Friday, 12 April 2019

நுண்ணுயிர்களை அறிந்து சொன்னவர் அன்டன் வான் லீவென்ஹோக்

நம் பற்களின் இடையே இருக்கின்ற நுண்ணுயிர் கிருமிகள் நீங்குவதற்காக காலை, இரவு என இரு வேளைகளிலும் பற்களை நன்றாகத் துலக்குகின்றோம்.
அந்த நுண்ணுயிர்கள் மட்டுமல்லாது, இன்னும் ஏராளமான நுண்ணுயிர்களை அறிவியல் உலகத்திற்கு அடையாளம் காட்டியவர்தான் அறிவியல் மேதையான அன்டன் வான் லீவென்ஹோக் என்பவர். 1632-ல் ஹாலந்து நாட்டில் உள்ள டெல்பீட் நகரில் இவர் பிறந்தார். 
இளமை காலத்தில் தந்தையை இழந்ததால் பள்ளிப்படிப்பை விட்டுவிட்டு சரக்கு வண்டி ஓட்டினார். நகர மன்றத்தின் வாயிற்காவலர் வேலையில் அமர்ந்தார். அங்கு இருந்த நேரத்தில், கண்ணாடி வில்லையானது ஒரு பொருளை பல மடங்காகக் பெருக்கிக்காட்டும் என கேள்விப்பட்டார். அப்படி பெருக்கிக் காட்டும் ஒரு கண்ணாடி வில்லையானது தனக்கு வேண்டும் என்று அவர் நினைத்தார், ஆனால் அதனை விலைக்கு வாங்கும் எண்ணம் அவருக்கு வரவில்லை. பின்னர் அவர் மூக்கு கண்ணாடி செய்கின்ற தொழிலாளர் ஒருவரோடு பழகினார். அவருடன் இருந்தே கண்ணாடிவில்லை தயாரிக்கும் முறையை கற்றுக்கொண்டார். தனது அனுபவ அறிவினைக்கொண்டு சிறந்த வில்லைகளை தயாரிக்க முயற்சித்தார். கடினமான உழைப்பின் காரணமாக, தன் மனைவி மக்களை கவனிக்க மறந்தார். தன்னுடைய அருமையான நண்பர்களையும் இழந்தார். தன்னந்தனியாகவே கடுமையாக உழைத்தார். நள்ளிரவிலும்கூட கடுமையாக வியர்வை சிந்திட உழைக்கத் தொடங்கினார். இதனைக் கவனித்த அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் எல்லாம் அவரை அரைப் பைத்தியம் என்று கேலி செய்தனர். அதனைப் பற்றியெல்லாம் அவர் கவலைப்படாமல் புழுதியும், புகையும் நாற்றமும் நெடியும் உள்ள மோசமான சூழலில் உழைத்து முடிவில் மிகச்சிறந்த கண்ணாடிவில்லைகளை தயாரித்தார், அதற்கு இணையான வில்லைகள் ஐரோப்பாவிலும், உலகில் வேறு எந்த மூலையிலும் அப்போதுவரை இல்லை. தான் தயரித்த வில்லைகளை உலோகக் குழாயில் பொருத்தி மிகச்சிறந்த நுண்ணாடி கருவியை உருவாக்கினார். அதுவே முதல் நுண்ணோக்கி. தன் கையில் கிடைத்த எல்லாப் பொருட்களையும் அந்த கருவியில் வைத்து அவற்றின் பெரிதாக்கப்பட்ட தோற்றத்தைக் கண்டு மகிழ்ந்தார். திமிங்கலத்தின் தசைத்திரள், காளை மாட்டின் கண், ஆட்டின் மேல் ரோம முடிகள் முதலியவற்றை தன் கருவியால் பார்த்து வியப்படைந்தார். ஈயின் தலையையும், அதன் மூளையையும் பார்த்து ஆச்சரியமடைந்தார். பூச்சிகளின் கொடுக்கு, தலைப்பேன்களின் கால், இவைகளைப் பெரிதாகப் பார்த்து மெய் சிலிர்த்தார். ஒருநாள் தான் ஏற்கனவே சேமித்து வைத்திருந்த மழைத்தண்ணீரில் ஒரு துளியை தன் கருவியில் வைத்து சோதித்தார். அதில் நூற்றுக்கணக்கான நுண்ணுயிர்கள் இருப்பதைக் கண்டார். அவைகள் எல்லாம் துள்ளி துள்ளிப் பாய்ந்தன. தாவிக்குதித்தன. மேலே எழும்பி புரண்டு குட்டிக் கரணங்கள் போட்டன. நீந்தி விளையாடின. சில நடனமாடின. இவைகளை எல்லாம் கண்மூடாமல் பார்த்து ரசித்த அவர் தன்னைத் தேடி வந்தோரிடமும் அதைக் காட்டினார். அந்நேரம் இங்கிலாந்தில் இரண்டாம் சார்லஸ் மன்னரின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. பல அறிவியல் அறிஞர்கள் ஒன்று கூடி ஆரம்பித்த அறிவியல் சங்கமானது, அரசு கழகமாக செயல்பட்டு வந்தது. அதில் இருந்த கிராப் என்ற உறுப்பினர் ஒருவர் லீவென்ஹோக்கிடம் கண்டுபிடிப்புகளை அரசு கழகத்திற்கு அனுப்பி வைக்குமாறு கூறினார். லீவென்ஹோக் பலமுறை ஆராய்ச்சி செய்து நன்றாக தெளிவு பெற்ற பின்னர் தனது கண்டுபிடிப்புகளை அரசு கழகத்திற்கு நன்கொடையாகவே வழங்கிவிட்டார். அதன் பின்னர் கிணற்று நீர், குளத்து நீர், ஆற்று நீர் ஆகிய பல நீர்நிலைகளை ஆராய்ந்து பல தரப்பட்ட நுண்ணுயிர்கள் குறித்த உண்மைகளை எல்லாம் கண்டறிந்தனர். லீவென்ஹோக், ஒருமுறை நன்றாக ஊற வைத்த மிளகின் சிறுபகுதியை எடுத்து ஆராய்ந்தார். அதில் நம்ப முடியாத நுண்ணுயிர்கள் இருப்பதைக் கண்டார். அவைகளைப் பற்றி அரசு கழகத்திற்கு அறிவித்தார். ஆனால் பலர் அதனை கேலி செய்தனர். ஆனால் அரசு கழகமானது அவர் செய்த ஆராய்ச்சியை அறிந்து கொள்ள, மிகச்சிறந்த நுண்ணோக்கி கருவியைத் தயாரித்து தருமாறு கூறியது. அதற்கேற்றவாறு அவரும் முயன்று அரிய வகையிலான நுண்ணோக்கி ஒன்றை உருவாக்கிவிட்டார். அதன்பின்னர் அவர் தெரிவித்த செய்திகள் எல்லாம் உண்மைதான் என்று அனைவரும் ஒப்புக்கொண்டனர். அரசு கழகமானது அவரை பெருமைப்படுத்த வேண்டி, தங்கள் கழகத்தில் உறுப்பினராக சேர்த்துக்கொண்டது. அதற்குரிய சிறப்பிதழை வெள்ளிப்பேழையில் வைத்து வழங்கியது. அவரும், தான் உண்மையாக உழைக்கப்போவதாக உறுதி எடுத்து அதன்படியே செய்தும் காட்டினார். தன் பற்களின் மேல்புறத்தில் படிந்திருந்த வெள்ளையான பொருளை ஆராய்ந்து அவற்றிலும் நுண்ணுயிர்கள் இருப்பதை அறிவித்தார். மீன்களின் உடலில் அமைந்த ரத்த நாளத்தின்போக்கு, மனித உடலின் ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் தோற்றம், இனப்பெருக்க சமயத்தில் உயிர் அணுக்களின் அமைப்பு, ஒற்றைவிதை, இரட்டை விதை செடிகளின் உருவ அமைப்பு போன்றவற்றையும் நுண்ணோக்கி உதவியுடன் ஆராய்ந்தார். நுண்ணுயிர்களைப் பற்றிய பல உண்மைகளை வெளியிட்டார். எறும்பின் இனங்களைப் பற்றியும் ஆராய்ந்த இவர், நுண்ணுயிர் உலகின் முதல் ஆய்வாளராக செயல்பட்டார். மருத்துவ துறை மட்டுமல்லாது வானியல் துறை வரையிலும் பயன்படத்தக்க வகையில் பல கண்ணாடிக் கருவிகளை உருவாக்கினார். அவரது இருப்பிடம் தேடிவந்த இங்கிலாந்து நாட்டின் பேரரசியும், ரஷிய நாட்டின் பெருமைமிக்க பீட்டர் அரசரும் தங்களது பாராட்டுதலையும் காணிக்கையினையும் செலுத்தி சென்றனர்.தனது இறுதி காலத்தில் படுக்கையில்படுத்த நிலையிலும் தனது நெருங்கிய நண்பரை அழைத்து தனது ஆராய்ச்சிகள் அடங்கிய இறுதி கடிதத்தை அரசு கழகத்திற்கு அனுப்பி வைத்தார். 1723-ல் இயற்கை எய்தினார். இளைய தலைமுறையினருக்கு இவரது வரலாறு சிறந்த வாழ்க்கைப் பாடமாகும்.

No comments: