Monday 20 January 2020

குவாண்டம் இயற்பியல் வித்தகர்

அறிவியல் உங்கள் விருப்பப்பாடமா? இங்கே விடுகதைபோல கொடுக்கப்படும் குறிப்புகள் எந்த விஞ்ஞானியை குறிக்கிறது என்று உங்களால் கண்டுபிடிக்க முடியுமா? அவரைப் பற்றிய முக்கிய குறிப்புகளை அறிவீர்களா?

விஞ்ஞானி விடுகதை

நான் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகளில் ஒருவன்.

எனது தாய்நாடு அமெரிக்கா.

குவாண்டம் எலக்ட்ரோடைனமிக்ஸ் கண்டுபிடிப்புக்காக நான் நோபல் பரிசு பெற்றேன்.

அணுகுண்டு வெடிப்பின் மதிப்பை அளவிடும் சூத்திரத்தை வடிவமைத்தேன்.

நானோ தொழில்நுட்பத்திற்கும் அடிகோலிய பெருமைக்குரியவனாக கருதப்படுகிறேன்.

எனது கற்பித்தல் முறை என் பெயரால் சிறப்பித்து அழைக்கப்படுகிறது.

நான் யார் கண்டுபிடித்துவிட்டீர்களா?

விடை

நான்தான் ரிச்சர்டு பெய்ன்மேன்.

வாழ்க்கை குறிப்புகள்:

ரிச்சர்டு பெய்ன்மேன், 1918-ம் ஆண்டு மே 11-ந்தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பிறந்தார்.

இளமைக் காலத்தில் கணிதத்தில் நாட்டம் கொண்டவராக இருந்தார். கணிதத்தில் தேர்ந்தவராகவும் விளங்கினார். 1939-ம் ஆண்டு எம்.ஐ.டி. கல்லூரியில் இளநிலை அறிவியல் பட்டம் பெற்றார். 1942-ல் குவாண்டம் மெக்கானிக்ஸ் துறையில் முனைவர் பட்டம் பெற்றார்.

பிரின்ஸ்டன் கல்லூரியில் ஆராய்ச்சிப் பட்டம் பெற்ற பின்பு, அங்கே வேலைவாய்ப்பும் பெற்று இரண்டாம் உலகப்போர் சமயத்தில் அணுகுண்டு திட்டத்தில் முக்கியப் பங்காற்றினார்.

அணுகுண்டு வெடிப்பின் தன்மையை அளவிடும் சூத்திரத்தை ஹான்ஸ் பாத் என்பவருடன் இணைந்து உருவாக்கினார்.

கார்னெல் பல்கலைக்கழகத்தில் 1945 முதல் 1950 வரை இயற்பியல் பேராசிரியராக பணியாற்றினார். அதன்பிறகு 1959 வரை கலிபோர்னியா தொழில்நுட்ப மையத்தில் தியரிடிகல் பிசிக்ஸ் பேராசிரியராக பணியாற்றினார்.

அவர் குவாண்டம் கம்ப்யூட்டிங் துறையின் முன்னோடியாகவும், நானோ தொழில்நுட்பத்தின் முன்னோடியாகவும் கருதப்படுகிறார்.

குவாண்டம் எலக்ட்ரோடைனமிக்ஸ் கண்டுபிடிப்புக்காக 1965-ல் நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டார். 2 சக விஞ்ஞானிகளுடன் நோபல் பரிசை பகிர்ந்து கொண்டார்.

மிகச்சிக்கலான விஞ்ஞான கொள்கைகளில் ஒன்று குவாண்டம் அறிவியல். அதை மிக எளிமையாக விளக்கிய பெருமைக்குரியவர் ரிச்சர்டு பெய்ன்மேன். அவர் தனது கருத்துகளை 4 படிகளில் விளக்குகிறார்.

முதல்படி

முதலில் நீங்கள் கற்றுக்கொள்ள அல்லது கற்பிக்க விரும்பும் கருத்தின் தலைப்பு பற்றியும், அதைப்பற்றி நீங்கள் அறிந்த விஷயங்கள் அனைத்தையும் அதன் கீழே எழுதுங்கள்.

படி 2

ஒரு புதிய மாணவருக்கு கற்றுக்கொடுப்பது அல்லது வகுப்பு எடுப்பதுபோல பாசாங்கு செய்து அதை விளக்குங்கள். உங்கள் கருத்தை எளிய சொற்களால் விளக்குங்கள். உங்கள் சொந்த வார்த்தையில் சரியாக விளக்க முடியாத பகுதிகளை குறித்துக் கொள்ளுங்கள்.

படி 3

விளக்க முடியாத பகுதி, நாமும் சரியாக அறிந்துகொள்ளாத பகுதி என்பதை புரிந்து கொண்டு, அந்த இடைவெளியை நிரப்பும் புரிதலை வளர்க்க வேண்டும். அதற்கான தகவல்களை, ஆதாரங்களை திரட்டி சேகரித்து படித்து புரிந்து கொள்ள வேண்டும். இப்போது இரண்டாவது படியை எளிதாக தடையின்றி விளக்கிச் சொல்ல முடிகிறதா? என்று மீண்டும் சோதனை செய்து பார்க்க வேண்டும்.

படி 4

இப்போது உங்கள் கருத்தை இன்னும் எளிமைப்படுத்த முடியுமா? என்று யோசிக்க வேண்டும். விளக்கப்படங்களை கொடுத்து புரிதலை அதிகமாக்க முடியுமா? என்று முயற்சிக்க வேண்டும். அப்படிச் செய்தால் எந்த ஒரு கருத்தும் ஏற்கும்படியான நிலையை அடைந்துவிடும்.

இந்த கற்பித்தல் நுட்பமானது பெய்ன்மேன் நுட்பம் என்று போற்றப்படுகிறது. இதுவே ஆசிரியர், கண்டுபிடிப்பாளர், மாணவர் என எல்லோருக்கும் ஒரு புதிய கருத்தை புரிந்து கொள்ளவும், மற்றவருக்கு விளங்கச் செய்யவும் உதவும் அடிப்படை வழியென்றும் ஏற்கப்பட்டிருக்கிறது.

பெய்ன்ேமன், சிக்கலான குவாண்டம் இயற்பியல் பாடங்களையும் இவ்விதத்தில் மாணவர்களுக்கு எளிதில் புரியும்படி கற்பித்தார். அவரது கற்பித்தல் முறை உலகப்புகழ்பெற்றது. அது புத்தகமாக வெளிவந்திருக்கிறது.

“Surely You're Joking, Mr. Feynman” என்ற பெயரில் அவர் தனது சுயசரிதையை வெளியிட்டார். அறிவியல் துறையில் அவரது பங்களிப்புக்காக நோபல் பரிசு மட்டுமல்லாது ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் விருது, லாரன்ஸ் விருது ஆகியவற்றையும் பெற்றுள்ளார். 1988-ம் ஆண்டு பிப்ரவரி 15-ந ்தேதி அவர் மரணம் அடைந்தார்.

No comments: