Tuesday 20 August 2019

சமீபத்திய செய்திகள் ஆகஸ்ட் 13-17

சிபிஐ-க்குத் தன்னாட்சி அதிகாரம்
ஆகஸ்ட் 13: மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ-க்குத் தன்னாட்சி அதிகாரம் அளிக்கப்பட வேண்டும் என்ற பரிந்துரையை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தெரிவித்துள்ளார். தலைமைக் கணக்குத் தணிக்கையாளருக்கு அளிக்கப்பட்டிருக்கும் அதிகாரத்தைப் போல சிபிஐ-க்கும் அதிகாரம் வழங்க வேண்டும் என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

நிலவில் இறங்கப்போகும் சந்திரயான் 2
ஆகஸ்ட் 14: சந்திரயான் 2 விண்கலம், வெற்றிகரமாக பூமியின் சுற்றுப்பாதை யிலிருந்து வெளியேறி, நிலவை நோக்கி பயணம் செய்ய ஆரம்பித்திருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. வரும் செப்டம்பர் 7 அன்று சந்திரயான் -2, நிலவில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. ஹரிக்கோட்டாவிலிருந்து ஜூலை 22 அன்று சந்திரயான்-2 விண்ணில் செலுத்தப்பட்டது.

3 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்ட வேலூர்
ஆகஸ்ட் 15: வேலூர் மாவட்டம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் என மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளதாகத் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி அறிவித்தார். இதன்மூலம், தமிழ்நாட்டின் மாவட்டங்களின் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது. 1956, நவம்பர் 1 அன்று மாநிலமாகப் பிரிக்கப்பட்டதை நினைவுகூரும்விதமாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 1 அன்று தமிழ்நாடு நாள் கொண்டாடப்படும் என்று முதல்வர் அறிவித்தார்.

முன்னாள் கிரிக்கெட் வீரர் சந்திரசேகர் மறைவு
ஆகஸ்ட் 15: முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வி.பி. சந்திரசேகர் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 57. அவர் இந்திய அணியில் 1988-90 வரை ஏழு ஒரு நாள் ஆட்டங்களில் விளையாடியிருக்கிறார். தமிழ்நாடு அணியின் தொடக்க ஆட்டக்காரராக இருந்திருக்கிறார்.

பாதுகாப்புப் படைத் தலைவர் பதவி
ஆகஸ்ட் 15: நாட்டின் முப்படைகளையும் (ராணுவம், கடற்படை, விமானப்படை) ஒரே தலைவரே நிர்வகிக்கும்படி, பாதுகாப்புப் படைத் தலைவர் பதவியை உருவாக்கவிருப்பதாகப் பிரதமர் நரேந்திர மோடி 73-வது சுதந்திர நாள் உரையில் தெரிவித்துள்ளார். 1999-ம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரின்போது தெரிவிக்கப்பட்ட இந்தக் கருத்து தற்போது நடைமுறைப்படுத்தப்படவிருக்கிறது. தற்போதைய ராணுவ தளபதியாக இருக்கும் பிபின் ராவத், முப்படைகளுக்கான பாதுகாப்புத் தலைவராக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாறும் இந்தோனேசியத் தலைநகரம்
ஆகஸ்ட் 16: இந்தோனேசியத் தலைநகரமான ஜகார்த்தா நகரம் ஒவ்வொரு ஆண்டும் 10 அங்குல அளவுக்கு மூழ்கிவருகிறது. 2050-ம் ஆண்டுக்குள் உலகின் வேகமாக மூழ்கிவரும் நகரங்களில் ஒன்றாக இந்நகரம் கணிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் அதிபர் ஜோகோ விடோடோ, தலைநகரத்தை ஜகார்த்தாவிலிருந்து போர்னியோ தீவுக்கு மாற்றுவதாக அறிவித்திருக்கிறார்.

தீவிரமடையும் ஹாங்காங் போராட்டம்
ஆகஸ்ட் 17: குற்றவாளிகள் எனச் சந்தேகப்படுபவர்களைச் சீனாவிடம் ஒப்படைக்கும் மசோதாவை எதிர்த்து ஹாங்காங்கில் ஜூன் மாத இறுதியிலிருந்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. தற்காலிகமாக அந்த மசோதாவைக் கைவிடுவதாக ஹாங்காங் அரசு அறிவித்தது. ஆனால், முழுமை யாக இந்த மசோதாவைக் கைவிட வேண்டும் என்று கோரி போராட்டக்காரர்கள் போராடி வருகிறார்கள். தற்போது, இந்தப் போராட்டத்தில் ஆசிரியர்களும் மாணவர்களும் இணைந்திருக்கிறார்கள். 20,000-க்கும் அதிகமான ஆசிரியர்களும் மாணவர்களும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றிருக்கிறார்கள்.

No comments: