நெருக்கடிநிலை அறிவிப்பை 1977 மார்ச் 21-ல் விலக்கிக்கொண்டார் பிரதமர் இந்திரா காந்தி. சிறையிலிருந்த எதிர்க்கட்சித் தலைவர்கள் விடுவிக்கப்பட்டனர். 1977 மக்களவைத் தேர்தலில் ஜெயப்பிரகாஷ் நாராயண் வழிகாட்டலில் ஸ்தாபன காங்கிரஸ், பாரதிய லோக் தள், சோஷலிஸ்ட் கட்சிகள், பாரதிய ஜனசங்கம் ஆகியவை இணைந்து ஜனதா என்ற பெயரில் ஒரே கட்சியாக ‘ஏர் உழவன்’ சின்னத்தில் போட்டியிட்டது.
298 தொகுதிகளை ஜனதா கைப்பற்றியது. மொரார்ஜி தேசாய் பிரதமரானார். காங்கிரஸ் கட்சி 197 தொகுதிகளை இழந்து, 153 தொகுதிகளை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. உத்தர பிரதேசத்தில் இந்திரா காந்தி அவருடைய இளைய மகன் சஞ்சய் காந்தி இருவரும் தோற்றனர். தேர்தலுக்கு முன்னதாக பாபு ஜகஜீவன் ராம், ஹேமவதி நந்தன் பகுகுணா, நந்தினி சத்பதி ஆகியோர் காங்கிரஸிலிருந்து விலகினர். பத்திரிகைத் தணிக்கை, எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது, பேச்சு சுதந்திரம் மறுப்பு ஆகியவற்றுடன் கட்டாய கருத்தடைச் சிகிச்சையும் மக்களிடையே பெரும் பீதியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியது. மும்பை நகரின் அனைத்துத் தொகுதிகளிலும் ஜனதா வென்றது. உத்தர பிரதேசத்தில் காங்கிரஸுக்கு ஒரு தொகுதிகூடக் கிடைக்கவில்லை. மேற்கு வங்கத்திலும் படுதோல்வி. மகாராஷ்டிரம், குஜராத்தில் வெற்றி-தோல்வி இரண்டும் சம அளவுக்குக் கிடைத்தது. தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம், ஆந்திரம் ஆகிய தென்னிந்திய மாநிலங்களில் காங்கிரஸ் கூட்டணிக்குக் கணிசமான ஆதரவு கிடைத்தது. கேரளத்தைச் சேர்ந்த சி.எம்.ஸ்டீபன் மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ஆனார்.
ஜனதா கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், சிரோமணி அகாலிதளம், உழவர், உழைப்பாளர் கட்சி, அனைத்திந்திய ஃபார்வர்ட் பிளாக், இந்தியக் குடியரசுக் கட்சி (கோபர்கடே), திமுக இடம்பெற்றிருந்தன. காங்கிரஸ் கூட்டணியில் அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கேரள காங்கிரஸ், புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி (பிரிந்துசென்றவர்கள்) இடம்பெற்றிருந்தன.
ஜனதா கட்சியின் ஆட்சி நீண்ட நாள் நீடிக்கவில்லை. பிரதமர் பதவியை பாரதிய லோக் தள் தலைவரான சரண் சிங் ஆரம்பத்திலிருந்தே குறிவைத்திருந்தார். ஜனசங்கம் ஜனதாவில் இணைந்திருந்தாலும் அதன் நாடாளுமன்ற உறுப்பினர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் ஒரே குழுவாகச் செயல்படுவதும் சந்திப்பதும் மற்றவர்களுக்கு உறுத்தலாகவே இருந்தது. எனவே, ஜனசங்கத்தின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் அமைப்பில் இருப்பவர்கள் ஜனதாவில் இருக்கக் கூடாது என்று இரட்டை உறுப்பினர் பிரச்சினையைக் கிளப்பினர். இது பெரிதானது. முன்னாள் ஜனசங்கத்தினர் விலகத் தயாராயினர். கட்சி உடைந்தது. உடைந்த ஜனதாவுக்கு வெளியிலிருந்து ஆதரவு என்று இந்திரா காந்தி அறிவித்தார். அவரை நம்பி பிரதமர் பதவியை ஏற்ற சரண்சிங், நாடாளுமன்றத்தைச் சந்திக்காமலேயே பதவி விலக நேர்ந்தது. ஜனதா சோதனை முயற்சி படுதோல்வி அடைந்தது.
No comments:
Post a Comment
||| www.news.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||