கடந்த வாரம் | சமீபத்திய நிகழ்வுகள் 30.10.2018

எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும்
பதினெட்டு சட்டப்பேரவை உறுப்பினர்களை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்தது செல்லும் என உயர் நீதிமன்றத்தின் மூன்றாவது நீதிபதி சத்திய நாராயணன் அக்டோபர் 25 அன்று தீர்ப்பு வழங்கினார். சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க இருந்த தடை நீக்கப்படுவதாகவும் நீதிபதி தெரிவித்தார். இந்த வழக்கை ஜூன் 14 அன்று விசாரித்த இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால் மூன்றாவது நீதிபதியிடம் வழக்கு ஒப்படைக்கப்பட்டது.

பட்டாசுக்குத் தடை இல்லை
நாடு முழுவதும் பட்டாசுக்குத் தடை விதிக்கக் கோரித் தொடரப்பட்ட வழக்கில், பட்டாசுகளைத் தயாரிக்க, விற்பனை செய்ய, வெடிக்கத் தடை விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் அக்டோபர் 23 அன்று தீர்ப்பளித்தது. ஆனால், ஆன்லைன் தளங்களில் பட்டாசுகளை விற்பனைசெய்ய உச்ச நீதிமன்றம் தடைவிதித்தது. அத்துடன் தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது பட்டாசு வெடிக்க நேரக் கட்டுப்பாட்டையும் விதித்துள்ளது.

சிபிஐ: தற்காலிக இயக்குநர் நியமனம்
ஊழல் புகார் தொடர்பாக சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையே நீடித்துவந்த மோதல் போக்குக் காரணமாக இருவருக்கும் கட்டாய விடுப்பு அளித்து அக்டோபர் 23 அன்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. சிபிஐ-யின் தற்காலிக இயக்குநராக நாகேஸ்வரராவ் நியமிக்கப்பட்டார். இந்தக் கட்டாய விடுப்பை எதிர்த்து அலோக் வர்மா உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், இரண்டு வாரங்களில் அவர் மீதான விசாரணையை முடிக்குமாறு மத்திய புலனாய்வு ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

நாடக ஆளுமை ந. முத்துசாமி மறைவு
தமிழ்நாட்டின் நாடக ஆளுமையும் கூத்துப்பட்டறையின் நிறுவனருமான ந. முத்துசாமி உடல்நலக் குறைவு காரணமாக அக்டோபர் 24 அன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 82. தமிழ்த் திரைத் துறையில் பல்வேறு நடிகர்களை உருவாக்கிய பெருமை இவருக்கு உண்டு. இவரது கலை பங்களிப்புகளுக்காக 2012-ம் ஆண்டு இவருக்கு பத்ம  விருது வழங்கப்பட்டது.

செயற்கை நுண்ணறிவில் 13-வது இடம்
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களில் மிகவும் மேம்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம்பெற்றிருப்பதாக பின்லாந்தைச் சேர்ந்த செயற்கை நுண்ணறிவு நிறுவனம் 'ஸைஃப்ரா' தெரிவித்திருக்கிறது. இந்த நிறுவனம் நடத்திய ஆய்வில், செயற்கை நுண்ணறிவுப் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும் சீனா இரண்டாவது இடத்திலும் இந்தியா 13-வது இடத்திலும் இருக்கின்றன.

உலகின் நீளமான கடல் பாலம்
ஹாங்காங் ஸுஹாய் இடையே கட்டப்பட்ட உலகின் நீளமான கடல் பாலத்தை சீன அதிபர் ஜி ஜின்பிங் அக்டோபர் 23 அன்று திறந்துவைத்தார். 55 கிலோமீட்டர் நீளத்தில் 4,00,000 டன் இரும்பால் தயாரிக்கப்பட்டிருக்கும் இந்தப் பாலம், பூகம்பம், சூறாவளி போன்றவற்றைத் தாங்கும்படி வடிவமைக்கப் பட்டிருக்கிறது.

பிரதமரானார் மகிந்த ராஜபக்ச
இலங்கையின் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்ச அக்டோபர் 26 அன்று பதவியேற்றார். இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனவின் கட்சி, கூட்டணியை விட்டு விலகியதால், புதிய பிரதமராக மகிந்த ராஜபக்ச பதவியேற்றார். பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கவை நீக்கிவிட்டு, பெரும்பான்மையில்லாமல் ராஜபக்சவைப் பிரதமராக ஆக்கியிருப்பது அரசியலமைப்புச் சிக்கலை உருவாக்கும் என்று இலங்கை அரசியல் ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்திருக்கின்றனர்.

கேரளாவுக்கு ரூ. 31,000 கோடி தேவை
வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்தைச் சீரமைக்க ரூ. 31 ஆயிரம் கோடி தேவை என்று அக்டோபர் 26 அன்று வெளியான ஐ.நா. அறிக்கை தெரிவிக்கிறது. இந்த அறிக்கையின்படி, கேரளாவின் குடியிருப்பு (ரூ. 5,443 கோடி), போக்குவரத்து உள்கட்டமைப்பு (ரூ. 10,046 கோடி), விவசாயம், பால் பண்ணை (ரூ. 4,498 கோடி) மற்ற உள்கட்டமைப்பு (ரூ. 2,246 கோடி) ஆகிய தேவைகளுக்கு மொத்தம் ரூ. 31,000 கோடி செலவாகும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

மக்களைத் தோற்கடித்த மோட
சசி தரூர் எழுதிய ‘Paradoxical PM’ ('முரண்பாடான பிரதமர்') புத்தக வெளியீட்டு விழாவில் அக்டோபர் 26 அன்று பேசிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், “பயத்துடன் வாழும் மக்கள், பொறுப்பற்ற முயற்சிகளால் வீழ்ச்சியடைந்து இருக்கும் பொருளாதாரம், வேலைவாய்ப்பின்மை, விவசாயிகளின் அவநவம்பிக்கை, பாதுகாப்பற்ற எல்லைகள், காஷ்மீர் பிரச்சினை, மேக் இன் இந்தியா, தூய்மை இந்தியா போன்ற திட்டங்களின் தோல்வி என இந்த இந்தியாவுக்குத்தான் பிரதமர் நரேந்திர மோடி தலைமை வகிக்கிறார்” என்று தெரிவித்திருக்கிறார்.

அமலாக்கத் துறை புதிய இயக்குநர்
அமலாக்கத் துறையின் புதிய இயக்குநராக மூன்று மாதங்களுக்குக் கூடுதல் பொறுப்பில் சஞ்சய் மிஸ்ரா அக்டோபர் 27 அன்று மத்திய அரசால் நியமிக்கப்பட்டிருக்கிறார். தற்போதைய அமலாக்க இயக்குநர் கர்னல் சிங் ஓய்வுபெற்றதால் புதிய இயக்குநராக சஞ்சய் மிஸ்ரா நியமிக்கப்பட்டிருக்கிறார்.


Comments