Wednesday 18 September 2019

தெற்காசியாவிலேயே உயரமான தாமரை கோபுரம்

தெற்காசியாவிலேயே உயரமான தாமரை கோபுரம் இலங்கை தலை நகர் கொழும்பில் அந்நாட்டு அதிபர் மைத்திரிபால சிறிசேனா வால் திறந்து வைக்கப்பட்டது.

இலங்கை தலைநகரம் கொழும்பு மாவத்தையில் தாமரை கோபுரம் அமைக்க 2008-ம் ஆண்டே திட்டம் தயாரிக்கப்பட்டா லும், 2012 ஜனவரியில்தான் கட்டுமானப் பணிகள் தொடங்கின. சுமார் 7 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது. இந்த கோபுரத்தை நிர்மாணிப்பதற்காக சுமார் ரூ.750 கோடி (இந்திய ரூபாய் மதிப்பில்) செலவிடப்பட்டுள்ளது. இதில் ரூ.480 கோடியை சீனா நிதி உதவியாக வழங்கியது.

தாமரைக் கோபுரத்தின் அடிப் பரப்பு 30,600 சதுரஅடி. 356 மீட்டர் உயரம் கொண்டது. இந்த கோபுரம் தெற்காசியாவிலேயே உயரமான கோபுரமாக மட்டுமின்றி உலகிலேயே 19-வது பெரிய கோபுரமாகவும் பிரான்ஸ் தலை நகர் பாரிஸில் உள்ள ஈகிள் கோபு ரத்தை விட உயரமாகவும் திகழ் கிறது.

கோபுரத்தின் முதலாவது மற்றும் 2-வது தளத்தில் இருந்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகள் ஒளி, ஒலிபரப்பு சேவைகளுக்காகவும், 3-வது, 4-வது தளங்களில் பொது நிகழ்ச்சி கள் நடத்துவதற்காகவும், 5-வது தளத்தில் வர்த்தக நிலையங்களும், 6-வது தளத்தில் உணவகமும், சுழலும் வர்ண விளக்குகளாலும் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. 7-வது தளத்தில் இருந்து பொது மக்களும், சுற்றுலாப் பயணிகளும் கொழும்பு நகரின் அழகை கண்டுகளிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோபுரத்தின் உயரத்துக்கு செல்ல 8 லிப்ட்களும், கோபுரத்தின் அடியில் 200 கார்கள் வரையிலும் நிறுத்துவதற்கும் இடவசதி உண்டு.

இந்த தாமரை கோபுரம், பொதுமக்களின் பார்வைக்காக கொழும்பில் இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனாவினால் திங்கள்கிழமை மாலை திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அதிபர் மைத்திரிபால சிறிசேனா கூறியதாவது:

தாமரைக் கோபுரத்தின் மூலம் இலங்கையின் தொலைத்தொடர்பு துறையில் புதியதோர் திருப்பு முனையாகவும், கட்டிடத் தொழி நுட்பத் துறையில் புதியதோர் பாய்ச்சலாகவும் அமைந்துள்ளது. இந்த கோபுரத்தில் 20 தொலைக் காட்சி அலைவரிசைகளும் 50 வானொலி அலைவரிசைகளும் தேவையான தொலைத்தொடர்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன என்றார். இந்நிகழ்ச்சியில் தாமரை கோபுரம் சிறப்பு தபால் தலையும் வெளியிடப்பட்டது.

No comments: