூலமாக மக்கள் உடல்நலன் காப்பதில் தமிழகம் முதலிடம் வகிக்கும் என்று தெரிவித்தார். (ஆகஸ்டு 2)
  • உடல் உறுப்பு மாற்று சிகிச்சைகளை திறம்பட மேற்கொண்டதில் நாட்டிலேயே முதன்மையான மாநிலமாக தமிழகம் தேர்ந்தெடுக்கப்பட்டது. (ஆகஸ்டு 2)
  • ஆம்பூரை அடுத்த மலையம்பட்டு கிராமத்தில் நடுகற்களும், பானை ஓடுகளும் கண்டெடுக்கப்பட்டன. நடுகல்லானது 3 அடி உயரம், 2 அடி அகலத்துடன் அழகான பலகைக் கல்லில் புடைப்பு சிற்பமாக உள்ளது. இது ஏறத்தாழ 500 ஆண்டுகள் பழமையானதாகும். (ஆகஸ்டு 3)
  • வாகன உற்பத்தியில் இந்தியாவின் தலைநகராக தமிழ்நாடு திகழ்வதாகவும், இந்தியாவின் மொத்த மின் வாகன உற்பத்தியில் 40 சதவிகிதம் தமிழ்நாட்டில் நடைபெறுவதாகவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். (ஆகஸ்டு 4)
  • தமிழகத்தில் 1303 நீலகிரி வரையாடுகள் இருப்பதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளதாக மாநில வனத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தெரிவித்தார். (ஆகஸ்டு 5)
  • 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக பொருளாதார வளர்ச்சி 11.19 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். (ஆகஸ்டு 6)
  • திருவள்ளூரில், 11 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தி வந்த 2 பெண்கள் உள்பட 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். (ஆகஸ்டு 7)
  • அண்ணா பல்கலைக்கழகம் என்ஜினீயரிங் படிப்புகளுக்கு இந்த ஆண்டு நடத்த உள்ள கலந்தாய்வு 4 கட்டங்களாக நடைபெற உள்ளது. (ஆகஸ்டு 8)
  • தமிழகத்தின் முதல் ஜவுளி பூங்காவை சென்னையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன் மூலம் 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவித்தார். (ஆகஸ்டு 8)

Post a Comment

0 Comments

Ad Code