Ad Code

வாராந்திர முக்கிய நிகழ்வுகள் (ஜூலை 5-11) - போட்டித் தேர்வுகளுக்குப் பயன்படும் தகவல்கள்.

உலகம் :

உலக வங்கியின் கினி குறியீட்டு அறிக்கை: வறுமை மற்றும் சமத்துவம் குறித்து உலக வங்கி வெளியிட்ட கினி குறியீட்டு அறிக்கையின்படி, இந்தியா 25.5 என்ற மதிப்பெண்ணுடன் வருவாய் சமத்துவத்தில் உலகளவில் 4-வது நாடாக உள்ளது. இக்குறியீடு ஒரு நாட்டின் வருவாய் மற்றும் செல்வச் சமத்துவமின்மையை அளவிடுகிறது. (ஜூலை 6)

சூரினாமின் முதல் பெண் அதிபர்: தென் அமெரிக்க நாடான சூரினாமில் நடைபெற்ற தேர்தலில், 71 வயதான டாக்டர் ஜெனிபர் கிர்லிங்க்ஸ் சிமோன்ஸ் வெற்றிபெற்று, அந்நாட்டின் முதல் பெண் அதிபராகப் பதவியேற்றார். (ஜூலை 7)

அமெரிக்காவின் புதிய வர்த்தக வரி: ஆகஸ்ட் 1 முதல் கனடாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 35% வரி விதிக்கப்படும் என்றும், பிற வர்த்தகக் கூட்டணி நாடுகளுக்கு 15% அல்லது 20% வரி விதிக்கப்படும் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். (ஜூலை 11)

இந்தியா :

தேசிய கூட்டுறவுப் பல்கலைக்கழகம்: குஜராத்தின் ஆனந்த் நகரில் நாட்டின் முதல் தேசிய கூட்டுறவுப் பல்கலைக்கழகத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அடிக்கல் நாட்டினார். இது கூட்டுறவுத் துறையில் உள்ள பாரபட்சங்களை நீக்கி, பயிற்சி வெற்றிடங்களை நிரப்பும் என அவர் தெரிவித்தார். (ஜூலை 5)

பிரிக்ஸ் உச்சிமாநாடு: பிரேசிலின் ரியோ டி ஜெனீரோவில் நடைபெற்ற 17-வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, பிரிக்ஸ் கூட்டமைப்பு உள்ளடக்கிய மற்றும் சமத்துவமான உலகை உருவாக்கவும், பொருளாதார ஒத்துழைப்புக்கும், உலக நன்மைக்கும் வலுவான சக்தியாக நிலைத்திருக்கும் என்று வலியுறுத்தினார். (ஜூலை 6)

முதல் டிஜிட்டல் மக்கள்தொகை கணக்கெடுப்பு: இந்தியாவின் 16-வது மக்கள்தொகை கணக்கெடுப்பு விரைவில் இணையதளம் மூலம் பொதுமக்கள் சுயமாக பங்கேற்கும் வகையில் நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது முதலாவது டிஜிட்டல் கணக்கெடுப்பாகும், இதன்மூலம் முடிவுகள் விரைவாக வெளியாக வாய்ப்புள்ளது. (ஜூலை 7)

பிரதமர் மோடிக்கு சர்வதேச விருதுகள்: பிரதமர் மோடிக்கு பிரேசிலின் உயரிய விருதான 'தி கிராண்ட் காலர் ஆஃப் தி நேஷன் ஆர்டர் ஆல் தி சதர்ன் கிராஸ்' மற்றும் நமீபியா நாட்டின் உயரிய விருதான 'ஆர்டர் ஆஃப் தி மோஸ்ட் ஏன்சியன்ட் வெல்விட்ஸ்சியா மிராபிலிஸ்' ஆகிய விருதுகள் வழங்கப்பட்டன. நமீபிய விருதை அந்நாட்டு அதிபர் நெடும்போ நந்தி-தைத்வா வழங்கினார். (ஜூலை 9)

தமிழகம் :

சென்னை முதலிடம்: அதிக சம்பளம்: சர்வதேச வேலைவாய்ப்பு இணையதளமான இன்டீட் நடத்திய ஆய்வில், 'இனாகுரல் பேமேப் சர்வே' என்ற பெயரில், கல்லூரி முடித்த புதியவர்களுக்கு அதிக சம்பளம் வழங்குவதில் சென்னை முதலிடத்தில் உள்ளது எனத் தெரியவந்துள்ளது. (ஜூலை 6)

நான் முதல்வன் திட்டம்: நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இதுவரை 41 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. (ஜூலை 6)

சமூகநீதி விடுதிகள்: தமிழகத்தில் உள்ள ஏழை மாணவர்களுக்கான பள்ளி, கல்லூரி விடுதிகள் இனி 'சமூகநீதி விடுதி' என்ற பொதுப்பெயரில் அழைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். (ஜூலை 7)

மகளிர் இலவசப் பேருந்து பயண அதிகரிப்பு: தமிழகத்தில் கட்டணமில்லாப் பேருந்து பயணத்திட்டத்தில் பயணிக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மாநகரப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. ஜூன் மாதத்தில் மட்டும் 3.69 கோடி பெண்கள் பயணம் செய்துள்ளனர், இது கடந்த ஆண்டு ஜூன் மாதத்தை விட 22% அதிகம். (ஜூன் 9)

பொருளாதாரம் :

ஜூன் 27 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 70,278 கோடி டாலராக அதிகரித்துள்ளது. (ஜூலை 5)

கடந்த ஜூன் மாதத்தில் இந்தியாவின் உள்நாட்டு சந்தையில் வாகனங்களின் சில்லறை விற்பனை 4.84% வளர்ச்சி கண்டுள்ளது. (ஜூலை 7)

இந்தியாவின் எட்டு முக்கிய நகரங்களில் ஜனவரி முதல் ஜூன் வரையிலான அரையாண்டில் வீடுகள் விற்பனை 2% சரிந்துள்ளது. (ஜூலை 8)

இந்தியாவின் சேவைத் துறையின் பி.எம்.ஐ. (Purchasing Managers’ Index) மே மாதத்தில் 58.8 ஆக இருந்து, ஜூன் மாதத்தில் 60.4 ஆக உயர்ந்துள்ளது. இது கடந்த 10 மாதங்களில் இல்லாத அதிகபட்ச பி.எம்.ஐ. ஆகும். (ஜூலை 11)

அறிவியல் :

அமெரிக்காவின் ஆக்ஸியம் ஸ்பேஸ் நிறுவனத்தின் ஆக்ஸியம்-4 திட்டத்தின்கீழ் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்ற சுபான்ஷு சுக்லா, விண்வெளியில் 10-வது நாள் பயணத்தில் நுண்ஈர்ப்பு விசை சூழலில் எலும்புகள் செயல்படும் விதம் குறித்து ஆய்வு நடத்தினார். பூமியில் எலும்புப்புரை சிகிச்சைக்கான வழிகளை கண்டறியவும், சர்வதேச விண்வெளி நிலையத்தில் கதிர்வீச்சால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த சோதனையிலும் அவர் பங்கேற்றார். (ஜூலை 5)

நீண்டதூர இலக்குகளைத் தாக்கும் நீர்மூழ்கி எதிர்ப்பு ராக்கெட் அமைப்பின் சோதனையை இந்தியா வெற்றிகரமாக நடத்தியது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த அமைப்பு, நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதலைத் தடுக்கும் திறனுடையதுடன், இந்திய கடற்படையின் ராக்கெட் ஏவுதளங்களில் இயங்கும். இது விரைவில் இந்திய கடற்படையில் சேர்க்கப்பட உள்ளது. (ஜூலை 8)

விமானத்தில் இருந்து பார்வைக்கு அப்பால் உள்ள வான் இலக்குகளைத் தாக்கி அழிக்கும் 'அஸ்திரா' ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. இதன்மூலம் பாதுகாப்புத் துறை சார்ந்த நவீன தொழில்நுட்ப வளர்ச்சியில் இந்தியா புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. (ஜூலை 11)

விளையாட்டு :

குரோஷியாவில் நடைபெற்ற சூப்பர் யுனைடெட் ரேப்பிட் மற்றும் பிளிட்ஸ் செஸ் போட்டியில் ரேப்பிட் பிரிவில் இந்தியாவின் டி. குகேஷ் வெற்றி பெற்றார். (ஜூலை 5)

19 வயதுக்குட்பட்டோருக்கான ஒருநாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில், இந்தியாவின் இளம் வீரர் வைபவ் சூரியவன்ஷி இரு புதிய சாதனைகளை படைத்தார். 52 பந்துகளில் சதமடித்து யூத் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேக சதமடித்தவராகவும், அதேபோல் யூத் ஒருநாள் கிரிக்கெட்டில் சதமடித்த மிக இளம் வீரராகவும் சாதனை புரிந்தார். (ஜூலை 5)

பர்மிங்காமில் நடந்த 2-வது டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா புதிய வரலாற்றை படைத்தது. இந்த மைதானத்தில் வெற்றி பெற்ற முதல் ஆசிய அணி என்ற பெருமையை இந்தியா பெற்றது. (ஜூலை 6)

கஜகஸ்தான் தலைநகர் அஸ்தானாவில் நடைபெற்ற உலகக் கோப்பை குத்துச்சண்டை போட்டியில் பெண்களுக்கான 54 கிலோ எடைப்பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை சாக்‌ஷி, அமெரிக்காவின் யோஸ்லின் பெரேசை தோற்கடித்து தங்கப்பதக்கத்தை வென்றார். (ஜூலை 6)

அமெரிக்காவின் யுஜின் நகரில் நடந்த பிரீபோன்டைன் கிளாசிக் தடகளப் போட்டியில், மகளிருக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் கென்யாவின் பீட்ரைஸ் 13:58.06 விநாடிகளில் பந்தய தூரத்தை கடந்து உலக சாதனை படைத்து முதலிடம் பிடித்தார். (ஜூலை 6)

அமெரிக்காவில் நடந்த 18-வது தங்கக் கோப்பை கால்பந்து போட்டியில், மெக்சிகோ அணி 2-1 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவை வீழ்த்தி 10-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. (ஜூலை 7)

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) தலைமை செயல் அதிகாரியாக சஞ்ஜோக் குப்தா நியமிக்கப்பட்டார். இவர் ஐ.சி.சி.யின் 7-வது தலைமை செயல் அதிகாரி ஆவார். (ஜூலை 7)

வாராந்திர முக்கிய நிகழ்வுகள் (ஜூலை 5-11) - போட்டித் தேர்வுகளுக்குப் பயன்படும் தகவல்கள்.

Post a Comment

0 Comments

Ad Code